Saturday 24 September 2011

THE WRONG MAN (1956) - ஹிட்ச்காக்கின் கிளாசிக்


சற்றுப் பணத்தட்டுப்பாடாக இருந்தாலும் மனதிற்க்குப் பிடித்த வேலை... மனைவி... இரண்டு குழந்தைகள் என அமைதியாகப் போகும் வாழ்க்கையில் திடீரென செய்யாத குற்றத்துக்காக உங்களுக்கு சிறைத்தண்டனை கிடைத்தால் எப்படி இருக்கும் ?. அப்படி பாதிக்கப்பட்டவனின் உண்மைக்கதைதான் 1956ல் வெளிவந்த ஹிட்ச்காக்கின் 'தி ராங்க் மேன்'.


நியூயார்க் நகரிலுள்ள ஸ்டோர்க் கிளப் எனப்படும் இரவு விடுதியில் ஃபிடில் வாசிக்கும் கலைஞனான ஹென்றி ஃபாண்டா வேலை முடிந்து அதிகாலை நேரத்தில் வீடு திரும்புவது வழக்கம். மனைவி வெரா மைல்ஸ், தனக்கு விஸ்டம் டீத் (அதாவது ஞானப்பல் என நம்மூரில் கூட பல் மருத்துவர்கள் கூறுவர்) வளர்கிறது எனவும் அதைப்பிடுங்குவதற்க்கு 300 டாலர் தேவைப்படுமென கணவன் ஹென்றி ஃபாண்டாவிடம் கூறுகிறாள். அவ்வளவு பணம் தன்னிடம் இல்லாததால் மனைவியின் இன்சூரன்ஸ் பாலிசியை அடமானம் வைத்துப் பணம் ஏற்பாடு செய்ய சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்திற்க்கு வருகிறான் ஹென்றி. அங்கு அவனைப் பார்க்கும் பெண் ஊழியை ஒருத்தித் தன் சக ஊழியையிடம், "அவனைப் பார்... அவன் ஏற்கனவே இங்கு வந்து நம்மை மிரட்டிக் கொள்ளை அடித்தவன் போல் உள்ளான்...' என்கிறாள். அவளும் உற்றுப்பார்த்துவிட்டு அதை உறுதி செய்கிறாள். பிறகு ஹென்றியிடம் திரும்பி வந்து, "பாலிசி உங்கள் மனைவி பெயரில் இருக்கிறது... எனவே அவளை அழைத்து வாருங்கள்..." என்கிறாள். அவன் சென்றபிறகு அந்த நிறுவன மேலாளரிடம் விசயத்தைக்கூறி போலிசுக்குத் தெரிவிக்கிறார்கள்.


அன்று இரவு பணி முடிந்து அதிகாலையில் வீட்டிற்க்குத் திரும்பும் ஹென்றி ஃபாண்டாவை வீட்டிற்க்குள் நுழையும் முன்பே வாசலில் காத்திருக்கும் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் செல்கின்றனர். அவன், அவர்களிடம் தன் மனைவியிடம் சொல்லிவிட்டு வந்து விடுகிறேன் என்கிறான். ஆனால் அவர்கள்... அதெல்லாம் வேண்டாம் இது வழக்கமான ஒன்றுதான்... விரைவில் திரும்பி விடலாம் என்று கூறி அவனைக் காரில் ஏற்றுகிறார்கள். பிறகு கொள்ளை நடந்த வேறு இரண்டு கடைகளில் அவனை அழைத்துச் சென்று அந்தக் கடைக்காரர்கள் முன்பு நடந்து காட்டச் சொல்கிறார்கள். ஆனால் அந்தக் கடைக்காரர்களோ இவன் தான் கொள்ளையடித்தான் என உறுதியாகக் கூற முடியாமல் குழ்ப்பமடைகிறார்கள். அதன் பின்பு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அந்த இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர்கள் முன்பு நாலைந்து குற்றவாளிகளோடு ஹென்றியையும் நிற்க வைத்து ஆளறிச் சோதனை நடத்துகிறார்கள். அவர்கள் மீண்டும் ஒரு முறை இவன் தான் என உறுதி செய்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக ஹென்றி ஃபாண்டாவின் கையெழுத்து அந்தக் கொள்ளையனின் கையெழுத்தோடு ஒத்துப் போகிறது. இது போதுமே...! அவன் சிறையில் அடைக்கப்படுகிறான்.

அவன் மனைவியோ தன் கணவன் வெகு நேரமாகியும் வீட்டிற்க்கு வராததால் அவளுடைய அண்ணனுக்கும் ஹென்றியின் தாயாருக்கும் தகவல் தெரிவிக்கிறாள். அவர்கள் வந்து ஒரு வழியாக அவன் கொள்ளைக் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளதை அறிகிறார்கள். 7500 டாலர்கள் ஜாமீன் தொகையைக் கட்டி அவனை வெளியில் எடுக்கிறார்கள். வெளிவந்தவுடன் ஹென்றி ஃபாண்டாவும் அவன் மனைவியும் வக்கீல் ஆன்டனி குவைலை சந்தித்து எப்படியாவது இந்தப் பொய் வழக்கிலிருந்து விடுதலை செய்யுமாறுக் கேட்கிறார்கள். அவர் அந்த கொள்ளைச் சம்பவங்கள் நடந்த நாட்களில் நீங்கள் எங்கு இருந்தீர்கள் எனக் கேட்கிறார். கணவனும் மனைவியும் தாங்கள் ஒரு ஹோட்டலில் விடுமுறையைக் குடும்பத்தோடுக் கழித்ததாகச் சொல்கிறர்கள். வக்கீல், அவர்களை அந்த ஹோட்டலில் தங்கி இருந்ததற்க்கான ஆதாரம் ஏதாவது இருந்தால் எளிதாக இந்த வழக்கை முடித்து விடலாம் என்கிறார்.

அவர்களிருவரும் ஹோட்டலில் விசாரிக்கிறார்கள். ஹோட்டல் முதலாளியும் அங்கிருக்கும் பணிப்பெண்ணும், "பலர் இங்கு வந்து தங்கிச் செல்கின்றனர்... எங்களுக்குச் சரியாக ஞாபகமில்லை" எனக் கைவிரிக்கிறார்கள். அப்பொழுது ஹென்றி ஃபாண்டாவிற்கு அந்தக் குறிப்பிட்ட நாளில் அவர்களோடு சீட்டு விளையாடிய இரண்டு நபர்களின் ஞாபகம் வருகிறது. அவர்களைத் தேடிச் செல்கிறார்கள். ஆனால் சொல்லிவைத்தாற் போல அவர்களிருவரும் உயிரோடு இல்லை. இதனால் மனமுடைந்த வெரா மய்ல்ஸ் மனச் சிதைவு நோய்க்குள்ளாகிறாள். குடும்ப நிம்மதி சீர் குலைகிறது. அவளை ஒரு மன நலக் காப்பகத்தில் சேர்க்கிறான் ஹென்றி. வீட்டிலுள்ள குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக ஹென்றியின் தாயார் வருகிறார். அவர் மகனை கடவுளிடம் நன்றாகப் பிரர்த்தனை செய்யுமாறுக் அறிவுறுத்துகிறாள்.

இறுதியாக உண்மையான குற்றவாளி ஒரு கடையில் கொள்ளையடிக்கும்போது பிடிபடுகிறான். அவன் ஏறக்குறைய உருவத்தில் ஹென்றியைப் போலவே இருக்கிறான். இறுதியில் ஹென்றி வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறான். அதற்க்குப் பிறகும் இரண்டு ஆண்டுகள் கழித்து தான் அவன் மனைவி பூரண குணமடைகிறாள். பிறகு அவர்கள் குடும்பத்தொடு ஃப்ளோரிடாவில் வசிப்பதான வாசகங்களோடு படம் நிறைவடைகிறது.

படத்துளிகள்...
முதன் முதலில் போலிஸ் ஹென்றி ஃபாண்டாவை வீட்டு வாசலில் வைத்து விசாரணைக்காகக் காரில் ஏற்றும் பொழுது வீட்டு சமையலறை ஜன்னலில் தெரியும் வெரா மைல்சின் நிழல்... நம் மனதைப் பிசையும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவனைக் காரில் ஏற்றிய பின், அருகிலிருக்கும் போலீஸ் ஒருவர் சுருட்டைப் பற்ற வைப்பார். இனி உனது வாழ்வில் நெருப்பு பற்றிவிட்டது என்பதன் குறியீடு அந்தக் காட்சி.

சிறைச்சாலையில் அடைக்கும் முன் முதன் முறை குற்றம் செய்து கைதானவர்களுக்கான நடைமுறையான கைரேகையைப் பதிந்து எடுத்த பின்... ஹென்றி, கறுப்பு மை படர்ந்துள்ள தன் உள்ளங்கைகளைப் பார்ப்பது... ஒரே இரவில் அவன் வாழ்க்கை கறுமையடைந்துவிட்டது என்பதைக் காட்டும் அருமையானதொரு காட்சி.

ஹென்றி தனது வாழ்க்கைப் பின்னணியை வக்கீலின் உதவியாளரிடம் சொல்லும் பொழுது அவ்வுதவியாளர் எழுதும் காகிதத்தின் மீது ஓடுகின்ற இரயிலின் நிழலைக் காட்டுவது கவிதை.

சிறையில் ஹென்றியை அடைத்து விட்டுக் கதவை மூடியபின் அக்கதவிலுள்ள சிறு ஜன்னலின் வழியாக அவன் முகத்தை மட்டும் காட்டும் குளோசப் காட்சி அசத்தல்.

இறுதிக் காட்சியில் உண்மையானக் குற்றவாளியைப்பார்த்து ஹென்றி பேசும் அந்த ஒற்றை வசனம் ஃபன்டாஸ்டிக் (நம்மூர்ப் படங்களாக இருந்தால் வசனம் பேசியே கொன்றிருப்பார்கள்...)

எந்தத் தவறும் செய்யாதவன் போலிசிடம் சிக்கினால் ஏற்படும் மனவேதனையைக் கண்களிலேயே வெளிப்படுத்தும் ஹென்றி ஃபாண்டா, கலகலப்பான குடும்பத் தலைவியாகவும் மன நிலை பாதிக்கப்பட்டவராகவும் அசத்தியிருக்கும் வெரா மைல்ஸ், சீரியசாக இல்லாமல் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் வழக்கை நடத்தும் வக்கீல் ஆண்டனி குவைல் ஆகியோரின் நடிப்பு இப்படத்திற்க்கு வேறு நடிகர்களை யோசிப்பதற்க்கு இடம் தராமல் செய்கிறது.

இது கறுப்பு-வெள்ளைப்படம் என்பதையே மறக்கச் செய்யும் ராபர்ட் பர்க்சின் ஒளிப்பதிவு... காட்சிக்குக் காட்சி பதற்றத்தை அதிகரிக்கும் பெர்னார்ட் ஹெர்மேனின் பின்னணி இசை போன்றவை படத்திற்க்கு மிகப் பெரிய பலம்.

க்ளைமாக்ஸ்
வணிக ரீதியாகத் தோல்வியடைந்தாலும் ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்கின் இந்த க்ளாசிக் படம் பார்த்து முடித்த பிறகும் நம் மனதை விட்டு அகல சில நாட்களாகிறது. சினிமா ஆர்வலர்கள் மட்டுமல்ல... அனைவரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய அற்புதமான படம்.

Monday 19 September 2011

பணம் அண்டர்கிரவுண்ட் வரை பாயும்


1952ல் வெளிவந்த 'பராசக்தி' படத்தில் வரும் "தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம் காசு முன் செல்லாதடி..." என்று தொடங்கும் பாடலிலுள்ள ஒவ்வொரு வரிகளும் இப்பொழுதும் எவ்வளவு உயிரோட்டத்தோடு இருகின்றது என்பதை நினைத்தால் வியப்பாக உள்ளது. எடுத்துக்காட்டாக சில வரிகள் மட்டும்...

நல்லவரானாலும் 'இல்லாதவரை' நாடு மதிக்காது...
(நிகழ்காலம் :- உறவினர் நிகழ்ச்சிகளில் அளிக்கப்படும் வரவேற்பு வித்தியாசங்கள்)

கல்வி இல்லாத மூடரை கற்றோர் கொண்டாடுதல் வெள்ளிப்பணம் அடியே...
(நிகழ்காலம் :- ஒரு மயி.....க்கும் லாயக்கில்லாத பணம் படைத்த கல்வித்தந்தைகள் விழாக்களில் புகழப்படுதல்)

உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே...
காசுக்கு உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே...
(நிகழ்காலம் :- பணம் கைக்கு வரும் வரை பொறுமை காத்துப் பின் அது வந்த பிறகு தனது வஞ்சகத்தை வெளிப்படுத்தும் பலர்)

சில முட்டாப் பயல எல்லாம் தாண்டவக்கோனே...
காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே...
(நிகழ்காலம் :- இது பல நிறுவனங்களில் இன்று மட்டுமல்ல... என்றும் காணலாம்)

கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே...
பிணத்தைக்கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே...
பணப் பெட்டி மேலே கண் வையடா தாண்டவக்கோனே...
(நிகழ்காலம் :- சொத்துக்குரியவர் இறந்து விட்டால் அவரை அடக்கம் செய்வதற்கு முன்பே அவரது வாரிசுகள் போடும் கேவலமான சண்டைகள்)

இதைவிட உச்சகட்டமாகப் பெற்றோரே தன் மகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது மற்றும் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தைகள் பிச்சை எடுப்பதற்காகக் கடத்தப்படுவது போன்ற நிகழ்வுகளைப் பார்க்கும் பொழுது பணத்தின் வீரியம் நம் முகத்தில் அறையும்.

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்... "வாழ்க்கைக்குப் பணம் முக்கியமல்ல... அன்புதான் முக்கியம்", என்று கோடி கோடியாய்த் தங்க்கக்கட்டிகளையும் பணத்தையும் குவித்து வைத்துக் கொண்டு குஷன் சிம்மாசனத்தில் அமர்ந்து போஸ் கொடுக்கும் போலிச் சாமியார்களின் வெற்று உபதேசங்களை நம்பாதீர்...!

அக்கால 'பராசக்தி' முதல் இன்றைய 'வானம்' வரை சொல்லும் செய்தி இதுதான்... "பணம்... பணம்... பணம்... அது இல்லையினா பொணம்..."

Monday 12 September 2011

முதல் மரியாதை


என்னை எழுதத் தூண்டிய... என்றும் எனது வணக்கத்திற்குரிய - பெரியார், சுஜாதா, வைரமுத்து ஆகியோருக்கு நன்றி ! நன்றி !! நன்றி !!!

அன்னா ஹசாரேவும் மெழுகுவர்த்தி விற்பனையும்

அண்மையில் நாடு முழுவதும் எழுச்சியை ஏற்படுத்திய என்று ஊடகங்களால் ஊதிப்பெரிதாக்கப்பட்ட அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதம் சில கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலனைக்கு எடுப்பதாகக் கூறியதால் கைவிடப்பட்டது. ஊழல் ஒழிய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது. இதுமாதிரியான போரட்டங்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற உண்மையான ஜனநாயகம் இருக்கும் நாடுகளில் வேண்டுமானால் எடுபடும். உதாரணத்திற்க்கு மோனிகா லெவின்ஸ்கி என்ற சப்பை மேட்டருக்காக உலகின் பெரும்பாலான நாடுகளின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பவர்ஃபுல்லான அமெரிக்க ஜனாதிபதி கிளின்டனை கூண்டில் ஏற்றினார்கள். ஆனால் இந்தியா போன்ற போலி ஜனநாயகம் உள்ள நாட்டில் இதெல்லாம் வெறும் உணர்ச்சியைத்தூண்டும் வேலையன்றி வேறொன்றுமில்லை.

மேலும் பல்வேறு மொழிகள், மதங்கள் மற்றும் எண்ணிலடங்கா ஜாதிகள் உள்ள நாட்டில் மக்களை எவ்வாறு ஒருங்கிணைக்க முடியும் ? வாய்ப்பே இல்லை...! அப்படி ஒருங்கிணைக்க முடிந்திருந்தால் இலங்கையில் வழிந்தோடிய குருதியை தடுத்து நிறுத்தி இருக்கலாமே...! நமது நாட்டைப்பொறுத்தவரை அரசியல்வாதிகள் எப்பொழுதுமே ஒரு பாதுகப்பான வளையத்தில் இருப்பர்கள். அந்த வளையத்திற்குள் யாராவது நுழைய முற்பட்டால் பாபா ராம்தேவுக்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும். அந்தக்கால போஃபர்ஸ் முதல் இந்தக்கால் காமன்வெல்த் வரை இதுதான் நிதர்சனம். சரி ! ஊழலை ஒழிக்க வேறு என்னதான் வழி ? திருடனாய்ப்பாத்து திருந்தாவிட்டல் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகள்தான் எனக்குத்தெரிந்த ஒரே வழி !

அன்னாவின் போராட்டத்தால் மெழுகுவர்த்தி விற்பனை வேண்டுமானால் அதிகரிக்கலாம். மற்றபடி வடிவேலு பாணியில் போய் பிள்ளைகளைப் படிக்க வைங்கைய்யா... சும்மா கப்பித்தனமாப் பேசிக்கிட்டு...