Wednesday, 10 May 2017

தாழப் பறக்காத பரத்தையர் கொடி


பிரபஞ்சன் 2008-2009 ஆண்டுகளில் எழுதிய 16 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.  குமுதம் வார இதழில் பணியாற்றியது, சங்க இலக்கியம், புதுச்சேரி (பாண்டிச்சேரி என்பது தவறான வழக்கு என்கிறார்) நினைவுகள், நூல் அறிமுகங்கள், மேன்ஷன் வாழ்க்கை, மதுப்பழக்கம், உலகத் தமிழ் மாநாடு கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தனது தெள்ளிய நடையில் விவரித்துள்ளார்.

குமுதம் அலுவலகத்தின் அன்றாடப் பணிகள் ஒரு குருகுலம் போல் பகவத் கீதை, திருக்குறள் என தொடங்கி, வழிபாடு முடிந்த பின்னர்... இதழில் இடம்பெறப் போகும் சினிமா நடிகைகளின் கவர்ச்சிப் படங்களைத் தேர்வு செய்வது என்ற முரண்பாட்டை நகைச்சுவை கலந்து பதிவு செய்துள்ளார்.

மேன்ஷன் அறைகள், சவப்பெட்டி போன்றவை“ என்ற ஒற்றை வரியில் மேன்ஷன்களின் சித்திரத்தை சுரீரென்று மனதில் பதிய வைக்கிறார்.  சில ஆண்டுகளுக்கு முன்பு திருவல்லிக்கேணியில் ஒரு மேன்ஷனில் ஒரு வார காலம் தங்கிய அனுபவம் உள்ளதால், அந்த அவஸ்தை எனக்கு நன்றாகப் புரிந்தது.

பிரபஞ்சனின் தங்கை மற்றும் தம்பி ஆகியோருடனான சிறு வயது விளையாட்டுகள்... ஒரு கோடை விடுமுறையில் அவர்களிருவரும் அம்மை தாக்கி இறந்து போனது என மனதை உருக்கும் “பானு உன் புத்தகப் பை அண்ணனிடம் இருக்கிறது என்ற கட்டுரை நெகிழ்ச்சியானது.

புதுச்சேரியின் மதுப்பழக்கம் பற்றிய கட்டுரையில், மதுவைக்  குடிப்பதற்கும் அதை அருந்துவதற்கும் உள்ள நுண்ணிய வேறுபாட்டை பிரெஞ்சுப் பண்பாட்டின் பின்னணியில் சுவையாக விளக்குகிறார்.  ஒரு முறை மராத்தியர்கள் ரகோஜி போஸ்லே தலைமையில் புதுச்சேரியை முற்றுகையிட்டு யுத்தத்திற்கு அழைப்பு விடுக்க, அப்போது புதுச்சேரியின் கவர்னராக இருந்த துய்மா என்பவன், மராத்தியத் தூதுவனிடம் “யுத்தத்திற்கு தயார்! என பதில் கடிதம் கொடுத்து, கூடவே பத்து ஐரோப்பிய மது பாட்டில்களையும் வைத்து அனுப்பி வைக்கிறான்.  அந்த மதுவை ரகோஜி தனது மனைவியுடன் பகிர, அதன் சுவையில் மயங்கிய அவள் அனைத்து பாட்டில்களையும் குடித்து முடித்துவிட்டு, இன்னும் வேண்டும் என்கிறாள்.  ரகோஜி, பேரழகியான தனது மனைவியின் ஆசையை நிறைவேற்ற, எதிரியான துய்மாவிடம் யுத்தத்தை மறந்து, முப்பது பாட்டில்களைக் கேட்டுப் பெற்றுக் கொண்டான்.  பிறகென்ன... யுத்தம் கைவிடப்பட்டது.  பிரபஞ்சன் இதை விவரித்துவிட்டு இறுதியில் எழுதுகிறார்... “யுத்தங்களை மனிதர்கள் உருவாக்குகிறார்கள்.  பாட்டில்கள் தீர்த்து வைக்கின்றன”.  இதுதான் பிரபஞ்சன் டிரேட்மார்க்.  புதுச்சேரியின் கள்ளுக்கடைகள், பார்கள் சுத்தமாகப் பராமரிக்கப்படுகின்றன...  தமிழ்நாடு போல கண்றாவியாக இருப்பதில்லை என்கிறார்.  ஆனால், தற்போது புதுச்சேரியும் தமிழ்நாட்டைப் போல் குடியால் சீரழிகிறது என நேர்மையாகக் கட்டுரையை முடிக்கிறார்.  இக்கட்டுரையை வாசிக்கும்பொழுது ஒரு தரமான ஒயினை மிடறு மிடறாக அனுபவித்துக் குடிப்பதைப் போன்ற மகிழ்ச்சியைத் தருவதுதான் பிரபஞ்சனின் எழுத்தாற்றல்.

இந்தப் புத்தகத்தில் அதிர்ச்சி தரும் கட்டுரை, பாவை பப்ளிகேஷன் என்ற பதிப்பகம் பிரபஞ்சனின் அனுமதியில்லாமல் அவரது நாடகம் உட்பட ஐந்து படைப்பாளிகளின் நாடகங்களை அவர்களது அனுமதியில்லாமல் ஒரே தொகுப்பாக வெளியிட்டு விட்டது.  அது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பதிப்பகம்!  அப்பதிப்பகத்தின் கௌரவ தலைவரின் தலைமையில் ராயல்டிக்காகக் கிட்டத்தட்ட கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது... பிரபஞ்சன் அந்தத் தலைவரை நோக்கிக் கடுமையாகப் பேசுகிறார்.  ஆனால், அவரோ பதிப்பகத்தாருக்கு சாதகமாகப் பேசுகிறார்.  சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பின்பு, விருப்பமே இல்லாமல் ராயல்டி வழங்கப்படுகிறது.  அந்தத் தலைவர் வேறு யாருமல்ல... நேர்மையின் உருவமாகக் கருதப்படும் நல்லகண்ணு! அவரின் பிம்பத்தில் விழுந்த மிகப்பெரிய ஓட்டை!!

இந்நூலின் தலைப்பைக் கொண்ட பரத்தையரின் வாழ்வை சமூகப் பார்வையோடு அலசும் ஆழமான கட்டுரை இறுதியாக இடம்பெறுகிறது.  “காற்றின் திசைகளில் பரத்தையர் ஏற்றிய கொடி எப்போதும் தாழப் பறப்பதில்லை என்று அக்கட்டுரையை முடிகிறது.  பிரபஞ்சன் எழுத்துலகிற்கு வந்து 55 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் இந்நேரத்தில், தமிழ் இலக்கிய வரலாற்றில் அவர் இயற்றிய படைப்புகளும் ஒருபோதும் தாழப் பறப்பதில்லை.  சிறந்த கட்டுரைத் தொகுப்பு!

வெளியீடு :- உயிர்மை
பக்கங்கள் :- 143
விலை    :- ரூ.85/-

Sunday, 23 April 2017

அமெரிக்காவின் மறுபக்கம்


ஐ.டி என்றில்லை... பெரும்பாலான தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்களின் கனவு தேசம் எதுவென்றால்...? அது அமெரிக்காதான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.   கவர்ச்சி நிறைந்த அந்த நாட்டின் நிறை குறைகளை அலசும் புத்தகம்தான் நாகேஸ்வரி அண்ணாமலை எழுதியுள்ள அமெரிக்காவின் மறுபக்கம்.  இந்நூலை இவர் தமிழ்நாட்டிலிருந்து எழுதியிருந்தால் அதன் நம்பகத்தன்மை ஆட்டம் கண்டிருக்கும்.  ஆனால் அவர் அமெரிக்காவில் ஐந்து வருடங்கள் தன் மகள் வீட்டில் வசித்து பல்வேறு புத்தகங்களை ஆய்வு செய்தும் நேரில் களப்பணியாற்றியும் எழுதியுள்ளதால் தகவல்கள் பெரும்பாலும் உண்மையாகவே இருக்க வாய்ப்புள்ளது.

Friday, 21 April 2017

சோலை எனும் வாழிடம்தமிழில் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் எழுத்துகளின் முன்னோடியான தியடோர் பாஸ்கரன் பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கட்டுரைகள் மற்றும் அவரது ஒரு நேர்காணல் ஆகியவற்றின் தொகுப்பு “சோலை எனும் வாழிடம்என்ற புத்தகமாக வந்துள்ளது.

Monday, 13 March 2017

உப்பு வேலி


இந்திய வரலாற்றில் மறக்கப்பட்ட மாபெரும் சுங்கப் புதர்வேலியின் ஒரு சிறிய பகுதியைக் கிட்டத்தட்ட 120 ஆண்டுகளுக்குப் பிறகு தேடிக் கண்டுபிடித்த ராய் மாக்ஸம் என்ற வெள்ளைக்காரரின் பயணம் தான் உப்பு வேலி என்ற இந்தப் புத்தகம்.  ராய் மாக்ஸம் ஆங்கிலத்தில் எழுதிய The Great Hedge of India என்ற புத்தகத்தை சிறில் அலெக்ஸ் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

Thursday, 2 March 2017

பின்நகர்ந்த காலம்


வாசிப்பில் ஆர்வமுள்ள எல்லோரையும் போல பலரின் பரிந்துரையில் கடல்புரத்தில் நாவலையும் எஸ்தர் சிறுகதையையும் வாசித்த பின்பு தான் வண்ணநிலவன் எனக்கு அறிமுகமானார்.  1970 முதல் 1980 வரை அவருடைய வாழ்க்கை அனுபவங்களை பின்நகர்ந்த காலம் என்ற இந்ந நூலில் விவரித்துள்ளார்.

Sunday, 26 February 2017

கடைசிக் கோடு


அரசுப் பணியின் பொருட்டு, நில அளவைப் பயிற்சிக்காக தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு தமிழ்நாடு நில அளவைப் பயிற்சி நிலையத்தில் கடந்த 2015-ம் ஆண்டு 35 நாட்கள் பயிற்சி தரப்பட்டது.  அங்கு பாடம் நடத்திய ஆசிரியர்களில் திரு.சந்திரசேகர் என்ற ஓய்வு பெற்ற நில அளவை ஆய்வாளரைத் தவிர மற்ற அனைவரும் கடனே! என பயிற்சி வகுப்புகளை நடத்தினர்.  திரு.சந்திரசேகர் இந்தியாவை வெள்ளையர்கள் எவ்வாறு நில அளவை செய்தனர் என்பதை சுருக்கமாகக் கூறி விட்டு, பிரதான பாடத்திற்குள் நுழைந்தார்.  அப்பொழுது இந்தியாவை முதன்முதலில் நில அளவை செய்தவர் வில்லியம் லாம்டன் என்ற பன்முகத் திறமை கொண்டவர் என்று சொன்னார்.  அந்த “பன்முகத் திறமை“ என்ற வார்த்தை தந்த ஆர்வத்தில் இந்திய நில அளவை தொடர்பாக தமிழில் ஏதேனும் புத்தகங்கள் இருக்கிறதா என்று தேடியபொழுது கிடைத்த புத்தகம் தான் ரமணன் எழுதியுள்ள இந்த “கடைசிக் கோடு.

Sunday, 19 February 2017

ஆஷ் அடிச்சுவட்டில்தமிழின் தவிர்க்கமுடியாத வரலாற்றாய்வாளர்களில் மிக முக்கியமானவரான ஆ.இரா. வேங்கடாசலபதி, 13 ஆளுமைகளைப்பற்றி பல்வேறு கால கட்டங்களில் எழுதித் தொகுத்து வெளிவந்திருக்கும் புத்தகம் “ஆஷ் அடிச்சுவட்டில்”.  இதில் ஆஷ், எல்லிஸ், ஜி.யு. போப் மற்றும் எரிக் ஹாப்ஸ்பாம் தவிர மீதி அனைவரும் நம்மவர்கள்.  இந்நூலில் உள்ள ஜி.யு. போப் தொடர்பான கட்டுரையின் தலைப்பு “தமிழ் மாணவர்! என்று வியப்புக்குறியுடன் தொடங்குவதிலிருந்து நமக்கும் வியப்பு தொற்றிக் கொள்கிறது.  நான் இறந்த பிறகு, எனது கல்லறையில் “நான் ஒரு தமிழ் மாணவர்” என்று பொறிக்கப்பட வேண்டும் என ஜி.யு. போப் கூறியதாக ஒரு செய்தி நீண்ட காலமாக உலவி நிலைபெற்றுவிட்டது.  உண்மை என்னவெனில், லண்டனில் உள்ள ஜி.யு. போப்பின் கல்லறையில் அப்படிப்பட்ட வாசகம் ஏதும் பொறிக்கப்படவில்லை என்பதை நேரில் சென்று பார்த்ததுடன் அதன் நிழற்பட நகலையும் புத்தகத்தில் இடம்பெற செய்துள்ளார் சலபதி.  லண்டன் செல்லும் தமிழன்பர்கள் எவர் வேண்டுமானாலும் போப்பின் கல்லறையை நிழற்படம் எடுத்து இதை நிறுவலாம்.  ஆனால் சலபதி வித்தியாசப்படுவது எதிலென்றால், “நான் ஒரு தமிழ் மாணவர்என்ற சொற்றொடர் எவ்வாறு நிலைபெற்றது என்பதைத் தேடி கண்டடைந்ததில் தான் உள்ளது.  தமிழின் நீண்ட கால நம்பிக்கையைத் தகர்த்த முக்கியமான கட்டுரை.