Thursday, 14 February 2013

கறுப்பு கிறிஸ்துவும் வெள்ளைச் சிங்கங்களும்

 
இது நிலவியலாளர் சு.கி. ஜெயகரன் எழுதிய நூல். இவர் நிலவியல் துறையைச் சேர்ந்தவராக இருந்த போதும் பல துறைகளில் ஆர்வமுடையவர் என்பது இந்நூலைப் படிக்கும் பொழுது புலனாகிறது; வியப்பாகவும் இருக்கிறது. அவ்வளவு விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. சுற்றுச்சூழல், கென்யாவின் வங்காரி மாதய், மியான்மரின் ஆங்சான் சூகி, காமிக்ஸ், பாறை ஓவியங்கள், அணு உலை என கலந்து கட்டி எழுதியிருக்கிறார்.


உலகப்புகழ்பெற்ற டின்டின் காமிக்ஸ் கதைகளைப் பற்றிய கட்டுரையில் உள்ள செய்தி காமிக்ஸ் படிக்கும் நமக்கு ஓர் அதிர்ச்சியை அளிக்கிறது. டேவிட் என்ரைட் என்பவர் இங்கிலாந்தில் டின்டின் காமிக்ஸ் புத்தகத்தை வாங்கிப் படிக்கிறார். அதில் கறுப்பர்களைக் குறிப்பாக ஆப்ரிக்க மக்களை முட்டாள்களாகவும் வெள்ளையர்களை புத்திசாலிகளாகவும் சித்தரித்தது கண்டு கொதித்தெழுந்தார். உடனே பொதுநல வழக்குத் தொடர்கிறார். அதில் வெற்றியும் பெறுகிறார். இங்கிலாந்தில் புத்தகம் தடைசெய்யப்படதோடல்லாமல் தென்னாப்ரிக்கா வரை செய்தி பரவி அங்கும் அது தடை செய்யபடுகிறது. சுவாரஸ்யமளிக்கும் காமிக்ஸ் கதைகளை நாமும் இனி உற்று நோக்க வேண்டுமென்ற சிந்தனையை உண்டாக்கும் கட்டுரை இது. லயன் காமிக்ஸ் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ள ஆப்ரிக்காவைக் களமாகக் கொண்ட வனரேஞ்சர் ஜோ கதைகளில் ஆப்ரிக்க மக்களைப் போர்ட்டர்களாகவும் காட்டுமிராண்டிகளாகவும் சித்தரித்திருப்பது இந்தக் கட்டுரையைப் படித்தவுடன் தான் எனக்கு வெளிச்சமாகியது.

அந்த இரயில்பாதை வரைபடம் (கூகுள் இமேஜஸில் எடுத்தது)
சாவோ, சாவுப்பள்ளத்தாக்கு என்ற கட்டுரையில் 1898ம் ஆண்டு கென்யாவிற்கும் தான்சானியாவிற்குமிடையுள்ள சாவோ பள்ளத்தாக்கில் இரயில் பாதை அமைக்க இந்தியர்கள் கொத்தடிமைகளாகப் போன வரலாறு அங்கு நடந்த கொடூரங்கள் பதை பதைப்பை உண்டு பண்ணும் வகையில் விவரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் தோராயமாக மூவாயிரம் இந்தியர்கள் இப்பணிக்கு அமர்த்தப்பட்டனர். அதில் காட்டுப் பகுதியில் சிங்கத்திற்குப் பலியானவர்கள் மட்டும் 135 பேர். நோய்வாய்ப்பட்டு இறந்தவர்கள் 500க்கும் மேல். அந்த சிங்கங்களை வேட்டையாட வந்த போலிஸ் அதிகாரி ரியால் ஒரு சிங்கத்தால் வேட்டையாடப்பட்டது எதிர்பாரத முடிவு!

மிகச்சாதாரண குடும்பத்தில் பிறந்து உலகப்புகழ்பெற்ற பாடகி மிரியம் மக்கேபா பற்றிய கட்டுரை ஒரு தன்னம்பிக்கை அத்தியாயம்.  ஃபிடல் காஸ்ட்ரோ, ஜான் கென்னடி போன்றோரின் பாராட்டுகளைப் பெற்றவர் என்பது இவரது உச்சகட்டப் புகழுக்குச் சான்று.

அணு உலைகளைப் பற்றிய விரிவான கட்டுரையும் இத்தொகுப்பில் உள்ளது. ஆப்ரிக்கா பற்றிய நமது தவறான பார்வையை மாற்றி விடுகிறது இப்புத்தகம். ஜெயகரன் ஆப்ரிக்காவின் பல பகுதிகளில் பணியாற்றியுள்ளதால் இவரது கட்டுரைகள் உயிர்ப்போடு இருக்கின்றன. அருமையான கறுப்பு வெள்ளைப் புகைபடங்களும் இடம்பெற்றுள்ளன.  அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்!

நூல்            : கறுப்பு கிறிஸ்துவும் வெள்ளைச் சிங்கங்களும்
ஆசிரியர்   : சு.கி. ஜெயகரன்
விலை        : ரூ.110/-
வெளியீடு : உயிர்மை பதிப்பகம், சென்னை.

2 comments:

natbas said...

அறிமுகம் மிக நன்றாக இருக்கிறது, புத்தகத்தை வாசிக்கு ஆர்வத்தைத் தூண்டுகிறது.

மிக்க நன்றி.

J.P Josephine Baba said...

அருமையான புத்தக அறிமுகம்

Post a Comment