Friday, 18 November 2011

என்றும் சுஜாதாகடந்த மே மாதம் 3ம் தேதி எழுத்தாளர் சுஜாதாவின் பிறந்த நாளை முன்னிட்டு உயிர்மை பதிப்பகம் அவரது படைப்புகளில் சிலவற்றைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்டது. எஸ். ராமகிருஷ்ணன் தொகுத்திருக்கிறார். 1995 என நினைக்கின்றேன்... ஆனந்த விகடனில் சுஜாதவின் பேட்டி வெளியானது. அதில் அவரைப் பற்றிய ஒரு வரி எனக்கு சரியாக நினைவில் இல்லை.  இருந்தாலும் அது, 'சுஜாதா - தமிழில் கதை எழுதுபவர்களுக்கு நட்சத்திர அந்தஸ்து வாங்கிக் கொடுத்தவர்' என்ற வரியாக இருக்கலாம். அது எவ்வளவு உண்மை என்பதை இந்தத் தொகுப்பைப் படிக்கும் போது உணர முடிகிறது.

சங்க இலக்கியம் முதல் சயின்ஸ் வரை இசை முதல் இன்டெர்நெட் வரை எல்லாம் எழுதியிருக்கிறார். அதுவும் சிம்பொனியைப் பற்றிய கட்டுரையில் மேதாவித் தனமாக எழுதாமல் நாம் கேட்க வேண்டிய சிம்பொனியின் பட்டியல்களோடு அந்தக் கட்டுரையை முடித்திருப்பார். அதுதான் சுஜாதா! அமெரிக்காவிற்கு வேலைக்குச் செல்பவர்கள் ஏன் இந்தியாவிற்க்குத் திரும்புவதில்லை என்ற கட்டுரை சம்பந்தப்பட்டவர்கள் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று. அதே போல் வயது வந்தவர்களுக்கு என ஆரம்பிக்கும் அறிவுரைக் கட்டுரையும் தான்.

சுஜாதவின் சிறுகதைகளும் சில இடம்பிடித்திருக்கின்றன. அவற்றில் இழையோடும் நகைச்சுவை! வயிறு புண்ணாகிவிடும். காதல் கடிதம் என்ற கதையில் கிருஷ்ண்ய்யங்கார் என்பவரைப் பற்றிய வர்ணனையில், 'அய்யங்கார் அளவில் சிறியவர். டிரான்சிஸ்டர் மாதிரி இருப்பார். உட்கார்ந்தால் நாற்காலியில் நிறைய இடம் இருக்கும்' என்று எழுதியிருப்பார். சிரிக்க வைக்கும் அதே நேரத்தில் 'காணிக்கை' என்ற கதையில் நம்மை அழ வைக்கிறார். அருமையான கதை!.

தமிழின் பிரபல பழைய எழுத்தாளர்களைப் பற்றிய கட்டுரைகள் நன்று. அதிலும் தி. ஜானகிராமனைப் பற்றிய கட்டுரை சூப்பர்!. அதே போல் இளையராஜா, பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர், ரஜினி, கமல் மற்றும் குறிப்பாக பாலு மகேந்திரா ஆகியோரைப் பற்றிய கட்டுரைகளும் இத்தொகுப்பில் உள்ளன.

'எதிர்காலம்' என்ற கட்டுரையில் மின் புத்தகங்களின் வரவால்... காகிதப் புத்தகங்களின் தேவை என்றுமே குறையாது என்பதைத் தகுந்த காரணங்களோடுப் பதிவு செய்துள்ளார். இதற்குப் புத்தகச் சந்தைகளில் வருடா வருடம் அதிகமாகும் விற்பனையே சாட்சி.

மொத்தத்தில் இந்த அருமையானத் தொகுப்பை ஒரே மூச்சில் படித்து முடித்து கீழே வைக்கும் பொழுது... சுஜாதா என்கிற பெரிய மாளிகையின் வாசலில் நிற்பதைப் போல் உணர்கிறேன். முழு மாளிகையையும் சுற்றிப் பார்க்க வசதியாக அவரின் அனைத்துப் படைப்புகளின் பட்டியலையும் இறுதியில் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் எஸ். ராமகிருஷ்ணன். இந்நூல், சுஜாதா ரசிகர்களுக்கு மட்டுமல்ல... தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் நல்ல விருந்து என தைரியமாகப் பரிந்துரைக்கிறேன்.

5 comments:

கணேஷ் said...

உயிர்மை வெளியிடும் புத்தகங்கள் சாதாரண ரசிகன் காசு கொடுத்து வாங்கும் விலையிலா இருக்கின்றன அழகு சார்? இதே பக்கங்கள் உள்ள புத்தகத்திற்கு மற்ற பதிப்பகங்கள் வைக்கும் விலையையும், இவர்கள் வைக்கும் விலையையும் கவனியுங்கள். ஏன் இப்படி என்றே புரியவில்லை...

மதுரை அழகு said...

கணேஷ் சார்! உங்க ஆதங்கம் புரியுது. இருந்தாலும் சில புத்தகங்களைப் பார்த்தா வாங்காம இருக்க முடியல...!

கோமதி அரசு said...

இன்றைய வலைச்சரத்தில் இந்த அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.
http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_26.html

Anonymous said...

வணக்கம்

இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளதுவாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோமுகவரிhttp://blogintamil.blogspot.com/2013/12/blog-post_26.html?showComment=1388023369804#c6732373831674887856

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நிச்சயம் படிக்க வேண்டிய பத்தகம்தான் என்பதை ஆணித்தரமாக விளக்கினீர்கள் சார் -நன்று!

Post a Comment