Wednesday 16 November 2011

KUNDUN (1997) - அமைதியான வரலாற்று சினிமா


1933ல் திபெத்தின் மதகுருவான 13வது தலாய் லாமா இறக்கிறார். அதன் பிறகு நான்கு வருடங்களுக்குப் பிறகு திபெத்தின் தொலை தூரக் கிராமத்திலுள்ள ஒரு இரண்டு வயது சிறுவனை 14வது தலாய் லாமாவாக அந்நாட்டின் அரசன் கண்டறிகிறான்.  அச்சிறுவனுக்குப் புத்த மதச் சடங்குகளின்படி பதவியேற்பு செய்து வைக்கிறார்கள். புத்தரின் போதனைகளும் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.  புத்த துறவிகள் திபெத்தில் இனி மன்னர் ஆட்சி வேண்டாமென்று முடிவெடுக்கிறார்கள். ஆட்சியில் இருக்கும் மன்னன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு அங்கேயே இறந்தும் போகிறான்.  இனி திபெத்தைப் பொறுத்தவரை தலாய்லாமாதான் தலைவர் என முடிவாகிறது.

இப்படியொரு அமைதியான சூழலில், ஒரு பெரும் சிக்கல் சீனா வடிவத்தில் வருகிறது. சீனா, திபெத்தைச் சொந்தம் கொண்டாடுகிறது. எவ்வித முன்னறிவிப்புமின்றி சீனப் படைகள், புத்த துறவிகளையும் பெண்களையும் கொல்கிறார்கள்...  உச்சகட்டமாக பிள்ளைகள் கையில் துப்பாக்கியைக் கொடுத்துத் தங்கள் பெற்றோரையே சுட்டுக் கொல்ல வைக்கிறார்கள்.  தலாய் லாமா அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பிற நாடுகளின் உதவியை நாடுகிறார்.  இது நடக்கும் காலம் 1950 என்பதால் எல்லா நாடுகளும் இரண்டாம் உலகப் போரிலிருந்து மீண்டு தங்களை மறு நிர்மாணம் செய்வதில் தீவிரமாய் இருக்கின்றன.  எனவே தலாய் லாமாவின் கோரிக்கையை யாரும் பொருட்படுத்தவில்லை.

சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என்ற பாணியில் தலாய் லாமா சீன அதிபர் மாவோவைச் சந்திக்கிறார்.  மாவோ சில நிபந்தனைகளை ஏற்குமாறு லாமாவை வற்புறுத்துகிறார்.  அரைமனதாக, லாமா சிலவற்றை ஏற்கிறார். ஆனால் அதன் பிறகும் சீனாவின் அக்கிரமங்கள் திபெத்தில் தொடர்கின்றன. இந்நிலையில் ஒரு நாள், சீன அதிகாரியொருவர் தலாய் லாமாவச் சந்தித்து சீன விவசாயிகள் 40000 பேரை திபெத்தில் குடியமர்த்த முடிவு செய்திருப்பதாகக் கூறுகிறார். இதனை லாமா ஏற்க மறுக்கிறார். இதனால் கோபமுற்ற சீனா திபெத்திற்க்குத் தனது படைகளை அனுப்பத் தயாராகிறது.

தலாய் லாமாவின் ஆலோசகர்கள் அவர் உயிருக்கு சீனவால் ஆபத்து நேரலாம்... எனவே இந்தியாவிற்க்குத் தப்பித்துப் போய் விடுமாறு யோசனை கூறுகிறார்கள். தலாய் லாமா தப்பித்தாரா...? இல்லையா...? மீதி உங்கள் பார்வைக்கு.

படத்துளிகள்...
தலாய் லாமாவாக நடித்திருக்கும் டென்சின் துதோப் சரோங்கின் அமைதியான நடிப்பால் நிஜ தாலாய் லாமாவை நம் முன் கொண்டு வருகிறார்.

படத்தின் உண்மையான கதாநாயகன் ஒளிப்பதிவாளர் ரோஜர் டெகின்சும் இசையமைப்பாளர் ஃபிலிப் கிலாசும் தான். பின்னியெடுத்திருக்கிறார்கள்.

திபெத்தின் பனி மலையுச்சிகளும் புத்த விகாரங்களும் படமாக்கப்பட்டிருக்கும் விதம் அசத்தலோ அசத்தல்.

பின்னணி இசை... குறிப்பாக இறுதியில் தலாய் லாமா தப்பிக்கும் காட்சியில் அந்த எட்டு நிமிடங்கள் ஒலிக்கும் இசை இருக்கிறதே... ம்கூம்...! அற்புதம்!

சீனாவின் அத்துமீறலை அமைதியான மீன் தொட்டியில் சிவப்புச் சாயம் கலக்கப்படுவதான குறியீடு காட்சியிலும் தலாய் லாமா டெலெஸ்கோப்பில் பார்க்கும் காட்சியிலும் இயக்குனர் மார்டின் ஸ்கோர்ஸ் உண்மையிலேயே நம் மனதில் ஸ்கோர் செய்கிறார்.

முக்கியமாக... படத்தின் கலை இயக்குனரும் காஸ்ட்யூம் டிசைனரும் இரண்டாவது கதாநாயர்கள்.

அடிக்கடி வரும் சாமியாடி காட்சிகளும்... மதச் சடங்குகளும் சற்று போரடிக்கின்றன.

கிளைமாக்ஸ்
1997ல் வெளிவந்த இந்தப்படம் ஆஸ்கார் மற்றும் கோல்டன் குளோப் போன்ற முக்கியமான விருதுகளுக்குப் பரிந்துரைக்கைப்பட்டுள்ளது. எனினும் அவ்விருதுகள் கிடைக்காதபட்சத்திலும் நம்மூர் ஃபிலிம் ஃபேர் பொல அமெரிக்காவின் பல முன்னணி விருதுகளைப் பெற்றுள்ளது. ஒளிப்பதிவு மற்றும் இசை போன்றவைகளுக்காக எதற்க்கும் பார்த்து வையுங்கள்.

No comments:

Post a Comment