Monday, 14 November 2011

THE POPE'S TOILET (2007) - விறுவிறுப்பான உலக சினிமா

  
நீங்கள் ஒரு சிறிய பின்தங்கிய ஊரில் வசித்து வருகிறீர்கள். உங்கள் ஊருக்கு ஒரு நாள் போப்பாண்டவர் வருகிறார் என்றால்... எவ்வளவு பரபரப்பாகும் என்பதை ஓர் அரசியலோடு காட்டும் படம்தான் 2007ல் வெளிவந்த 'தி போப்ஸ் டாய்லெட்' என்ற ஸ்பானிஷ் மொழித் திரைப்படம்.

உருகுவே-பிரேசில் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது மெலோ என்ற சிற்றூர். அங்கே வசிக்கும் மக்களில் சிலரின் தொழில்... பக்கத்து நாடான பிரேசிலிலிருந்து அத்தியாவசியப் பொருட்களை அதாவது மளிகை சாமான் முதல் மது பாட்டில் வரை கடத்தித் தங்களது ஊரிலுள்ள கடைகளில் கொடுப்பது. இதற்க்குக் கூலியாக அவர்களுக்கு ஒரு சிறு தொகை கிடைக்கும். அப்படி ஒரு கடத்தல்காரன்தான் பிடோ (சீசர் டிரன்கொசோ). அவனுக்குக் கார்மென் (விர்ஜினியா மெண்டெஸ்) என்ற மனைவியும் சில்வியா (விர்ஜினியா ருயிஸ்) என்ற மகளும் உள்ளனர். கடத்தல் என்றவுடன்... ஏதோ ஜீப்கள் அல்லது கார்கள் என நினைத்துக் கொள்ள வேண்டாம். வெறும் சைக்கிலிள்தான்... அதுவும் ஸ்டாண்ட்கூட இல்லாத சைக்கிள். கடத்தலில் ஈடுபடும் போது சில நேரம் எல்லைப்பகுதியிலுள்ள சுங்கச் சாவடி அதிகாரிகள் கண்ணில் பட்டுவிட்டால் அவ்வளவுதான்... எல்லாப் பொருட்களும் அம்பேல்.

பிடோவிற்க்கு எப்படியாவது ஒரு மோட்டார் பைக் வாங்க வேண்டுமென்று ஆசை. அப்படி வாங்கிவிட்டால் தனது 'தொழிலை' இன்னும் சிறப்பாகச் செய்யலாம் என நினைக்கிறான். இப்படிப்பட்ட சூழலில் ஒரு நாள்... அவ்வூருக்குப் போப் இரண்டாம் ஜான் பால் வருவதாக டி.வியில் செய்தி ஒளிபரப்பாகிறது. ஊரையே உற்சாகம் பற்றிக் கொள்கிறது. சிறு வியாபாரிகள் முதல் பெரிய கடைக்காரர்கள் வரை போப் வரும் நாளன்று எப்படியும் ஆயிரக்கணக்காரர்கள் வருவதால் வியாபாரம் களை கட்டும் என்று எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். பிடோவோ இந்த வாய்ப்பை எப்படியாவது பயன்படுத்தி பைக் வாங்கிவிடுவதில் தீவிரமாகிறான். அதன்படி ஒரு கட்டணக் கழிப்பறை கட்டினால்... போப்பைப் பார்க்க வருபவர்களில் சிலராவது அதைப் பயன்படுத்தினால்கூட கணிசமான தொகை தேறும். அது பைக் வாங்கப் போதுமானதாக இருக்கும் என முடிவெடுத்துத் தன் மனைவி மற்றும் மகளிடம் தனது திட்டத்தைக் கூறுகிறான்.


உள்ளூர் சுங்க அதிகாரியைச் சரிகட்டி கடத்தலைத் தீவிரப்படுத்துகிறான். சிறிது சிறிதாகக் கழிப்பறைக் கட்டிடம் நிறைவுபெறுகிறது. இதற்கிடையில் பிடோ சுங்க அதிகாரியுடன் ரகசியமாகப் பேசிக் கொண்டிருப்பதை அவன் மகள் பார்த்துவிட்டுத் தன் தாயிடம் கூறுகிறாள். இதனால் பிடோவிற்கும் அவன் மனைவிக்கும் சண்டை நடக்கிறது. இன்னும் கழிப்பறை சிங்க் வாங்கவில்லை. மனைவியுடனான மனஸ்தாபத்தால் அந்த அதிகாரி சொன்ன வேலையையும் செய்யாமல் வீட்டிலேயே இருக்கிறான். பொழுது விடிந்தால் போப் வந்து விடுவார். சிறிது நேரத்தில் அவன் மனைவி தன் மகளுக்காகச் சேர்த்து வைத்த பணத்தை அவன் முன்னால் வைக்கிறாள். பணத்தை எடுத்துக் கொண்டு இரவோடிரவாக சிங்க் வாங்க சைக்கிளில் புறப்படுகிறான். ஊரிலுள்ள அனைவரும் அவரவர்க்குத் தெரிந்ததை அதிக அளவில் தயாரித்து நடையோரக் கடைகளில் வைப்பதில் சுறுசுறுப்பாகச் செயல்படுகிறார்கள்.


சிங்க் வாங்கி வரும் வழியில் சைக்கிள் செயின் அறுந்துவிடுகிறது. எப்படியோ செயினை இணைத்து, சைக்கிளை விரைவாக அழுத்துகிறான். இங்கே ஊரில் அவன் மனைவியும் மகளும் கழிப்பறைக்கு வெளியே தண்ணீர், கண்ணாடி மற்றும் பிற பொருட்களுடன் பட படப்பாகக் காத்திருக்கின்றனர். பெருத்த ஆரவாரத்திற்க்கிடையே போப் வந்துவிட்ட செய்தி டி.வியில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. பிடோ வரும் வழியில்... எதிர்பாராதவிதமாக அந்த சுங்க அதிகாரி அவனைத் தடுத்து நிறுத்தி... சொன்ன வேலையைச் செய்யாததற்க்காக அவனது சைக்கிளைப் பறித்துக் கொள்கிறான். கழிப்பறை சிங்கைத் தோளில் சுமந்து கொண்டு ஒருவழியாக் ஊர் வந்து சேர்கிறான். சிங்கைக் கழிப்பறையில் பொருத்திவிட்டு மனைவி மகளோடு காத்திருக்கிறான். பிடோவின் ஆசை நிறைவேறியதா...? மீதி உங்கள் பார்வைக்கு.


படத்துளிகள்...
வாழ்க்கையில் நமக்கு மேல் நிலையில் இருப்பவர்கள் நம்மைச் சுலபமாக மிதித்துச் செல்வார்கள் என்பதை எவ்வித வசனமும் இல்லாமல் முதல் காட்சியிலேயே கதாநாயகன் சீசர் டிரன்கொசோவின் சைக்கிள் நிழலின் மீது மோட்டார் பைக் ஏறிச் செல்வது போலக் காட்டியிறுப்பது அற்புதம். சீசர் பைக்கில் போவது போல் கனவு காணும் போது அவனுக்குள் உண்டாகும் கிளர்ச்சியை வானத்தில் பறவைகள் பறக்கும் காட்சியோடு இணைத்திருப்பது அருமை.

சீசர் டிரன்கொசோவின் மனைவியாக விர்ஜினியா மெண்டெஸும் மகளாக விர்ஜினியா ருயிஸும் நடிக்கவில்லை... வாழ்ந்திருக்கிறார்கள். இறுதிக்காட்சியில் தன் தந்தை கழிப்பறையைப் பயன்படுத்துமாறு ஒவ்வொரு நபராகக் கெஞ்சும் காட்சியை டி.வியில் பார்த்துவிட்டு... விர்ஜினியா ருயிஸ் அமைதியாகக் கண்ணீர் விடும் காட்சி... நமக்கு மன உளைச்சல் உறுதி.

சீசர் சார்லோன் மற்றும் என்ரிக் ஃபெர்னாண்டஸ் என்ற இரண்டு இயக்குனர்கள் சேர்ந்து உருவாக்கியிருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை அவர்களில் ஒருவரான சீசர் சார்லோன் திறம்பட செய்திருக்கிறார். குறிப்பாக உருகுவே-பிரேசில் எல்லையின் பரந்த நிலப்பரப்புகளும்... அதிகாலையில் பரந்த வீதியை சீசர் கடக்கும் காட்சியும்... கவிதைகள்.

லோ பட்ஜெட் படம் என்பதால் போப் வரும் காட்சிகளை டி.வியில் காட்டியே சமாளித்திருப்பது இயக்குனர்களின் நல்ல ஐடியா!

பின்னணி இசைக்குப் பெரிதாக வேலையில்லை.

போப்பாண்டவர் வந்து சென்ற பின்பு தொலைக்காட்சியில் நிருபர் ஒருவர் இனி மெலோ ஊரிலுள்ள மக்களுக்கு அனைத்து வளங்களும் கிடைக்கும் எனப் பேசிக் கொண்டிருக்கும் போதே... சீசர் டிரன்கொஸ் ஒயின் பாட்டிலை டி.வியின் மீது வீசி எறியும் காட்சி நச் முடிவு.

க்ளைமாக்ஸ்
மே 8, 1988ல் உருகுவேவில் உள்ள மெலோ என்ற ஊரில் நடந்த இந்த உண்மைச் சம்பவம் என்ற டைட்டிலுடன் முடியும் இந்தப்படம் உலகளவில் சில விருதுகளை வென்றுள்ளது. சினிமா ரசிகர்க்ளுக்கு நல்ல விருந்து. மிஸ் பண்ணிடாதீங்க மக்கா...!

1 comment:

விக்கியுலகம் said...

மாப்ள விமர்சனம் அருமை நன்றி...அதுவும் அழகுற சொன்ன பாங்குக்கு மீண்டும் நன்றி!

Post a Comment