Thursday 19 April 2018

எழுத்தே வாழ்க்கை



எழுத்தை மட்டுமே நம்பி ஒருவர் தமிழ்நாட்டில் வாழ முடியும் என்பதற்கு நம்முன் உள்ள மிகச் சில எழுத்தாளர்களில் எஸ். ராமகிருஷ்ணனும் ஒருவர்.  அவர் பல்வேறு காலகட்டஙகளில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து எழுத்தே வாழ்க்கை என்ற இந்நூல் வெளிவந்துள்ளது.  இதில் அவரது எழுத்து மற்றும் பதிப்பு அனுபவங்களை சிறிதளவும், பயண அனுபவங்களை அதிகளவிலும் தொகுக்கப்பட்டுள்ளது.  பயணக் கட்டுரைகள் வறட்சியாக இல்லாமல் இலக்கியம், வரலாறு, சினிமா ஆகியவற்றைக் கலந்து சுவையாக எழுதியுள்ளார்.  இவை போக சினிமாத் துறை அனுபவங்கள்... அதுவும் இளையராஜா இசையில் ஒரு பாட்டு எழுதியுள்ள அனுபவம் அருமை!

சிறு பிராயத்திலேயே புத்தகங்களினூடே வளர்ந்ததால் தீராத புத்தக வெறியனாக... அவற்றுடனான தனது பயணங்களை  புத்தகங்களும் நானும் மற்றும் வாழ்வின் உன்னதங்கள் என்ற இரண்டு கட்டுரைகளில் சுவாரஸ்யமாக பதிவு செய்துள்ளார்.  என்னடா...! ஒரு மனுஷன் இந்த சமூகம் கற்பிக்கும் எவ்வித வேலைக்கும் செல்லாமல் புத்தகங்கள், எழுத்து, சினிமா என வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறாரே...!! என எஸ்.ராவின் வாழ்க்கை நம்மைப் பொறாமைப்படுத்தும்.  ஆனால், அதற்குப் பின்னால் உள்ள வலிகளை ஒரு சில கட்டுரைகளில் எழுதியிருக்கிறார்.  குறிப்பாக அவரது காதல் துணைவியார் அளித்த ஆதரவு... லட்சத்தில் ஒரு பெண்மணிதான் இது போன்று இருக்க முடியும்.  ஆசிர்வதிக்கப்பட்டவர் எஸ்.ரா!

இவரது அமெரிக்க மற்றும் ஜப்பான் பயணக் கட்டுரைகள் விசா எடுக்காமலேயே நம்மை நயாகராவின் சாரலில் நனைத்தும் தோக்கியோவின் பனியில் உறைய வைக்கவும் செய்கின்றன.  அதிலும் அமெரிக்காவில் மார்க் ட்வைனின் வீட்டிற்குச் சென்றது, ஜப்பானில் ஹிரோஷிமாவிற்கு சென்றது ஆகியவை அற்புதமாக எழுதப்பட்டுள்ளன.

இதில் நினைவுகள் கசியும் கிணறு, கூட்ஸ் ரயிலில் ஒரு பயணம் ஆகிய கட்டுரைகள் நம் பால்ய காலத்தைக் கண் முன் நிறுத்துகின்றன.  எனது பார்வையில் இத்தொகுப்பின் முத்தாய்ப்பான உலகிற்கு உப்பாக இருங்கள் என்ற கட்டுரைக்காகவே இந்நூலை வாங்கலாம்.  அருமையான வாசிப்பு அனுபவம்!  Proof Reading-ல் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்!!

பக்கங்கள் 176
விலை   - ரூ.175/-
வெளியீடு தேசாந்திரி பதிப்பகம்.

Sunday 15 April 2018

தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள்

கடந்த 2014-2017 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவை விட்டு சுமார் 23,000 கோடீஸ்வரர்கள் வெளியேறி, வளர்ந்த நாடுகளில் குடியேறியுள்ளதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.  அவர்கள் விபரமில்லாமல் வெளியேறவில்லை!  இந்தியாவில் பெருகும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம், அதற்கு நேர்மாறாக அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை... இவை உண்டாக்கும் குற்றங்கள் என ஒருபுறமும் சீரழியும் சுற்றுச்சூழல், அதல பாதாளத்திற்குச் சென்ற நிலத்தடி நீர் என மறுபுறமும் இணைந்து, இந்தியா மனிதர்கள் நிம்மதியாக வாழ்வதற்குத் தகுதியில்லாத நாடாக அதிவேகமாக மாறி வருகிறது.  அதனால்தான் விபரமறிந்த பணக்காரர்கள் சத்தமில்லாமல் வெளியேறி வருகின்றனர்.  இந்நிலையில் இயற்கையைக் காப்பாற்றுவதில்தான் அனைத்தும் அடங்கியுள்ளது என்பதை உரக்க வலியுறுத்தி, தோழர்கள் சண்முகானந்தம் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் எழுதி வெளியிட்டிருக்கும் தமிழகத்தின் பறவைக் காப்பிடங்கள் என்ற நூல் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்நூல் பறவைக்காப்பிடங்கள் எங்கெங்கு உள்ளன... அங்குள்ள  முக்கியமானவைகள் எவை என்பதைப் பாடப்புத்தகங்கள் போல் சுருக்கமாகச் சொல்லாமல் அவற்றின் பெயருக்கான வேர்ச்சொற்கள் தொடங்கி, அங்கு எவ்வாறு செல்வது, வலசை வரும் முக்கியப் பறவைகள், அவையிடும் முட்டைகள், கூடுகளின் அமைப்பு, காப்பிடங்கள் எதிர்நோக்கியுள்ள சிக்கல்கள், அவற்றிற்கான தீர்வுகள் என  முழுமையான விபரங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளது.  இடையிடையே வரும் சங்க இலக்கியப் பாடல்களின் மேற்கோள்கள், ஆதித் தமிழர்களின் அறிவை மெச்சும் அதே வேளையில் நமது வாசிப்பு இன்பத்தை அதிகரிக்கின்றன என்பது மிகையல்ல!

பறவைகளின் பரிணாம வளர்ச்சி, உடற்கூறியல், பெயர் வகைப்பாட்டியல், நூலின் இடையே வரும் பெட்டிச் செய்திகள் போன்றவை வாசகர்களுக்கு சலிப்பூட்டும் வகையில் இல்லாமல்  எளிமையாகவும் அதே நேரத்தில் சுவையாகவும் எழுதப்பட்டுள்ளன.  பறவைகளின் இறகுகள் மற்றும் முட்டைகளின் எண்ணிக்கை, பறக்கும் போது இறக்கைகள்  அடிக்கும் வீதம், வலசை முறைகள், விருப்பமான உணவுகள், இரை உண்ணும் முறைகள், ஆயுட்காலம் என முடிந்தவரையிலான விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. 

நூலில் கணிசமான எழுத்து மற்றும் சந்திப் பிழைகளும் சிற்சில தவறுகளும் தென்பட்டாலும் அவை, கம்ப ராமாயணத்தை எழுதியது சேக்கிழார்? என்ற அளவிற்குத் தீவிரமானதாக இல்லாததால், இந்நூலின் ஆக்கச் சிறப்பு கருதி அவற்றைப் பொருட்படுத்த வேண்டியதில்லை.  இதில் இடம்பெற்றிருக்கும் நிழற்படங்களைப் பற்றி மட்டுமே தனிக் கட்டுரை எழுதும் அளவிற்கு, மேலை நாட்டுப் புத்தகங்களுக்கு இணையாகக்  கண்கவர் வண்ணப் படங்கள் பொருத்தமான பகுதிகளில் சொருகி வைக்கப்பட்டுள்ளன.  வழுவழுப்பான தாளில் புத்தகம் முழுவதும் வண்ணங்களில் உறுதியான கட்டமைப்புடன் வெளியிட்டிருக்கும் எதிர் வெளியீடு பதிப்பகத்தாரையும், பல்வேறு நூல்களிலிருந்தும் களப்பணிகளிலிருந்தும் தரவுகளைத் திரட்டி தங்களது அதிகபட்ச உழைப்பைக் கொடுத்து இந்நூலை உருவாக்கியுள்ள தோழர்கள் சண்முகானந்தம் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.  பசுமை இலக்கியத்தில் ஒரு முத்திரைப் படைப்பு!

பறவை நோக்குதல் வழியாக சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது எவ்வாறு என்ற புரிதலில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சும்  இந்நூலை, சதா சர்வகாலமும் தொடுதிரை அலைபேசிகளைத் தங்கள் விரல் நோகத் தோய்த்து, அது மட்டுமே உலகம் என நம்பும் இளையதலைமுறையினர் படித்து, அதை முடிந்தவரை மற்றவருக்குப் பரப்ப முயற்சிக்க வேண்டும்.  அது ஒன்று மட்டுமே... எஞ்சியுள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இந்நூலாசிரியர்களுக்கும் கிடைக்கும் உண்மையான வெகுமதியாகும்.

Tuesday 6 March 2018

ஸ்டீவ் ஜாப்ஸ்



இந்த பூமியில் 56 வருடங்கள் மட்டுமே வாழ்ந்த ஸ்டீவ் ஜாப்ஸ் செய்த சாதனைகளை இனி ஒருவர் செய்ய முடியுமா என்பதே மிகப் பெரிய கேள்விக்குறி.  ஏனெனில் ஜாப்ஸ் சிறிதளவு தொழில்நுட்ப அறிவையும் பெருமளவு உள்ளுணர்வையும் கற்பனையையும் பயன்படுத்தி பிரமாண்டமான கண்டுபிடிப்புகளை உருவாக்கி அழியாப் புகழைப் பெற்றார்.

சிரிய தந்தைக்கும் அமெரிக்க தாய்க்கும் பிறந்து குழந்தைப் பருவத்திலேயே வேறொரு அமெரிக்க-ஆர்மீனிய தம்பதிக்குத் தத்துக் கொடுக்கப்பட்ட துயரமான ஆரம்ப கட்டம் நிறைந்தது ஜாப்ஸின் வாழ்க்கை.  படிப்பில் பெரிதாக நாட்டமில்லை.  ஆனால் கம்ப்யூட்டரின் மீது தீராக் காதல்.

கார் ஷெட்டில் ஆரம்பிக்கப்பட்ட ஆப்பிள் நிறுவனம் இன்று 8,50,000 சதுர அடி பரப்பளவில் அட்லாண்டிக் சமுத்திரம் போல் இயங்கி வருகிறது.  ஐமாக், அனிமேஷன் திரைப்படங்கள், ஐபாட், ஐபேட், ஐபோன், ஐடியூன்ஸ் என தொட்டதெல்லாம் அமோக வெற்றி.  உண்மையிலேயே மிடாஸ் டச்தான்.


ஆப்பிள்-I மற்றும் ஆப்பிள்-II என மெல்ல முன்னணி மேசைக்கணினி தயாரிக்கும் நிறுவனமாக வளர்ந்து வந்த ஆப்பிளிலிருந்து ஒரு கட்டத்தில் ஜாப்ஸ் வெளியேற்றப்படுகிறார்.  பின்னர் நெக்ஸ்ட் என்ற கணினி தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்குகிறார்.  அதுவும் தோல்வியில் முடிகிறது.  அவ்வளவுதான் ஜாப்ஸ்...! என டெக் உலகம் தீர்மானித்திருந்த நிலையில் பிக்ஸார் என்ற அனிமேஷன் படம் தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கினார்.  அது தயாரித்து வெளியிட்ட Toy Story முதல் Ratatouille வரையான அனைத்துத் திரைப்படங்களும் பாக்ஸ் ஆஃபிஸில் வசூலை வாரிக் குவித்தன.  பாரம்பரியமான வால்ட் டிஸ்னியே பிக்சாரின் தொடர் வெற்றிகளால் அதிர்ந்தது.  பின்னர் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 32,000 கோடிக்கு பிக்ஸாரை வால்ட் டிஸ்னிக்கு பெருத்த லாபத்தில் விற்கிறார் ஜாப்ஸ்.  இதற்கிடையில் தன் முதல் குழந்தை போல் பாவித்த ஆப்பிள் நிறுவனம் சரியான தலைமையில்லாமல் கிட்டத்தட்ட மூடும் நிலைக்குச் சென்றது.  மீண்டும் பங்குதாரர்கள் ஜாப்ஸிடம் சரணடைகிறார்கள்.  வீறு கொண்டு எழுந்தது ஆப்பிள்! அதனால்தான் அந்நிறுவனத்தின் சென்ற வருட கையிருப்புத் தொகை அமெரிக்காவின் பெரிய வங்கியான பேங்க் ஆஃப் அமெரிக்காவின் இருப்புத் தொகையைவிட அதிகமாக உள்ளது.  அதாவது சுமார் 15 இலட்சம் கோடி ரூபாய்கள்!


இந்நூலைப் படிக்கும் பொழுது ஜாப்ஸ் போன்ற மனிதனோடு குடும்பம், தொழில் என ஒருவருமே சுமூக உறவோடு இருக்க முடியாது என துல்லியமாகத் தெரிகிறது.  அவ்வளவு மூர்க்கத்தனம் உள்ளவர்.  இத்தனைக்கும் தன் வாழ்நாள் முழுவதும் சைவ உணவு மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளார்.  தான் நினைத்த வடிவம் வரவில்லையென்றால் அந்த இடத்திலேயே கடும் வசவுகள், பொருட்களைத் தூக்கியெறிதல், தன்னையே நொந்து கொண்டு அனைவரது முன்பும் அழுவது என ஒரு சைக்கோ போல நடந்துள்ளார்.  ஆனால் இவை எதையும் பொருட்படுத்தாமல் அவருக்கு உறுதுணையாக ஓர் அருமையான தொழில்நுட்பக் குழு வாய்த்துள்ளது பெரிய விஷயம்!

தனிப்பட்ட வாழ்க்கையிலும் சற்று இரக்கமில்லாதவராக இருந்துள்ளார்.  மூன்று பெண்களுக்கு மேல் தொடர்பு.  அவர்களுக்குப் பிறந்த நான்கு வாரிசுகள் என மனுஷன் சும்மா விளையாடியிருக்கார்.  கணையத்தில் ஆரம்பித்த புற்றுநோய் கல்லீரல் மற்றும் உடலின் பிற பாகங்களில் பரவி கடந்த 05.10.2011 அன்று இவ்வுலகை விட்டு மறைந்தார் ஜாப்ஸ்.  பெரும் செல்வங்கள் சேர்ந்த நிலையிலும் அமெரிக்காவின் பிற பணக்காரர்களைப் போல தனக்குப் பாதுகாப்பு அலுவலர்கள், வேலைக்காரர்கள், கார் ஓட்டுநர்கள் என ஒருவரையும் பணிக்கு வைக்காமல் கடைசிவரை எளிமையாக வாழ்ந்தார்.  ஒருமுறை பில்கேட்ஸ் தனது வீட்டிற்கு வந்த போது ஜாப்ஸ் தானே சென்று குளிர்சாதனப் பெட்டியிலிருந்து குடிநீர் கொண்டு வந்து கொடுத்து அதிர வைத்தார்.

இந்நூல் மிக மிக முக்கியமான ஒன்று.  ஏனெனில் தொழில்முனைவில் ஆர்வமுள்ளவர்கள், கல்லூரி மாணவர்கள், ஐ.டி பணியாளர்கள் ஆகியோருக்கு மட்டுமல்ல... அனைத்துத் தரப்பினரும் படித்துப் பல பாடங்களைக் கற்றுக் கொள்ள ஏராளமான விஷயங்கள் அடங்கிய பொக்கிஷம்! Don’t miss it ரகம் என்றால் அது மிகையல்ல!!

வால்டர் ஐசாக்ஸன் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஸ்டீவ் ஜாப்ஸ் உள்பட சுமார் 200 நபர்களுக்கும் மேல் பேட்டியெடுத்து சிறப்பாகத் தொகுத்து வெளியிட்டுள்ளார்.  ஆங்கிலத்தில் படித்தால் தாவு தீர்ந்துவிடும் அளவிற்கு சிக்கலான இந்நூலை நல்ல வாய்ப்பாக உமா பாலு அற்புதமாக மொழிபெயர்த்துள்ளார்.  கலைச்சொற்கள், சொல்லடைவு என முழுமையான வடிவில் சிறப்பாக வெளியிட்டுள்ளனர் அடையாளம் பதிப்பகத்தார்.

வெளியீடு :- அடையாளம்
பக்கங்கள் :- 878
விலை    :- ரூ.660

Thursday 1 March 2018

என்னை நான் சந்தித்தேன்


பெரும்பாலான புத்தக வாசகர்களைப் போலவே தீவிர வாசிப்பிற்குச் செல்வதற்கு ஆரம்ப கட்டமான அம்புலி மாமா, காமிக்ஸ்கள், க்ரைம் நாவல்களைப் பதின்ம வயதுகளில் வாசித்துக் கிளர்ச்சியடைந்ததில் பெரும்பங்கு வகித்தவை ராஜேஷ்குமார் எழுதியவை. அவரது சுயசரிதையின் ஒரு பகுதியாக வந்துள்ள இந்நூல், அவர் எழுதிய க்ரைம் நாவல்களைப் போன்று விறுவிறுப்பாக உள்ளது. தற்போது பணி நெருக்கடியினால் நேரமின்மை, வாசிப்பில் அடுத்த கட்ட நகர்வு காரணமாக இவரது நாவல்களைப் படிப்பதில்லை. ஆனால் இந்நூல் விதிவிலக்கு.
எடுத்த வேகத்தில் இரண்டு நாட்களில் 500 பக்க புத்தகத்தை வாசித்து முடிக்க வைக்கிற எக்ஸ்பிரஸ் வேக எழுத்து நடை! எழுத்தை மட்டுமே நம்பி தமிழ்நாட்டில் ஒருவர் வாழ முடியும் என்பதற்கு ராஜேஷ்குமார் சரியான... அதே நேரத்தில் அரிதான உதாரணம். இதில் கதையை உருவாக்குவதிலிருந்து அதை மேம்படுத்துவது வரையான ரகசியங்களை எவ்வித பூடகமுமின்றி வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழ் சினிமா, எழுத்தாளர்களின் சிந்தனைகளை உறிஞ்சி எடுத்து விட்டு, எப்படி நாமம் சாத்துகிறது என்பதைப் பல அத்தியாயங்களில் போட்டுடைத்துள்ளார். சினிமா உலகம் தொடர்ச்சியாகத் தன்னை ஏமாற்றி வந்தாலும் தன் முயற்சியில் மனம் தளராமல் சலிப்பின்றி கோடம்பாக்கத்தை மீண்டும் மீண்டும் முற்றுகையிட்டுள்ளார். அதனால் தான் இன்று கோவையிலிருந்து கொண்டே சினிமாவில் தனக்கான இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
பல அறிவியல் விஷயங்களை பின்னணியாகக் கொண்டு தனது நாவல்களை உருவாக்கிய ராஜேஷ்குமார்... ஜோதிடம், பிரசன்னம் பார்ப்பது, எண் கணிதம் போன்றவற்றில் நம்பிக்கை உள்ளவராக இருப்பது இந்நூலைப் படிக்கும் நமக்கு வியப்பளிக்கிறது. இருந்தாலும் இவரது வாசகர்கள் மட்டுமின்றி சுவாரஸ்ய விரும்பிகள் அனைவரும் தவற விடக்கூடாத முக்கியமான நூல்.