Saturday, 2 February 2013

பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறாவிட்டாலோ / தோல்வியடைந்தாலோ...


முன் குறிப்பு : இது மாணவர்களுக்கு மட்டுமல்ல... பெற்றோர்களுக்கும் சேர்த்து தான்.

பத்து மற்றும் +2 பொதுத் தேர்வுகளுக்காக மாணவர்கள் தயாராகிக் கொண்டிருக்கும் நேரமிது.  இப்பதிவின் நோக்கம் படிப்பை மட்டம் தட்டுவதன்று... மாறாகத் தேர்வில் தோல்வியடைந்தாலோ அல்லது எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெறாவிட்டாலோ என்ன ஆகிவிடப் போகிறது? என்ற வினாவை எழுப்புவது!நண்பன் படத்தில் விஜய் பேசும் "இது காலேஜா? இல்ல... பிரஷர் குக்கரா?" என்று ஒரு வசனம் வரும்.  அதைப் போல் தான் இருக்கிறது இன்றைய கல்வி முறை.  இன்று பல பள்ளிகளில் +1 வகுப்புகளிலேயே +2 பாடங்களை நடத்த ஆரம்பித்து விடுகிறார்கள்.  அங்கிருந்து ஆரம்பமாகும் அழுத்தம் தேர்வு முடிவு வெளியாகும் நாளில் சில தற்கொலைகளோடு முடிகிறது.  படிப்பு மட்டும் தான் வாழ்க்கையை உயர்த்தும் ஒரே கருவி என்பது போல் நம் சமூகத்தில் அழுத்தமாகக் கற்பிக்கப்படுகிறது.  இதை முற்றிலும் மறுப்பதே எனது நோக்கம்! அதற்கு வலு சேர்க்கும் தரவுகளாக மேலை நாட்டு எடுத்துக்காட்டுகளைக் காட்டி உங்களை ஏமாற்ற விருப்பமில்லை.  ஏனெனில் அங்குள்ள கலாசாரம், பண்பாடு, கல்வி படிநிலைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் என்பது முற்றிலும் வேறு... நமது நாட்டுக்கும் அவர்களுக்கும் ஏணி அல்ல கிரேன் வைத்தால் கூட எட்டாது.  ஆகவே நமது சாம்பிள்கள் சில... இவர்கள் அனைவரும் பெரும்பாலும் பள்ளிப் படிப்பையே தாண்டாதவர்கள்!

1. சச்சின் டெண்டுல்கர்
இவரைப் பற்றிய அறிமுகம் தேவையில்லை. ஒரே வார்த்தையில் சொல்வதானால் 'கிரிக்கெட்டின் குல தெய்வம்'.  சொத்து மதிப்பு :- 500 கோடிக்கும் மேல்


2. எம்.எஃப். ஹூசைன்
'இந்தியாவின் பிகாசோ' என்ற அடைமொழிக்குச் சொந்தக்காரர். ஆரம்ப நாட்களில் மும்பையில் சினிமா விளம்பரங்களுக்கு படம் வரைந்து கொண்டிருத்தவர்.  2008ம் ஆண்டு இவரது ஒரு ஓவியம் மட்டும் 7 கோடி ரூபாய்களுக்கு ஏலம் போனது.  என்னதான் ஐ.ஐ.டி & ஐ.ஐ.எம் களில் படித்தாலும் சம்பாதிக்க முடியாத தொகை.

3. சாலிம் அலி
இந்தியப் பறவையியலின் தந்தை.  மறைந்த பாரதப் பிரதமர் இந்திராகாந்தி இவரது புத்தகங்களின் ரசிகை.  இந்திய மற்றும் உலக அளவில் புகழ்பெற்ற 19 விருதுகளைப் பெற்றவர்.

4. ஜெர்ரி மார்ட்டின்
தெற்காசியாவில் ஊர்வன பற்றிய ஆராய்ச்சியில் முக்கியப் பங்காற்றுபவர்.  நேஷனல் ஜியாகிரஃபி சேனலில் பாம்புகள் பற்றிய நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளர்.  பல முனைவர் பட்ட ஆராய்ச்சிகள் இவரது தலைமையில் நடக்கின்றன.  ஆனால் இவரோ +2 ஃபெயில்!

இன்னும் ஒரு புத்தகமே எழுதும் அளவிற்குப் பல எடுத்துகாட்டுக்களைக் கூற முடியும்.  ஆனால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல மேலே உள்ளவர்களே போதும் என நினைக்கிறேன். 120 கோடி பேர் உள்ள இந்தியாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருக்கு மட்டுமே இந்த வாய்ப்புகள் கிடைக்கின்றன... மற்றவர்களுக்கெல்லாம் சான்சே இல்லை! என்பது பலரது வாதம்.  இதற்கு விடை கூறுவது போலக் 'கற்றதும் பெற்றதும்' புத்தகத்தில் சுஜாதா தன் பள்ளிக் கால நிகழ்ச்சி ஒன்றை இவ்வாறு குறிப்பிடுகிறார்...
"எங்களது வகுப்பில் எப்பொழுதும் முதல் ரேங்க் வாங்கும் மாணவன் பிற்காலத்தில் ஏ.ஜி. அலுவலகத்தில் அக்கௌன்ட்டன்ட்டாகப் பணிபுரிந்தான்.  கடைசி ரேங்க் வாங்கும் மாணவன் ஐ.நாவில் வேலைக்குச் சேர்ந்தான்.  இதில் ஏதோ இருக்கிறது" என்று அந்தக் கட்டுரையை முடித்திருப்பார். அந்த "ஏதோ" ஒன்று என்ன என்பதில் வெளிச்சம் பாய்ச்சினால் படிப்பு மட்டும் தான் வாழ்க்கை என்ற சித்தாந்தம் உடையும்!

No comments:

Post a Comment