Friday, 8 February 2013

வானில் பறக்கும் புள்ளெலாம்...


இந்நூலை தமிழின் மிக முக்கியமான சுற்றுச்சூழல் எழுத்தாளரும் சினிமா ஆய்வாளருமான சு. தியடோர் பாஸ்கரன் எழுதியுள்ளார். சுற்றுச்சூழல் வரிசையில் இது இவரது மூன்றாவது நூலாகும். புவி வெப்பமடைதலும் நிலத்தடி நீர் மட்டம் குறைவதும் ஒவ்வொரு ஆண்டும் தீவிரமாகி வரும் நிலையில் தமிழில் இது போன்ற நூல்கள் மிக அவசியமாக வாசிக்கப்பட வேண்டும். சென்ற வாரம் திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் வலம் வந்த போது கவனித்தால் கவிதைகள், நாவல்கள், சமையல் கலை, ஜோதிடம் மற்றும்
வாஸ்து போன்ற நூல்களையே மக்கள் விரும்பி வாங்குவது தெரிந்தது. இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த புத்தகங்கள் கேட்பாரற்றுக் கிடந்தன. ஒரு முறை திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருக்கும் விஜயா புத்தகக் கடை ஊழியரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது புத்தக் விற்பனை பற்றி அவர் சொன்ன தகவல் அதிர்ச்சியாக இருந்தது. மாந்திரீகம் மற்றும் வசியம் செய்வது எப்படி? போன்ற மூட நம்பிக்கை சார்ந்த புத்தகங்களே அதிகம் விற்பதாகத் தெரிவித்தார். எங்கே போய்க் கொண்டிருக்கிறது உலகம்?

நாம் ஏதோ முனைவர் பட்டம் பெறும் அளவிற்குத் தெரிந்து கொள்ளாவிட்டாலும் ஓரளவாவது நம்மைச் சுற்றி நடக்கும் சூழலியல் மாற்றங்கள் பற்றியப் புரிதலோடு இருப்பது நல்லது. இதைப்பற்றி இந்நூலில் 'வீட்டைச் சுற்றியும் காட்டுயிர்' என்ற கட்டுரையில் பல நுட்பமானத் தகவல்களைப் பதிவு செய்துள்ளார். நாம் காகம், குருவி மற்றும் மைனா போன்றவற்றின் நடவடிக்கைகளைக் கூட கவனிக்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இக்கட்டுரை நாம் கவனிக்கத் தவறிய பல விஷயங்களைச் சுட்டிக் காட்டுகிறது. எடுத்துக்காட்டாகக் கட்டுரையிலிருந்து...
"வீட்டின் முன்புறத்தில் பூந்தோட்டமும் பின்புறம் காய்கறித் தோட்டமும் போட்டிருக்கின்றோம். மூன்றாவது மாதம் முதலே எங்களுக்கு வேண்டிய காய்கறிகள் இந்தத் தோட்டத்திலிருந்து கிடைக்கின்றன. 3 கிலோ வெள்ளரிக்காயைப் பார்க்க பக்கத்து வீட்டு ஆட்கள் வந்தனர். படம் எடுத்து மின்னஞ்சலில் நண்பர்களுக்கு அனுப்பினோம். பூந்தோட்டத்தில் பல பட்டாம்பூச்சிகளைப் பார்க்கலாம். பட்சிகளுக்கு தனித்தனி பெயர் இருப்பதுபோல் தமிழில் வண்ணத்துப் பூச்சிகளுக்குப் பெயர்கள் இல்லை. ஆங்கிலப் பெயர்களைத்தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கின்றது. தோட்டத்தில் மானார்க் (Monarch), காமன் மார்மன் (Common Mormon) போன்ற பட்டம்பூச்சிகளை அடிக்கடிக் காண முடிகின்றது. சில இன பட்டம் பூச்சிகள் பறவைகள் போல வலசை போகும் பழக்கம் உடையவை. ஒரு மாலை வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போது காமன் ஜெசபெல் (Common Jezebel) எனும் மஞ்சள் சிவப்பு பட்டாம்பூச்சிகள் ஆயிரக்கணக்கில்... ஆம் ஆயிரக்கணக்கில் தான்... காற்றில் மிதந்து செல்வதைப் பார்க்க முடிந்தது..." என்று போகிறது அந்தக் கட்டுரை.

ஒரு துறை சார்ந்த நூல்கள் என்றாலே வறட்சியான நடையிலிருக்கும் என்று நாம் மிரட்சி கொள்ளாத வகையில் மிக எளிமையான அதே சமயத்தில் விறுவிறுப்பான நடையில் பல அரிய தகவல்களை எழுதியுள்ளார். 'காடும் மனிதரும்' என்ற கட்டுரை சுற்றுச்சூழலியலைப் பற்றிய ஓர் பரவலான அறிமுகத்தைத் தருகிறது. அதேபோல் சுற்றுச்சூழல் சட்டங்களைப் பற்றிய ஆசிரியரின் நேர்காணல் மற்றும் தமிழ்மொழியும் சூழலியல் இயக்கமும் போன்ற முக்கியமான கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.  பல கருப்பு வெள்ளைப் புகைப்படங்களும் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளது மேலும் சிறப்பு.  தமிழ் தெரிந்த ஒவ்வொருவரும் நிச்சயம் தவறவிடக்கூடாத புத்தகம்!

நூல்            : வானில் பறக்கும் புள்ளெலாம்...
ஆசிரியர்  : சு. தியடோர் பாஸ்கரன்
விலை       : ரூ. 115/-
வெளியீடு : உயிர்மை பதிப்பகம், சென்னை
                        தொலைபேசி : 044-24339448

2 comments:

கோமதி அரசு said...

வானில் பறக்கும் புள்ளெலாம்..//
படிக்க ஆவலை தூண்டி விட்டது உங்கள் பதிவு.

நான் காலையில் மொட்டை மாடியில் ஒரு கைபிடி அன்னத்தை வைத்து விட்டு அங்கு வரும் பலதரப்பட்ட பறவைகளை பார்த்து மகிழ்வேன்.
மைனா, தவிட்டுக்குருவி, புப் புல், வாலாட்டி குருவி, கருங்குருவி. புறா காக்கா, எல்லாம் வரும் சில் சமயம் பருந்துகூட வரும். அணில் வந்து சாப்பிடும். கொக்கு, கிளி எல்லாம் கூட்டமாய் வானத்தில் பறந்து போகும்.

நேரம் போவதே தெரியாது காலை கடமைகள் இருப்பதால் கீழே வர மனசு இல்லாமல் வருவேன்.

சித்திரவீதிக்காரன் said...

தியடோர் பாஸ்கரனின் 'இன்னும் பிறக்காத தலைமுறைக்காக' என்னும் நூல் வாசித்திருக்கிறேன். இயற்கை மீதான காதலை அதிகப்படுத்தும் நூல்.

மகாகவி பாரதியின் கவிதை வரியைத் தலைப்பாக கொண்ட நூல் சிறப்பாகயிருக்கும் என்பதில் ஐயமில்லை.

நூல் குறித்த தங்கள் பகிர்விற்கு நன்றி.

Post a Comment