Tuesday, 22 November 2011

புள்ளிகள்... கோடுகள்... பாதைகள்!புத்தகக் கண்காட்சியில் அதிகம் விற்பனையாகும் புத்தகங்கள் வரிசையில் ஜோதிடம், பக்திக்கு அடுத்து சுயமுன்னேற்றப் புத்தகங்கள்தான் என்று ஒரு தகவல் உண்டு. அப்படி வெளிவரும் சுயமுன்னேற்றப் புத்தகங்களில் பல... நம்புங்கள்! நம்மால் முடியும்!! என்று வெற்று கோஷங்களாகவே இருக்கும். அவற்றில் நடைமுறை உதாரணங்கள் ஒன்று கூட இருக்காது. ஆனால் இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபடும் புத்தகம்தான் ராஷ்மி பன்சால் எழுதிய Connect The Dots என்ற ஆங்கிலப் புத்தகம். இதை புள்ளிகள்... கோடுகள்... பாதைகள்! என்ற தலைப்பில் ரவிபிரகாஷ் மொழிபெயர்க்க விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது.

ராஷ்மியின் முந்தைய புத்தகமான Stay Hungry Stay Foolish (தமிழில் 'முயற்சி திருவினையாக்கும்') 20 எம்.பி.ஏ. பட்டதாரிகளின்... அதுவும் ஐ.ஐ.எம்-மில் படித்தவர்களின் வெற்றிக் கதைகளைப் பற்றியதாக இருந்ததால் என்னைப் பெரிதாகக் கவரவில்லை. அட...! என்னதான் இருந்தாலும் அவர்களெல்லாம் ஐ.ஐ.எம்-மில் படித்தவர்கள். அதனால் அவர்களின் வெற்றி ஒன்றும் பெரிய விசயம் அல்ல என்ற நினைப்பு இருந்தது. ஆனால் இந்த பு.கோ.பாவோவில் நம்மில் பெரும்பாலோரைப் போல சாதாரணமானவர்களாக இருந்து பின்னர் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளதை படிக்கும் பொழுது நம்மனதில் இந்தப் புத்தகம் பசை போல... இல்லை! இல்லை!! பெவிகால் போல ஒட்டிக் கொள்கிறது.

புத்தகத்தில் உணவகம், எலெக்ட்ரானிக்ஸ், ஃபார்மா, ட்யூசன் சென்டர், சமையல் கலை, ஆயத்த ஆடை, புத்தகக் கடை, புகைப்படக்கலை, சினிமா, விவசாயம் போன்ற இருபது பல்வேறு துறைகளில் ஜொலிப்பவர்களின் கதைகளை வறட்சியான பேட்டி சடங்காக இல்லாமல் விறுவிறுப்பான சிறுகதை போல சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார் ராஷ்மி பன்சால். நமது தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டு இன்று இந்தியா முழுவதும் கோலோச்சும் விவேகானந்தா ஆங்கில பயிற்சி மையத்தின் வெற்றிக் கதையைப் படிக்கும் பொழுது நமக்குத் தோன்றும் ஒரு விசயம் காலத்தின் தேவையை முன் கூட்டியே கணித்தால்... அந்த சமயத்தில் ஒர்க் அவுட் ஆகாவிட்டாலும் பிற்காலத்தில் நிச்சயம் ஹிட்டாகும் என்பது புரிகிறது. சுருக்கமாகச் சொன்னால் ஆளே இல்லாத கடையில் டீ (நல்ல டீ!) ஆத்துவது போல வேலை பார்க்க வேண்டும்.

பிரபல வனவிலங்கு புகைப்படக் கலைஞர் கல்யாண் வர்மாவின் கதையப் படித்தால் வலைதளத்தின் சக்தி என்னவென்று நன்றாகவேத் தெரிகிறது. இவர் யாகூவில் பார்த்து வந்த வேலையை உதறிவிட்டு வனங்களுக்குச் சென்று புகைப்படம் எடுப்பதில் தீவிரமாக இறங்கினார். அப்படி எடுத்த படங்களைத் தன் பிளாக்கில் ஏற்றினார். அதைப்பார்த்த ஒரு தொலைக்காட்சி நிறுவனம் இவரைத் தனது புராஜக்ட்களுக்கு நிரந்தரப் புகைப்படக் கலைஞராகப் பெரும் தொகை கொடுத்து ஒப்பந்தம் செய்தது. அந்நிறுவனம் வேறு யாருமல்ல... உலகப் புகழ்பெற்ற பி.பி.சி.

அதே போல் ஒரிஸ்ஸாவின் பிரின்ஸ் நாடககுழுவின் நிறுவனர் 26வயதே நிரம்பிய கிருஷ்ணா ரெட்டியின் கதை ஒரு த்ரில்லர் சினிமாவிற்க்கு நிகரானது. 'கலர்ஸ்' என்ற தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய இந்திய அளவிலான ஷோவில் இந்நாடகக் குழுவும் பங்கேற்று பல்வேறு துயரங்களைக் கடந்து இறுதிச் சுற்று வரை முன்னேறியது. பரிசுத் தொகை ஐம்பது லட்சம்! யாருடைய நிகழ்ச்சிக்கு அதிக எஸ்.எம்.எஸ். ஓட்டுகள் பதிவாகிறதோ அந்தக் குழுதான் வெற்றியாளர். பிரின்ஸ் நாடகக் குழு வெற்றி பெறுவதற்காக ஒரிசா முழுவதும் எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள் என்று பிரசாரம் செய்தது யார் தெரியுமா? அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்! பிறகென்ன கிருஷ்ணா ரெட்டியின் கைகளில் ஐம்பது லட்சம் சுளையாக விழுந்தது.

இதே போல் மீதி பதினெட்டுக் கதைகளைப் படித்து முடிக்கும் பொழுது நம்மை அளவு கடந்த உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. இதனால் கிடைக்கும் நீதி என்னவெனில் நம் மனதிற்க்குப் பிடித்ததைச் செய்தால் வெற்றியும் வரும்! கூடவே நிறைய பணமும் வரும்!! பிடிக்காத வேலையிலேயே உழன்று கொண்டிருந்தால்... நாம் காலி!. ராஷ்மி பன்சால் பல்வேறு துறைகளச் சார்ந்தவர்களைத் தேர்ந்தெடுத்ததிலேயே பாதி வெற்றி பெற்று விட்டார். மீதி அவைகளை நேர்த்தியாகப் பதிவு செய்தது. இல்லாவிட்டால் இவரது இந்தப் புத்தகம் மட்டுமே இரண்டு லட்சம் பிரதிகள் விற்றிருக்குமா...? ஒன்றைச் சொல்லாமல் விட்டு விட்டேனே...! ரவிபிரகாஷின் மொழிபெயர்ப்பு அருமை. உபரித் தகவல் :- இந்தப் புத்தகம் எட்டு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

Monday, 21 November 2011

WITNESS FOR THE PROSECUTION (1957) - சஸ்பென்ஸ் சினிமாலெனார்ட் வோல் (டைரோன் பவர்), எமிலி ஃப்ரென்ச் (நார்மா வார்டென்) என்ற வயதான பணக்காரப் பெண்மணியைக் கொலை செய்துவிட்டான் என போலிஸ் அவனைக் கைது செய்கிறது. இந்த வழக்கு லண்டனின் பிரபல வழக்கறிஞர் சர் வில்ஃபிரிட் ராபர்ட்ஸிடம் (சார்லஸ் லாஃப்டன்) வருகிறது. அவர் வழக்கை எடுத்து நடத்த சம்மதிக்கிறார். கோர்ட்டில் லெனார்ட், தனக்கும் கொலையான எமிலி ஃபிரன்ச்க்கும் எப்படி பழக்கம் உண்டானது என விவரிக்கிறான். லெனார்ட் பல புதிய வீட்டு உபயோக எலெக்ட்ரானிக் பொருட்கள் செய்வதில் நிபுணன். அப்படி ஒரு பொருளான முட்டை கடையும் சிறு கருவியை எமிலியிடம் காட்டும் பொழுது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. மற்றபடி அவரைக் கொலை செய்யும் அளவிற்கு எந்த காரணமும் இல்லை என்கிறான். ஆனால் எதிர்த்தரப்போ... எமிலி கொலை செய்யப்படுவதற்க்கு ஒரு வாரம் முன்பு எழுதிய தனது உயிலில் லெனார்டிர்க்கு எண்பதாயிரம் பவுண்டுகள் தர வேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தாள்... அந்தப் பணம் தனக்கு விரைவில் கிடைக்க வேண்டுமென்பதற்காக அவன் அவளைக் கொலை செய்து விட்டான் எனக் கூறுகிறது. எல்லா சாட்சியங்களும் லெனார்டிர்க்கு எதிராக இருக்கிறது. ஆனால் வக்கீல் வில்ஃபிரிட் தன் திறமையான வாதங்களால் அவற்றை உடைக்கிறார்.

இந்நிலையில் எதிர்பாரதவிதமாக, லெனார்டின் மனைவி கிறிஸ்டின் ஹெல்ம் (மார்லின் டைட்ரிச்), கொலை நடந்த அன்று இரவு வீட்டிற்கு வந்த லெனார்ட் பதற்றதுடன் இருந்ததாகவும் தான் எமிலியைக் கொலை செய்துவிட்டதாகத் தன்னிடம் கூறியதாகவும் கோர்ட்டில் சாட்சி அளிக்கிறாள். இதனால் லெனார்ட் மற்றும் வக்கீல் விஃபிரிட் உட்பட அனைவரும் அதிர்ச்சியாகிறார்கள். கிட்டத்தட்ட வழ்க்குத் தோற்றுவிடும் நிலையிலிருக்கிறது. இனி தீர்ப்பு வழங்க வேண்டியதுதான் பாக்கி. அன்று இரவு வக்கீலுக்கு ஒரு மர்ம ஃபோன் வருகிறது. எதிர்முனையில் பேசிய பெண், தன்னிடம் லெனார்டின் மனைவி கிரிஸ்டின் தன் கள்ளக் காதலனுக்கு எழுதிய கடிதங்கள் இருப்பதாகவும் நூறு பவுண்டுகள் கொடுத்தால் அவை எல்லாவற்றையும் ஒப்படைப்பதாகவும் கூறுகிறாள். வில்ஃபிரட்ஸ் நாற்பது பவுண்டுகள் விலை பேசி அவளிடம் கடிதங்களை வாங்குகிறார். அந்தக் கடிதத்தில் லெனார்டிற்கு எதிராக சாட்சி சொன்னால் அவன் சிறையிலடைக்கப்படுவான்... பிறகு நாம் ஜாலியாக இருக்கலாம் என எழுதியிருந்தாள் கிறிஸ்டின்.

மறுநாள் கோர்ட்டில்... விஃபிரட்ஸ், லெனார்டின் மனைவியிடம் கடிதங்களைக் காட்டி அவையெல்லாம் அவள் எழுதியதுதான் என உறுதி செய்கிறார். அவள் பொய் சாட்சியம் கூறியதாக நிரூபணமானதால்... லெனார்ட் விடுதலையாகிறான். பிறகுதான் இருக்கிறது அந்த செம ட்விஸ்ட்! அது உங்கள் பார்வைக்கு...

படத்துளிகள்...

பிரபல துப்பறியும் நாவல் எழுத்தாளரான அகதா கிறிஸ்டியின் சிறுகதையை சிற்சில மாற்றங்களுடன் படமாக்கிருக்கிறார் இயக்குனர் பில்லி வைல்டர். தொடர் ட்விஸ்ட்களாலும் திறமையான கோர்ட் வாதங்களாலும் நம்மை இறுதிவரைக் கட்டிப் போடுகிறார்.

படத்தின் உண்மையான கதாநாயகன் வயதான பருமனான வக்கீலாக வரும் சார்லஸ் லாஃப்டன் தான் என்றால் அது மிகையில்லை. அவருடைய கட்டைக் குரல் மிகப்பெரிய பலம்.

நார்மா வார்டெனும் அவர் மனைவியாக நடித்திருக்கும் மார்லின் டைட்ரிச்சும் கவனம் ஈர்க்கிறார்கள்.

முக்கியாமாக... வக்கீலின் உடல்நிலையை கவனித்துக் கொள்ளும் செவிலியாக வரும் எல்சா லான்செஸ்டருக்கு 1958ம் ஆண்டிற்கான சிறந்த துணை நடிகைக்கான கோல்டன் குளோப் விருது கிடைத்திருக்கிறது. இதிலிருந்தே அவரது நடிப்பின் சிறப்பை நாம் உணரலாம்.

கோர்ட் காட்சிகளின் கேமராக் கோணங்களில் கவனிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் ரஸ்ஸல் ஹார்லன்.

க்ளைமாக்ஸ்
1957ல் வெளிவந்த இந்தப்படம் பெரும்பாலும் வசனங்களிலேயே நகருவதால் சப்-டைட்டிலோடு பார்ப்பது உத்தமம். தவறாமல் பார்க்கவும்!

Friday, 18 November 2011

என்றும் சுஜாதாகடந்த மே மாதம் 3ம் தேதி எழுத்தாளர் சுஜாதாவின் பிறந்த நாளை முன்னிட்டு உயிர்மை பதிப்பகம் அவரது படைப்புகளில் சிலவற்றைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்டது. எஸ். ராமகிருஷ்ணன் தொகுத்திருக்கிறார். 1995 என நினைக்கின்றேன்... ஆனந்த விகடனில் சுஜாதவின் பேட்டி வெளியானது. அதில் அவரைப் பற்றிய ஒரு வரி எனக்கு சரியாக நினைவில் இல்லை.  இருந்தாலும் அது, 'சுஜாதா - தமிழில் கதை எழுதுபவர்களுக்கு நட்சத்திர அந்தஸ்து வாங்கிக் கொடுத்தவர்' என்ற வரியாக இருக்கலாம். அது எவ்வளவு உண்மை என்பதை இந்தத் தொகுப்பைப் படிக்கும் போது உணர முடிகிறது.

சங்க இலக்கியம் முதல் சயின்ஸ் வரை இசை முதல் இன்டெர்நெட் வரை எல்லாம் எழுதியிருக்கிறார். அதுவும் சிம்பொனியைப் பற்றிய கட்டுரையில் மேதாவித் தனமாக எழுதாமல் நாம் கேட்க வேண்டிய சிம்பொனியின் பட்டியல்களோடு அந்தக் கட்டுரையை முடித்திருப்பார். அதுதான் சுஜாதா! அமெரிக்காவிற்கு வேலைக்குச் செல்பவர்கள் ஏன் இந்தியாவிற்க்குத் திரும்புவதில்லை என்ற கட்டுரை சம்பந்தப்பட்டவர்கள் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று. அதே போல் வயது வந்தவர்களுக்கு என ஆரம்பிக்கும் அறிவுரைக் கட்டுரையும் தான்.

சுஜாதவின் சிறுகதைகளும் சில இடம்பிடித்திருக்கின்றன. அவற்றில் இழையோடும் நகைச்சுவை! வயிறு புண்ணாகிவிடும். காதல் கடிதம் என்ற கதையில் கிருஷ்ண்ய்யங்கார் என்பவரைப் பற்றிய வர்ணனையில், 'அய்யங்கார் அளவில் சிறியவர். டிரான்சிஸ்டர் மாதிரி இருப்பார். உட்கார்ந்தால் நாற்காலியில் நிறைய இடம் இருக்கும்' என்று எழுதியிருப்பார். சிரிக்க வைக்கும் அதே நேரத்தில் 'காணிக்கை' என்ற கதையில் நம்மை அழ வைக்கிறார். அருமையான கதை!.

தமிழின் பிரபல பழைய எழுத்தாளர்களைப் பற்றிய கட்டுரைகள் நன்று. அதிலும் தி. ஜானகிராமனைப் பற்றிய கட்டுரை சூப்பர்!. அதே போல் இளையராஜா, பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர், ரஜினி, கமல் மற்றும் குறிப்பாக பாலு மகேந்திரா ஆகியோரைப் பற்றிய கட்டுரைகளும் இத்தொகுப்பில் உள்ளன.

'எதிர்காலம்' என்ற கட்டுரையில் மின் புத்தகங்களின் வரவால்... காகிதப் புத்தகங்களின் தேவை என்றுமே குறையாது என்பதைத் தகுந்த காரணங்களோடுப் பதிவு செய்துள்ளார். இதற்குப் புத்தகச் சந்தைகளில் வருடா வருடம் அதிகமாகும் விற்பனையே சாட்சி.

மொத்தத்தில் இந்த அருமையானத் தொகுப்பை ஒரே மூச்சில் படித்து முடித்து கீழே வைக்கும் பொழுது... சுஜாதா என்கிற பெரிய மாளிகையின் வாசலில் நிற்பதைப் போல் உணர்கிறேன். முழு மாளிகையையும் சுற்றிப் பார்க்க வசதியாக அவரின் அனைத்துப் படைப்புகளின் பட்டியலையும் இறுதியில் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் எஸ். ராமகிருஷ்ணன். இந்நூல், சுஜாதா ரசிகர்களுக்கு மட்டுமல்ல... தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் நல்ல விருந்து என தைரியமாகப் பரிந்துரைக்கிறேன்.

Thursday, 17 November 2011

120 கோடி - கோவிந்தா...! கோஓஓஓ...விந்தா...!!அண்மையில் உலக மக்கள் தொகை 700 கோடியை எட்டியது. அந்த 700வது கோடி குழந்தை நமது நாட்டில் உத்திரப்பிரதேசத்தில் பிறந்ததாகக் கொண்டாடப்பட்டது. இது ஏதோ பெருமைக்குரிய நிகழ்வு எனப் பலர் நினைக்கின்றனர். ஆனால் எதிர்காலத்தில் உலகத்தை அழிக்கப்போவதில் பெரும்பங்கு நம் இந்தியாவிற்க்குதான் என்பதில் எந்த ஐயமுமில்லை. ஏனெனில் சீனா வெளியிட்டிருக்கும் ஒரு செய்தி, '700வது கோடி குழந்தை எங்கள் நாட்டில்தான் பிறந்திருக்கும்... ஆனால் நாங்கள் 5 ஆண்டுகளுக்கு முன்னரே கடைபிடித்து வரும் கடுமையான மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுக் கொள்கையினால் அது நிகழவில்லை' என கூறியுள்ளது கவனிக்கத்தக்கது. உண்மையில்... இந்திய நிலப்பரப்பிற்க்கும் இங்குள்ள இயற்கை வளத்திற்க்கும் உகந்த மக்கள் தொகை வெறும் 20 கோடி மட்டுமே என்று ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது.  ஆனால் இருப்பதோ 120 கோடி.

நமது தலைவர்களில் சிலருக்கு இந்த உண்மைகள் தெரிந்திருந்தும் ஓட்டுக்காக, 'நாம் மனித வளத்தில் முன்னணியில் உள்ள நாடு எனவும் இந்திய மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் இளைஞர்கள் எனவும்' பெருமையாகக் கூறி வருகின்றனர். அவர்கள் வாரிசுகளை மட்டும் விவரமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி விட்டனர். மக்கள் தொகை 20 கோடி மட்டுமிருந்தால் ஐரோப்பிய நாடுகளைப் போல் நம்மில் பெரும்பாலோர் சொந்த வீடு, கார் மற்றும் நிம்மதியான வேலை என மகிழ்ச்சியாக வாழலாம். தற்போதைய நிலைமையில் இந்திய மக்க்ள் தொகையில் 40 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்க்குக் கீழ் உள்ளனர். இது போக 120 கோடிப் பேர் வெளியிடும் கழிவுகள் (அதுவும் நம் நாட்டில் இன்றும் கூட 99 சதவீத கிராமங்களில் ஓப்பன் டாய்லெட் தான்), அதனால் பரவும் நோய்கள்... இது ஒருபக்கம். இதுபோக அத்தனை பேருக்கும் தேவையான தண்ணீர், உணவு, சொந்த வீடு மற்றும் வேலை வாய்ப்புக்கெல்லாம் எங்கே போவது ?. இரயில் நிலையம், பேருந்து நிலையம், ரேசன் கடை, திரையரங்கு,  டாஸ்மாக் (நிம்மதியா ஒரு கட்டிங் அடிக்க முடியல) என எங்கே பார்த்தாலும் கூட்ட நெரிசல், தள்ளுமுள்ளு. இதனால் உண்டாகும் நேர விரயம். பிறகு எப்படி நாம் வல்லரசாவது? வாய்ப்பே இல்லை!. யாரவது 2020 என்று சொன்னால் நம்பாதீர்கள்!. ஏனெனில் 2021ல் அதாவது அடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 160 கோடிப் பேர் நமது நாட்டில் இருப்பார்கள் எனப் புள்ளிவிவரங்கள் பயமுறுத்துகின்றன. அதற்க்குள் இந்த நாட்டைவிட்டுத் தப்பித்து ஓட என்னைப் போன்ற உஷார் பேர்வழிகள் சிலர் முடிவெடுத்திருக்கிறோம். நம்மால வரிசையில் மணிக்கணக்காக நிற்க முடியாதுப்பா!

பெரும் மக்கள் வளம் நம்மிடம் உள்ளது என பெருமையடித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் சிறு மக்கள் தொகை கொண்ட நாடுகளிலுள்ள உலக வங்கி, ஐ.ம்.எஃப் போன்றவற்றில் கடன் வாங்குகிறோம். என்னவொரு முரண்பாடு?. மக்கள் தொகை அதிகமாக ஆக குற்றங்களும் அதிகரிக்கின்றன. இது வருடா வருடம் போலிஸ் வேலைக்கு ஆளெடுக்கும் எண்ணிக்கை அதிகரிப்பதை வைத்தே தெரிந்து கொள்ளலாம். உலகின் முன்னணி நாடுகளுக்கு இந்த உண்மைகள் தெரிந்திருந்தும் அவர்கள் சொல்லமலிருக்கக் காரணம் அவர்களின் பொருட்களை விற்க்கும் சந்தையாக மட்டும் நம்மைப் பார்ப்பதுதான்.  ஆகவே நன்றாக சிந்திப்பீர்! இரவு நேரங்களில் பாதுகாப்பாக செயல்படுவீர்!! ஒரு குழந்தையே போதுமப்பா!!!

Wednesday, 16 November 2011

KUNDUN (1997) - அமைதியான வரலாற்று சினிமா


1933ல் திபெத்தின் மதகுருவான 13வது தலாய் லாமா இறக்கிறார். அதன் பிறகு நான்கு வருடங்களுக்குப் பிறகு திபெத்தின் தொலை தூரக் கிராமத்திலுள்ள ஒரு இரண்டு வயது சிறுவனை 14வது தலாய் லாமாவாக அந்நாட்டின் அரசன் கண்டறிகிறான்.  அச்சிறுவனுக்குப் புத்த மதச் சடங்குகளின்படி பதவியேற்பு செய்து வைக்கிறார்கள். புத்தரின் போதனைகளும் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.  புத்த துறவிகள் திபெத்தில் இனி மன்னர் ஆட்சி வேண்டாமென்று முடிவெடுக்கிறார்கள். ஆட்சியில் இருக்கும் மன்னன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு அங்கேயே இறந்தும் போகிறான்.  இனி திபெத்தைப் பொறுத்தவரை தலாய்லாமாதான் தலைவர் என முடிவாகிறது.

இப்படியொரு அமைதியான சூழலில், ஒரு பெரும் சிக்கல் சீனா வடிவத்தில் வருகிறது. சீனா, திபெத்தைச் சொந்தம் கொண்டாடுகிறது. எவ்வித முன்னறிவிப்புமின்றி சீனப் படைகள், புத்த துறவிகளையும் பெண்களையும் கொல்கிறார்கள்...  உச்சகட்டமாக பிள்ளைகள் கையில் துப்பாக்கியைக் கொடுத்துத் தங்கள் பெற்றோரையே சுட்டுக் கொல்ல வைக்கிறார்கள்.  தலாய் லாமா அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பிற நாடுகளின் உதவியை நாடுகிறார்.  இது நடக்கும் காலம் 1950 என்பதால் எல்லா நாடுகளும் இரண்டாம் உலகப் போரிலிருந்து மீண்டு தங்களை மறு நிர்மாணம் செய்வதில் தீவிரமாய் இருக்கின்றன.  எனவே தலாய் லாமாவின் கோரிக்கையை யாரும் பொருட்படுத்தவில்லை.

சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என்ற பாணியில் தலாய் லாமா சீன அதிபர் மாவோவைச் சந்திக்கிறார்.  மாவோ சில நிபந்தனைகளை ஏற்குமாறு லாமாவை வற்புறுத்துகிறார்.  அரைமனதாக, லாமா சிலவற்றை ஏற்கிறார். ஆனால் அதன் பிறகும் சீனாவின் அக்கிரமங்கள் திபெத்தில் தொடர்கின்றன. இந்நிலையில் ஒரு நாள், சீன அதிகாரியொருவர் தலாய் லாமாவச் சந்தித்து சீன விவசாயிகள் 40000 பேரை திபெத்தில் குடியமர்த்த முடிவு செய்திருப்பதாகக் கூறுகிறார். இதனை லாமா ஏற்க மறுக்கிறார். இதனால் கோபமுற்ற சீனா திபெத்திற்க்குத் தனது படைகளை அனுப்பத் தயாராகிறது.

தலாய் லாமாவின் ஆலோசகர்கள் அவர் உயிருக்கு சீனவால் ஆபத்து நேரலாம்... எனவே இந்தியாவிற்க்குத் தப்பித்துப் போய் விடுமாறு யோசனை கூறுகிறார்கள். தலாய் லாமா தப்பித்தாரா...? இல்லையா...? மீதி உங்கள் பார்வைக்கு.

படத்துளிகள்...
தலாய் லாமாவாக நடித்திருக்கும் டென்சின் துதோப் சரோங்கின் அமைதியான நடிப்பால் நிஜ தாலாய் லாமாவை நம் முன் கொண்டு வருகிறார்.

படத்தின் உண்மையான கதாநாயகன் ஒளிப்பதிவாளர் ரோஜர் டெகின்சும் இசையமைப்பாளர் ஃபிலிப் கிலாசும் தான். பின்னியெடுத்திருக்கிறார்கள்.

திபெத்தின் பனி மலையுச்சிகளும் புத்த விகாரங்களும் படமாக்கப்பட்டிருக்கும் விதம் அசத்தலோ அசத்தல்.

பின்னணி இசை... குறிப்பாக இறுதியில் தலாய் லாமா தப்பிக்கும் காட்சியில் அந்த எட்டு நிமிடங்கள் ஒலிக்கும் இசை இருக்கிறதே... ம்கூம்...! அற்புதம்!

சீனாவின் அத்துமீறலை அமைதியான மீன் தொட்டியில் சிவப்புச் சாயம் கலக்கப்படுவதான குறியீடு காட்சியிலும் தலாய் லாமா டெலெஸ்கோப்பில் பார்க்கும் காட்சியிலும் இயக்குனர் மார்டின் ஸ்கோர்ஸ் உண்மையிலேயே நம் மனதில் ஸ்கோர் செய்கிறார்.

முக்கியமாக... படத்தின் கலை இயக்குனரும் காஸ்ட்யூம் டிசைனரும் இரண்டாவது கதாநாயர்கள்.

அடிக்கடி வரும் சாமியாடி காட்சிகளும்... மதச் சடங்குகளும் சற்று போரடிக்கின்றன.

கிளைமாக்ஸ்
1997ல் வெளிவந்த இந்தப்படம் ஆஸ்கார் மற்றும் கோல்டன் குளோப் போன்ற முக்கியமான விருதுகளுக்குப் பரிந்துரைக்கைப்பட்டுள்ளது. எனினும் அவ்விருதுகள் கிடைக்காதபட்சத்திலும் நம்மூர் ஃபிலிம் ஃபேர் பொல அமெரிக்காவின் பல முன்னணி விருதுகளைப் பெற்றுள்ளது. ஒளிப்பதிவு மற்றும் இசை போன்றவைகளுக்காக எதற்க்கும் பார்த்து வையுங்கள்.

Monday, 14 November 2011

THE POPE'S TOILET (2007) - விறுவிறுப்பான உலக சினிமா

  
நீங்கள் ஒரு சிறிய பின்தங்கிய ஊரில் வசித்து வருகிறீர்கள். உங்கள் ஊருக்கு ஒரு நாள் போப்பாண்டவர் வருகிறார் என்றால்... எவ்வளவு பரபரப்பாகும் என்பதை ஓர் அரசியலோடு காட்டும் படம்தான் 2007ல் வெளிவந்த 'தி போப்ஸ் டாய்லெட்' என்ற ஸ்பானிஷ் மொழித் திரைப்படம்.

உருகுவே-பிரேசில் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது மெலோ என்ற சிற்றூர். அங்கே வசிக்கும் மக்களில் சிலரின் தொழில்... பக்கத்து நாடான பிரேசிலிலிருந்து அத்தியாவசியப் பொருட்களை அதாவது மளிகை சாமான் முதல் மது பாட்டில் வரை கடத்தித் தங்களது ஊரிலுள்ள கடைகளில் கொடுப்பது. இதற்க்குக் கூலியாக அவர்களுக்கு ஒரு சிறு தொகை கிடைக்கும். அப்படி ஒரு கடத்தல்காரன்தான் பிடோ (சீசர் டிரன்கொசோ). அவனுக்குக் கார்மென் (விர்ஜினியா மெண்டெஸ்) என்ற மனைவியும் சில்வியா (விர்ஜினியா ருயிஸ்) என்ற மகளும் உள்ளனர். கடத்தல் என்றவுடன்... ஏதோ ஜீப்கள் அல்லது கார்கள் என நினைத்துக் கொள்ள வேண்டாம். வெறும் சைக்கிலிள்தான்... அதுவும் ஸ்டாண்ட்கூட இல்லாத சைக்கிள். கடத்தலில் ஈடுபடும் போது சில நேரம் எல்லைப்பகுதியிலுள்ள சுங்கச் சாவடி அதிகாரிகள் கண்ணில் பட்டுவிட்டால் அவ்வளவுதான்... எல்லாப் பொருட்களும் அம்பேல்.

பிடோவிற்க்கு எப்படியாவது ஒரு மோட்டார் பைக் வாங்க வேண்டுமென்று ஆசை. அப்படி வாங்கிவிட்டால் தனது 'தொழிலை' இன்னும் சிறப்பாகச் செய்யலாம் என நினைக்கிறான். இப்படிப்பட்ட சூழலில் ஒரு நாள்... அவ்வூருக்குப் போப் இரண்டாம் ஜான் பால் வருவதாக டி.வியில் செய்தி ஒளிபரப்பாகிறது. ஊரையே உற்சாகம் பற்றிக் கொள்கிறது. சிறு வியாபாரிகள் முதல் பெரிய கடைக்காரர்கள் வரை போப் வரும் நாளன்று எப்படியும் ஆயிரக்கணக்காரர்கள் வருவதால் வியாபாரம் களை கட்டும் என்று எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். பிடோவோ இந்த வாய்ப்பை எப்படியாவது பயன்படுத்தி பைக் வாங்கிவிடுவதில் தீவிரமாகிறான். அதன்படி ஒரு கட்டணக் கழிப்பறை கட்டினால்... போப்பைப் பார்க்க வருபவர்களில் சிலராவது அதைப் பயன்படுத்தினால்கூட கணிசமான தொகை தேறும். அது பைக் வாங்கப் போதுமானதாக இருக்கும் என முடிவெடுத்துத் தன் மனைவி மற்றும் மகளிடம் தனது திட்டத்தைக் கூறுகிறான்.


உள்ளூர் சுங்க அதிகாரியைச் சரிகட்டி கடத்தலைத் தீவிரப்படுத்துகிறான். சிறிது சிறிதாகக் கழிப்பறைக் கட்டிடம் நிறைவுபெறுகிறது. இதற்கிடையில் பிடோ சுங்க அதிகாரியுடன் ரகசியமாகப் பேசிக் கொண்டிருப்பதை அவன் மகள் பார்த்துவிட்டுத் தன் தாயிடம் கூறுகிறாள். இதனால் பிடோவிற்கும் அவன் மனைவிக்கும் சண்டை நடக்கிறது. இன்னும் கழிப்பறை சிங்க் வாங்கவில்லை. மனைவியுடனான மனஸ்தாபத்தால் அந்த அதிகாரி சொன்ன வேலையையும் செய்யாமல் வீட்டிலேயே இருக்கிறான். பொழுது விடிந்தால் போப் வந்து விடுவார். சிறிது நேரத்தில் அவன் மனைவி தன் மகளுக்காகச் சேர்த்து வைத்த பணத்தை அவன் முன்னால் வைக்கிறாள். பணத்தை எடுத்துக் கொண்டு இரவோடிரவாக சிங்க் வாங்க சைக்கிளில் புறப்படுகிறான். ஊரிலுள்ள அனைவரும் அவரவர்க்குத் தெரிந்ததை அதிக அளவில் தயாரித்து நடையோரக் கடைகளில் வைப்பதில் சுறுசுறுப்பாகச் செயல்படுகிறார்கள்.


சிங்க் வாங்கி வரும் வழியில் சைக்கிள் செயின் அறுந்துவிடுகிறது. எப்படியோ செயினை இணைத்து, சைக்கிளை விரைவாக அழுத்துகிறான். இங்கே ஊரில் அவன் மனைவியும் மகளும் கழிப்பறைக்கு வெளியே தண்ணீர், கண்ணாடி மற்றும் பிற பொருட்களுடன் பட படப்பாகக் காத்திருக்கின்றனர். பெருத்த ஆரவாரத்திற்க்கிடையே போப் வந்துவிட்ட செய்தி டி.வியில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. பிடோ வரும் வழியில்... எதிர்பாராதவிதமாக அந்த சுங்க அதிகாரி அவனைத் தடுத்து நிறுத்தி... சொன்ன வேலையைச் செய்யாததற்க்காக அவனது சைக்கிளைப் பறித்துக் கொள்கிறான். கழிப்பறை சிங்கைத் தோளில் சுமந்து கொண்டு ஒருவழியாக் ஊர் வந்து சேர்கிறான். சிங்கைக் கழிப்பறையில் பொருத்திவிட்டு மனைவி மகளோடு காத்திருக்கிறான். பிடோவின் ஆசை நிறைவேறியதா...? மீதி உங்கள் பார்வைக்கு.


படத்துளிகள்...
வாழ்க்கையில் நமக்கு மேல் நிலையில் இருப்பவர்கள் நம்மைச் சுலபமாக மிதித்துச் செல்வார்கள் என்பதை எவ்வித வசனமும் இல்லாமல் முதல் காட்சியிலேயே கதாநாயகன் சீசர் டிரன்கொசோவின் சைக்கிள் நிழலின் மீது மோட்டார் பைக் ஏறிச் செல்வது போலக் காட்டியிறுப்பது அற்புதம். சீசர் பைக்கில் போவது போல் கனவு காணும் போது அவனுக்குள் உண்டாகும் கிளர்ச்சியை வானத்தில் பறவைகள் பறக்கும் காட்சியோடு இணைத்திருப்பது அருமை.

சீசர் டிரன்கொசோவின் மனைவியாக விர்ஜினியா மெண்டெஸும் மகளாக விர்ஜினியா ருயிஸும் நடிக்கவில்லை... வாழ்ந்திருக்கிறார்கள். இறுதிக்காட்சியில் தன் தந்தை கழிப்பறையைப் பயன்படுத்துமாறு ஒவ்வொரு நபராகக் கெஞ்சும் காட்சியை டி.வியில் பார்த்துவிட்டு... விர்ஜினியா ருயிஸ் அமைதியாகக் கண்ணீர் விடும் காட்சி... நமக்கு மன உளைச்சல் உறுதி.

சீசர் சார்லோன் மற்றும் என்ரிக் ஃபெர்னாண்டஸ் என்ற இரண்டு இயக்குனர்கள் சேர்ந்து உருவாக்கியிருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை அவர்களில் ஒருவரான சீசர் சார்லோன் திறம்பட செய்திருக்கிறார். குறிப்பாக உருகுவே-பிரேசில் எல்லையின் பரந்த நிலப்பரப்புகளும்... அதிகாலையில் பரந்த வீதியை சீசர் கடக்கும் காட்சியும்... கவிதைகள்.

லோ பட்ஜெட் படம் என்பதால் போப் வரும் காட்சிகளை டி.வியில் காட்டியே சமாளித்திருப்பது இயக்குனர்களின் நல்ல ஐடியா!

பின்னணி இசைக்குப் பெரிதாக வேலையில்லை.

போப்பாண்டவர் வந்து சென்ற பின்பு தொலைக்காட்சியில் நிருபர் ஒருவர் இனி மெலோ ஊரிலுள்ள மக்களுக்கு அனைத்து வளங்களும் கிடைக்கும் எனப் பேசிக் கொண்டிருக்கும் போதே... சீசர் டிரன்கொஸ் ஒயின் பாட்டிலை டி.வியின் மீது வீசி எறியும் காட்சி நச் முடிவு.

க்ளைமாக்ஸ்
மே 8, 1988ல் உருகுவேவில் உள்ள மெலோ என்ற ஊரில் நடந்த இந்த உண்மைச் சம்பவம் என்ற டைட்டிலுடன் முடியும் இந்தப்படம் உலகளவில் சில விருதுகளை வென்றுள்ளது. சினிமா ரசிகர்க்ளுக்கு நல்ல விருந்து. மிஸ் பண்ணிடாதீங்க மக்கா...!