Wednesday, 13 February 2013

அமிலம் - ஒரு சிறுகதை முயற்சி

பாபு ஏதோ பைக் ரேஸ் போல பறந்து கொண்டிருந்தான். மனம் முந்தைய நாள் சம்பவத்தால் துவண்டு போயிருந்தது. அதை நினைக்க நினைக்கக் கடும் சினம் தலைக்கேறியது. ஆறு மாதமாக அலைந்து கடைசியில் அது இல்லையென்று ஆன பின்பு தோன்றிய எரிச்சல். கல்லூரி முதலாண்டு படிப்பவனுக்கு வேறு என்ன... காதல் தான்! திவ்யா பெரிய அழகியில்லை. இருந்தாலும் அவனுக்கு அவள் அழகு! பாபு வகுப்பில் சேர்ந்து ஒரு வாரம் கழித்துதான் திவ்யா வந்து
சேர்ந்தாள். அவளைப் பார்த்த முதல் நாளே இளையராஜாவின் வயலின் அவன் மனதில் ஒலித்து... அது காதல் தான் என உறுதிப்படுத்தியது. அதன் பிறகு ஜாடை மாடையாகத் தன் காதலை அவளிடம் தெரிவித்துப் பார்த்தான். அதை அவள் உணர்ந்ததாகவேத் தெரியவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து நேற்று கல்லூரி முடிந்த பின்பு டூ வீலர் பார்க்கிங்கில் தன் காதலை அவளிடம் நேரிடையாகவேப் போட்டுடைத்தான். அவள் விக்ரமன் படம் போல் நீண்ட வசனம் பேசாமல், 'உருப்படுற வழியைப் பாரு!' என ஒற்றை வரியில் பட்டென்று கூறி விட்டு மின்னல் வேகத்தில் புறப்பட்டு விட்டாள்.

திவ்யாவின் அப்பா ஒரு பன்னாட்டு மருந்து நிறுவனத்தில் பெரிய பார்மசிஸ்ட்டாகப் பணிபுரிகிறார். ஐந்திலக்கச் சம்பளம். தன்னைப் போலவே மகளையும் பார்மசிஸ்ட்டாக்க வேண்டுமென பள்ளிப் பிராயத்திலிருந்தே அவள் மனதில் சொல்லிச் சொல்லி வளர்த்துள்ளார். படிப்பைத் தவிர வேறெதிலும் அவள் கவனம் இருந்ததில்லை. இந்தப் பின்னணி தெரியாத பாபு அவளிடம் மூக்குடைபட்டு விட்டான். காதலைச் சொன்னது தவறா...? பிடிக்கவில்லையென்றால் நாகரிகமாக மறுத்திருக்கலாமே...! தன்னை ஏதோ பொறுக்கி போல நினைத்து இப்படி எடுத்தெறிந்து பேசி விட்டாளே...!! - பல வித மன அலைகழிப்புகளோடு வண்டியை முறுக்கினான். அவளைப் பழி வாங்காமல் விடக்கூடாது! என மனதிற்குள் கறுவினான்.

தன் ஆற்றாமையை யாரிடமாவது கொட்ட வேண்டும் போலிருந்தது. அலைபேசியில் சேகர் என்ற பெயரை அழுத்தினான்.
'டேய் மாப்ள...! எங்கடா இருக்க?'

'கிரவுண்ட்ல... ஏன்டா?

'ஒரு முக்கியமான மேட்டர்... நம்ம டாப்புக்கு வரமுடியுமா?'

'பிராக்டிஸ்ல இருக்கேன். அரை மணி நேரத்துல வர்றேன்! வெயிட் பண்ணு!!'

'ஓ.கேடா'. லைனைத் துண்டித்து விட்டு 'டாப்' என சொல்லப்படும் ஒரு குறிப்பிட்ட பேக்கரியில் காத்திருந்தான்.

சிறிது நேரத்தில் சேகர் வந்தான். பாபு வாயைத் திறக்கும் முன்பே, 'கங்கிராட்ஸ் மச்சி! நீ என்ன சொல்ல வர்றேன்னு எனக்கு ஏற்கனவே தெரியும்' என்றான் சேகர்.

'என்ன...?'

'நேத்து ஈவ்னிங் பார்க்கிங்ல பார்த்தேன். நீ திவ்யாகூட நின்னுக்கிட்டிருந்த... டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு நான் கிளம்பி வந்துட்டேன்... க்ளிக்காயிருக்கும் வேறென்ன...?'

'அட ஏன்டா வெறுப்பேத்துற... மூஞ்சில அடிச்ச மாதிரி பேசிட்டா மாப்ள... அவளை சும்மா விடக்கூடாதுடா...!'

'அய்யய்யோ...! ஆறு மாசம் வேஸ்ட்டா...?'

'அதான் மாப்ள! அவளை ஏதாவது பண்ணனும்டா...!!'

'மச்சி! ஏடாகூடாம ஏதாவது பண்ணி வம்புல மாட்டிக்கிதாடா...! காதல்ன்றது...' என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தான் சேகர்.

மூடு! என்பது போல் சைகை செய்து வண்டியை ஸ்டார்ட் செய்தான் பாபு.

'டேய் மச்சி!' ஹேண்டிலில் கை வைத்தான் சேகர்.

'போடா...! பயந்தாங்கொள்ளி! உங்கிட்டப் போய் அட்வைஸ் கேட்க வந்தேன் பாரு! என்னைச் சொல்லனும்' என அவன் கையைத் தட்டிவிட்டுப் புறப்பட்டான்.

பாபுவின் பைக் நின்ற இடம் - ஸ்டார் கெமிக்கல்ஸ். கடைகாரரிடம் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயரைச் சொல்லி 'ஹைட்ரோகுளோரிக் ஆசிட் ஐநூறு எம். எல். ஒரு பாட்டில் கொடுங்க' என்றான்.
பாட்டிலை வாங்கி பைக் கவரில் கவனமாக வைத்தான். அலைபேசி ஒலித்தது. பாபுவின் அம்மா... வேண்டா வெறுப்போடு எடுத்தான்.
'டேய் எங்கடா போயிட்ட... எவ்வளவு நேரம் தான் காத்திருக்கிறது... பாத்ரூமெல்லாம் ரொம்ப வழுக்குதுன்னு ஆசிட் வாங்கிட்டு வான்னு அனுப்பிச்சா இன்னும் என்னதான் பண்ணிட்டிருக்க...?'

'வாங்கிட்டேம்மா... வந்திட்டேயிருக்கேன்!'

'சீக்கிரம் வாடா! இன்னிக்கு சனிக்கிழமை பெருமாள் கோயில்ல கூட்டமா இருக்கும். க்ளீன் பண்ணிட்டு குளிச்சிட்டு நடை சாத்துறதுக்குள்ள போகணும்'

'சரி!' லைனைத் துண்டித்தான்.

அப்போ! திவ்யாவைப் பழி வாங்குவது... அந்த எண்ணத்தைச் சற்று முன்பு தான் கைவிட்டான்.  அதே வகுப்பில் கீதா என்றொரு பெண் இருக்கிறாள். முயற்சிகள் தொடரும்...!

(படம் : கூகுள் இமேஜஸ்)

1 comment:

கோமதி அரசு said...

நல்ல திருப்பம் கதையில்.

மச்சி! ஏடாகூடாம ஏதாவது பண்ணி வம்புல மாட்டிக்கிதாடா...! காதல்ன்றது...' என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தான் சேகர்.//
நல்லதை எடுத்து சொல்லும்
நல்ல நண்பன் வாழ்க!

அப்போ! திவ்யாவைப் பழி வாங்குவது... அந்த எண்ணத்தைச் சற்று முன்பு தான் கைவிட்டான். அதே வகுப்பில் கீதா என்றொரு பெண் இருக்கிறாள். முயற்சிகள் தொடரும்...!//


மாறிய நெஞ்சம் வாழ்க!Post a Comment