Thursday 19 April 2018

எழுத்தே வாழ்க்கை



எழுத்தை மட்டுமே நம்பி ஒருவர் தமிழ்நாட்டில் வாழ முடியும் என்பதற்கு நம்முன் உள்ள மிகச் சில எழுத்தாளர்களில் எஸ். ராமகிருஷ்ணனும் ஒருவர்.  அவர் பல்வேறு காலகட்டஙகளில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து எழுத்தே வாழ்க்கை என்ற இந்நூல் வெளிவந்துள்ளது.  இதில் அவரது எழுத்து மற்றும் பதிப்பு அனுபவங்களை சிறிதளவும், பயண அனுபவங்களை அதிகளவிலும் தொகுக்கப்பட்டுள்ளது.  பயணக் கட்டுரைகள் வறட்சியாக இல்லாமல் இலக்கியம், வரலாறு, சினிமா ஆகியவற்றைக் கலந்து சுவையாக எழுதியுள்ளார்.  இவை போக சினிமாத் துறை அனுபவங்கள்... அதுவும் இளையராஜா இசையில் ஒரு பாட்டு எழுதியுள்ள அனுபவம் அருமை!

சிறு பிராயத்திலேயே புத்தகங்களினூடே வளர்ந்ததால் தீராத புத்தக வெறியனாக... அவற்றுடனான தனது பயணங்களை  புத்தகங்களும் நானும் மற்றும் வாழ்வின் உன்னதங்கள் என்ற இரண்டு கட்டுரைகளில் சுவாரஸ்யமாக பதிவு செய்துள்ளார்.  என்னடா...! ஒரு மனுஷன் இந்த சமூகம் கற்பிக்கும் எவ்வித வேலைக்கும் செல்லாமல் புத்தகங்கள், எழுத்து, சினிமா என வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறாரே...!! என எஸ்.ராவின் வாழ்க்கை நம்மைப் பொறாமைப்படுத்தும்.  ஆனால், அதற்குப் பின்னால் உள்ள வலிகளை ஒரு சில கட்டுரைகளில் எழுதியிருக்கிறார்.  குறிப்பாக அவரது காதல் துணைவியார் அளித்த ஆதரவு... லட்சத்தில் ஒரு பெண்மணிதான் இது போன்று இருக்க முடியும்.  ஆசிர்வதிக்கப்பட்டவர் எஸ்.ரா!

இவரது அமெரிக்க மற்றும் ஜப்பான் பயணக் கட்டுரைகள் விசா எடுக்காமலேயே நம்மை நயாகராவின் சாரலில் நனைத்தும் தோக்கியோவின் பனியில் உறைய வைக்கவும் செய்கின்றன.  அதிலும் அமெரிக்காவில் மார்க் ட்வைனின் வீட்டிற்குச் சென்றது, ஜப்பானில் ஹிரோஷிமாவிற்கு சென்றது ஆகியவை அற்புதமாக எழுதப்பட்டுள்ளன.

இதில் நினைவுகள் கசியும் கிணறு, கூட்ஸ் ரயிலில் ஒரு பயணம் ஆகிய கட்டுரைகள் நம் பால்ய காலத்தைக் கண் முன் நிறுத்துகின்றன.  எனது பார்வையில் இத்தொகுப்பின் முத்தாய்ப்பான உலகிற்கு உப்பாக இருங்கள் என்ற கட்டுரைக்காகவே இந்நூலை வாங்கலாம்.  அருமையான வாசிப்பு அனுபவம்!  Proof Reading-ல் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்!!

பக்கங்கள் 176
விலை   - ரூ.175/-
வெளியீடு தேசாந்திரி பதிப்பகம்.

Sunday 15 April 2018

தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள்

கடந்த 2014-2017 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவை விட்டு சுமார் 23,000 கோடீஸ்வரர்கள் வெளியேறி, வளர்ந்த நாடுகளில் குடியேறியுள்ளதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.  அவர்கள் விபரமில்லாமல் வெளியேறவில்லை!  இந்தியாவில் பெருகும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம், அதற்கு நேர்மாறாக அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை... இவை உண்டாக்கும் குற்றங்கள் என ஒருபுறமும் சீரழியும் சுற்றுச்சூழல், அதல பாதாளத்திற்குச் சென்ற நிலத்தடி நீர் என மறுபுறமும் இணைந்து, இந்தியா மனிதர்கள் நிம்மதியாக வாழ்வதற்குத் தகுதியில்லாத நாடாக அதிவேகமாக மாறி வருகிறது.  அதனால்தான் விபரமறிந்த பணக்காரர்கள் சத்தமில்லாமல் வெளியேறி வருகின்றனர்.  இந்நிலையில் இயற்கையைக் காப்பாற்றுவதில்தான் அனைத்தும் அடங்கியுள்ளது என்பதை உரக்க வலியுறுத்தி, தோழர்கள் சண்முகானந்தம் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் எழுதி வெளியிட்டிருக்கும் தமிழகத்தின் பறவைக் காப்பிடங்கள் என்ற நூல் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்நூல் பறவைக்காப்பிடங்கள் எங்கெங்கு உள்ளன... அங்குள்ள  முக்கியமானவைகள் எவை என்பதைப் பாடப்புத்தகங்கள் போல் சுருக்கமாகச் சொல்லாமல் அவற்றின் பெயருக்கான வேர்ச்சொற்கள் தொடங்கி, அங்கு எவ்வாறு செல்வது, வலசை வரும் முக்கியப் பறவைகள், அவையிடும் முட்டைகள், கூடுகளின் அமைப்பு, காப்பிடங்கள் எதிர்நோக்கியுள்ள சிக்கல்கள், அவற்றிற்கான தீர்வுகள் என  முழுமையான விபரங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளது.  இடையிடையே வரும் சங்க இலக்கியப் பாடல்களின் மேற்கோள்கள், ஆதித் தமிழர்களின் அறிவை மெச்சும் அதே வேளையில் நமது வாசிப்பு இன்பத்தை அதிகரிக்கின்றன என்பது மிகையல்ல!

பறவைகளின் பரிணாம வளர்ச்சி, உடற்கூறியல், பெயர் வகைப்பாட்டியல், நூலின் இடையே வரும் பெட்டிச் செய்திகள் போன்றவை வாசகர்களுக்கு சலிப்பூட்டும் வகையில் இல்லாமல்  எளிமையாகவும் அதே நேரத்தில் சுவையாகவும் எழுதப்பட்டுள்ளன.  பறவைகளின் இறகுகள் மற்றும் முட்டைகளின் எண்ணிக்கை, பறக்கும் போது இறக்கைகள்  அடிக்கும் வீதம், வலசை முறைகள், விருப்பமான உணவுகள், இரை உண்ணும் முறைகள், ஆயுட்காலம் என முடிந்தவரையிலான விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. 

நூலில் கணிசமான எழுத்து மற்றும் சந்திப் பிழைகளும் சிற்சில தவறுகளும் தென்பட்டாலும் அவை, கம்ப ராமாயணத்தை எழுதியது சேக்கிழார்? என்ற அளவிற்குத் தீவிரமானதாக இல்லாததால், இந்நூலின் ஆக்கச் சிறப்பு கருதி அவற்றைப் பொருட்படுத்த வேண்டியதில்லை.  இதில் இடம்பெற்றிருக்கும் நிழற்படங்களைப் பற்றி மட்டுமே தனிக் கட்டுரை எழுதும் அளவிற்கு, மேலை நாட்டுப் புத்தகங்களுக்கு இணையாகக்  கண்கவர் வண்ணப் படங்கள் பொருத்தமான பகுதிகளில் சொருகி வைக்கப்பட்டுள்ளன.  வழுவழுப்பான தாளில் புத்தகம் முழுவதும் வண்ணங்களில் உறுதியான கட்டமைப்புடன் வெளியிட்டிருக்கும் எதிர் வெளியீடு பதிப்பகத்தாரையும், பல்வேறு நூல்களிலிருந்தும் களப்பணிகளிலிருந்தும் தரவுகளைத் திரட்டி தங்களது அதிகபட்ச உழைப்பைக் கொடுத்து இந்நூலை உருவாக்கியுள்ள தோழர்கள் சண்முகானந்தம் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.  பசுமை இலக்கியத்தில் ஒரு முத்திரைப் படைப்பு!

பறவை நோக்குதல் வழியாக சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது எவ்வாறு என்ற புரிதலில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சும்  இந்நூலை, சதா சர்வகாலமும் தொடுதிரை அலைபேசிகளைத் தங்கள் விரல் நோகத் தோய்த்து, அது மட்டுமே உலகம் என நம்பும் இளையதலைமுறையினர் படித்து, அதை முடிந்தவரை மற்றவருக்குப் பரப்ப முயற்சிக்க வேண்டும்.  அது ஒன்று மட்டுமே... எஞ்சியுள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இந்நூலாசிரியர்களுக்கும் கிடைக்கும் உண்மையான வெகுமதியாகும்.