Monday, 21 November 2011

WITNESS FOR THE PROSECUTION (1957) - சஸ்பென்ஸ் சினிமா



லெனார்ட் வோல் (டைரோன் பவர்), எமிலி ஃப்ரென்ச் (நார்மா வார்டென்) என்ற வயதான பணக்காரப் பெண்மணியைக் கொலை செய்துவிட்டான் என போலிஸ் அவனைக் கைது செய்கிறது. இந்த வழக்கு லண்டனின் பிரபல வழக்கறிஞர் சர் வில்ஃபிரிட் ராபர்ட்ஸிடம் (சார்லஸ் லாஃப்டன்) வருகிறது. அவர் வழக்கை எடுத்து நடத்த சம்மதிக்கிறார். கோர்ட்டில் லெனார்ட், தனக்கும் கொலையான எமிலி ஃபிரன்ச்க்கும் எப்படி பழக்கம் உண்டானது என விவரிக்கிறான். லெனார்ட் பல புதிய வீட்டு உபயோக எலெக்ட்ரானிக் பொருட்கள் செய்வதில் நிபுணன். அப்படி ஒரு பொருளான முட்டை கடையும் சிறு கருவியை எமிலியிடம் காட்டும் பொழுது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. மற்றபடி அவரைக் கொலை செய்யும் அளவிற்கு எந்த காரணமும் இல்லை என்கிறான். ஆனால் எதிர்த்தரப்போ... எமிலி கொலை செய்யப்படுவதற்க்கு ஒரு வாரம் முன்பு எழுதிய தனது உயிலில் லெனார்டிர்க்கு எண்பதாயிரம் பவுண்டுகள் தர வேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தாள்... அந்தப் பணம் தனக்கு விரைவில் கிடைக்க வேண்டுமென்பதற்காக அவன் அவளைக் கொலை செய்து விட்டான் எனக் கூறுகிறது. எல்லா சாட்சியங்களும் லெனார்டிர்க்கு எதிராக இருக்கிறது. ஆனால் வக்கீல் வில்ஃபிரிட் தன் திறமையான வாதங்களால் அவற்றை உடைக்கிறார்.

இந்நிலையில் எதிர்பாரதவிதமாக, லெனார்டின் மனைவி கிறிஸ்டின் ஹெல்ம் (மார்லின் டைட்ரிச்), கொலை நடந்த அன்று இரவு வீட்டிற்கு வந்த லெனார்ட் பதற்றதுடன் இருந்ததாகவும் தான் எமிலியைக் கொலை செய்துவிட்டதாகத் தன்னிடம் கூறியதாகவும் கோர்ட்டில் சாட்சி அளிக்கிறாள். இதனால் லெனார்ட் மற்றும் வக்கீல் விஃபிரிட் உட்பட அனைவரும் அதிர்ச்சியாகிறார்கள். கிட்டத்தட்ட வழ்க்குத் தோற்றுவிடும் நிலையிலிருக்கிறது. இனி தீர்ப்பு வழங்க வேண்டியதுதான் பாக்கி. அன்று இரவு வக்கீலுக்கு ஒரு மர்ம ஃபோன் வருகிறது. எதிர்முனையில் பேசிய பெண், தன்னிடம் லெனார்டின் மனைவி கிரிஸ்டின் தன் கள்ளக் காதலனுக்கு எழுதிய கடிதங்கள் இருப்பதாகவும் நூறு பவுண்டுகள் கொடுத்தால் அவை எல்லாவற்றையும் ஒப்படைப்பதாகவும் கூறுகிறாள். வில்ஃபிரட்ஸ் நாற்பது பவுண்டுகள் விலை பேசி அவளிடம் கடிதங்களை வாங்குகிறார். அந்தக் கடிதத்தில் லெனார்டிற்கு எதிராக சாட்சி சொன்னால் அவன் சிறையிலடைக்கப்படுவான்... பிறகு நாம் ஜாலியாக இருக்கலாம் என எழுதியிருந்தாள் கிறிஸ்டின்.

மறுநாள் கோர்ட்டில்... விஃபிரட்ஸ், லெனார்டின் மனைவியிடம் கடிதங்களைக் காட்டி அவையெல்லாம் அவள் எழுதியதுதான் என உறுதி செய்கிறார். அவள் பொய் சாட்சியம் கூறியதாக நிரூபணமானதால்... லெனார்ட் விடுதலையாகிறான். பிறகுதான் இருக்கிறது அந்த செம ட்விஸ்ட்! அது உங்கள் பார்வைக்கு...

படத்துளிகள்...

பிரபல துப்பறியும் நாவல் எழுத்தாளரான அகதா கிறிஸ்டியின் சிறுகதையை சிற்சில மாற்றங்களுடன் படமாக்கிருக்கிறார் இயக்குனர் பில்லி வைல்டர். தொடர் ட்விஸ்ட்களாலும் திறமையான கோர்ட் வாதங்களாலும் நம்மை இறுதிவரைக் கட்டிப் போடுகிறார்.

படத்தின் உண்மையான கதாநாயகன் வயதான பருமனான வக்கீலாக வரும் சார்லஸ் லாஃப்டன் தான் என்றால் அது மிகையில்லை. அவருடைய கட்டைக் குரல் மிகப்பெரிய பலம்.

நார்மா வார்டெனும் அவர் மனைவியாக நடித்திருக்கும் மார்லின் டைட்ரிச்சும் கவனம் ஈர்க்கிறார்கள்.

முக்கியாமாக... வக்கீலின் உடல்நிலையை கவனித்துக் கொள்ளும் செவிலியாக வரும் எல்சா லான்செஸ்டருக்கு 1958ம் ஆண்டிற்கான சிறந்த துணை நடிகைக்கான கோல்டன் குளோப் விருது கிடைத்திருக்கிறது. இதிலிருந்தே அவரது நடிப்பின் சிறப்பை நாம் உணரலாம்.

கோர்ட் காட்சிகளின் கேமராக் கோணங்களில் கவனிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் ரஸ்ஸல் ஹார்லன்.

க்ளைமாக்ஸ்
1957ல் வெளிவந்த இந்தப்படம் பெரும்பாலும் வசனங்களிலேயே நகருவதால் சப்-டைட்டிலோடு பார்ப்பது உத்தமம். தவறாமல் பார்க்கவும்!

3 comments:

பால கணேஷ் said...

ஹய்யோ... ஹய்யோ... இந்தப் படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு டிவிடியைத் தேடி அலைந்தும் கிடைக்காமல் ஏமாற்றமடைந்த அகதா கிறிஸ்டியின் விசிறி நான். அழகாக வர்ணித்து ஆவலை கிளறி விட்டு விட்டீர்களே அழகு சார்... மதுரையில் கிடைக்கிறதா? எங்கு? (இந்த வார இறுதியில் மதுரை வருகிறேன்...) சொன்னால் புண்ணியமாப் போகும் உமக்கு...

மதுரை அழகு said...

கணேஷ் சார்! இது ரொம்பப் பழைய படம் என்பதால் டிவிடி கிடைக்காது. டொரன்ட்டில் தேடிப் பார்க்கவும். நிச்சயமாகக் கிடைக்கும்...!

ராஜ் said...

ரொம்ப அருமையான கதையை விவரித்து உள்ளீர்கள்....
படத்தை பார்க்க வில்லை, கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது...
இன்னும் இதே போல் நல்ல படங்களை அறிமுகப்படுதுங்கள்..

Post a Comment