Sunday 26 February 2017

கடைசிக் கோடு


அரசுப் பணியின் பொருட்டு, நில அளவைப் பயிற்சிக்காக தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு தமிழ்நாடு நில அளவைப் பயிற்சி நிலையத்தில் கடந்த 2015-ம் ஆண்டு 35 நாட்கள் பயிற்சி தரப்பட்டது.  அங்கு பாடம் நடத்திய ஆசிரியர்களில் திரு.சந்திரசேகர் என்ற ஓய்வு பெற்ற நில அளவை ஆய்வாளரைத் தவிர மற்ற அனைவரும் கடனே! என பயிற்சி வகுப்புகளை நடத்தினர்.  திரு.சந்திரசேகர் இந்தியாவை வெள்ளையர்கள் எவ்வாறு நில அளவை செய்தனர் என்பதை சுருக்கமாகக் கூறி விட்டு, பிரதான பாடத்திற்குள் நுழைந்தார்.  அப்பொழுது இந்தியாவை முதன்முதலில் நில அளவை செய்தவர் வில்லியம் லாம்டன் என்ற பன்முகத் திறமை கொண்டவர் என்று சொன்னார்.  அந்த “பன்முகத் திறமை“ என்ற வார்த்தை தந்த ஆர்வத்தில் இந்திய நில அளவை தொடர்பாக தமிழில் ஏதேனும் புத்தகங்கள் இருக்கிறதா என்று தேடியபொழுது கிடைத்த புத்தகம் தான் ரமணன் எழுதியுள்ள இந்த “கடைசிக் கோடு.

Sunday 19 February 2017

ஆஷ் அடிச்சுவட்டில்



தமிழின் தவிர்க்கமுடியாத வரலாற்றாய்வாளர்களில் மிக முக்கியமானவரான ஆ.இரா. வேங்கடாசலபதி, 13 ஆளுமைகளைப்பற்றி பல்வேறு கால கட்டங்களில் எழுதித் தொகுத்து வெளிவந்திருக்கும் புத்தகம் “ஆஷ் அடிச்சுவட்டில்”.  இதில் ஆஷ், எல்லிஸ், ஜி.யு. போப் மற்றும் எரிக் ஹாப்ஸ்பாம் தவிர மீதி அனைவரும் நம்மவர்கள்.  இந்நூலில் உள்ள ஜி.யு. போப் தொடர்பான கட்டுரையின் தலைப்பு “தமிழ் மாணவர்! என்று வியப்புக்குறியுடன் தொடங்குவதிலிருந்து நமக்கும் வியப்பு தொற்றிக் கொள்கிறது.  நான் இறந்த பிறகு, எனது கல்லறையில் “நான் ஒரு தமிழ் மாணவர்” என்று பொறிக்கப்பட வேண்டும் என ஜி.யு. போப் கூறியதாக ஒரு செய்தி நீண்ட காலமாக உலவி நிலைபெற்றுவிட்டது.  உண்மை என்னவெனில், லண்டனில் உள்ள ஜி.யு. போப்பின் கல்லறையில் அப்படிப்பட்ட வாசகம் ஏதும் பொறிக்கப்படவில்லை என்பதை நேரில் சென்று பார்த்ததுடன் அதன் நிழற்பட நகலையும் புத்தகத்தில் இடம்பெற செய்துள்ளார் சலபதி.  லண்டன் செல்லும் தமிழன்பர்கள் எவர் வேண்டுமானாலும் போப்பின் கல்லறையை நிழற்படம் எடுத்து இதை நிறுவலாம்.  ஆனால் சலபதி வித்தியாசப்படுவது எதிலென்றால், “நான் ஒரு தமிழ் மாணவர்என்ற சொற்றொடர் எவ்வாறு நிலைபெற்றது என்பதைத் தேடி கண்டடைந்ததில் தான் உள்ளது.  தமிழின் நீண்ட கால நம்பிக்கையைத் தகர்த்த முக்கியமான கட்டுரை.