Wednesday, 23 January 2013

கீழ் கோத்தகிரி - ஒரு கானக நடை பயணம்


டிரெக்கிங் சென்று கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேல் ஆனதால் பொங்கல் விடுமுறையில் புறப்படலாம் எனத் தீர்மானித்தோம். ஆனால் சில காரணங்களால் செல்ல முடியாததால் கடந்த சனிக்கிழமையன்று செல்வதென முடிவாயிற்று. வழக்கம்போல் அண்ணன் அம்சா தான் இந்தப் பயணத்திற்கும் ஏற்பாடு செய்தார். அது மிகச் சிறப்பான ஏற்பாடு என்பதை அந்தக் காட்டுப்பகுதிக்குப் போன பின்புதான் உணர்ந்தோம். நன்றி அண்ணன் அம்சா!

அண்ணன் அம்சா
19.01.2013 - சனிக்கிழமை


ஓம் பிரகாஷ்

பாலா
 சென்னையிலிருந்து வந்த நண்பர் பாலாவை ஈரோட்டில் தனது காரில் ஏற்றிக் கொண்டு நண்பர் ஓம் பிரகாஷ் அவினாசி வந்தார்.  நானும் அண்ணன் அம்சாவும் திருப்பூரிலிருந்து அவினாசி சென்றோம்.  பாலாவை அன்றுதான் நேரில் சந்தித்தேன்; பழகுவதற்கு இனிய நண்பர்.  ஓம் பிரகாஷ் இயற்கைப் புகைப்படக்கலையில் தீவிர ஆர்வம் கொண்டிருப்பவர். சிறிய உரையாடலுக்குப் பிறகு அங்கிருந்து மதியம் 2.30 மணிக்குப் புறப்பட்டு கோத்தகிரி வழியாகக் கீழ் கோத்தகிரியை அடைந்த போது மணி 4.45 ஆனது. அங்கு சென்று வனக் கோட்ட அலுவலர் திரு. வித்யாதரனை அலைபேசியில் தொடர்பு கொண்டு எங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓர் அருமையான ட்ரெக்கிங் விடுதிக்குச் சென்று எங்களது உடைமைகளை வைத்து விட்டு வெளியே வந்தோம்.  கீழே இறக்கத்திலிருந்த ஒரு சிறிய உணவு விடுதிக்குச் சென்று தேநீர் மற்றும் மெது வடைகளோடு சற்று இளைப்பாறினோம். கிராமத்திலுள்ள உணவு விடுதியாதலால் இரவுச் சிற்றுண்டிக்கு முன்கூட்டியே சொல்லிவிட்டுத் தங்கும் விடுதியை நோக்கி வந்தோம். மெல்ல இருளும் குளிரும் பரவ ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் வனக் கோட்ட அலுவலர் வந்தார். அவரிடம் எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டோம். அவர் மறுநாள் நாங்கள் ட்ரெக்கிங் செல்வதற்குத் துணையாக ஒரு நபரை ஏற்பாடு செய்தார். அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு விடுதிக்கு வெளியே வந்து தேனாடு என்ற கிராமத்திற்குச் செல்லும் சாலையில் நடக்க ஆரம்பித்தோம். குளிர் இரவில் நடந்து சென்றது மனதிற்குப் புத்துணர்ச்சியாக இருந்தது. குளிர் அதிகமாக இருந்ததால் கொஞ்ச தூரம் சென்று விட்டுத் திரும்ப உணவு விடுதிக்கு வந்து சிற்றுண்டிப் பொட்டலங்களோடு நாங்கள் தங்கியிருத்த விடுதிக்குத் திரும்பினோம். இரவு வெகு நேர விவாதத்துடன் சிற்றுண்டியை உண்டோம். அப்பொழுது மறுநாள் எங்களுடன் வருவதாக இருந்த தன்ராஜ் என்ற ஊழியர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் வனத்துறையின் தற்காலிக ஊழியர். அவரின் வெள்ளந்தியான பகுத்தறிவோடு கூடிய பேச்சை ரசித்து விட்டுக் குளிரின் தீவிரத்தைத் தடுக்கக் கம்பளியை இன்னொரு ஆடையாகப் போர்த்திக் கொண்டு உறங்கினோம்.


20.01.2013 - ஞாயிற்றுக்கிழமை


KASHMIR FLYCATCHER
அதிகாலையில் பறவைகள் ஒலி எங்களை எழுப்பியது. நாங்கள் தங்கியிருந்த விடுதிக்குப் பின்புறம் ஒரு சிறிய பறவை வேலியில் வந்தமர்ந்தது. ஓம் பிரகாஷ் அதைப் புகைப்படம் எடுத்தார். அது என்னவென்றுப் பறவைக் கையேட்டில் பார்த்தபோது மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போனோம். அச் சிறிய பறவையின் பெயர் Kashmir Flycatcher. அது சற்று அரிதான பறவை; அழிந்து வரும் பறவையினங்களின் பட்டியலில் உள்ளது. அது வடமேற்கு இமாலயப்பகுதியில் (காஷ்மீர்) செப்டம்பர் மாதம் இனப்பெருக்கம் செய்துவிட்டு அங்கிருந்து அக்டோபர் மாதத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை (குறிப்பாக நீலகிரி) மற்றும் இலங்கை வரை வலசை வருகிறது. வலசை முடிந்து மறுபடியும் மார்ச் மாதத்தில் இமாலயப் பகுதியை நோக்கிப் புறப்படுகிறது. சுமார் எட்டு மணியளவில் வனக் கோட்ட அலுவலரைச் சந்தித்து அவரிடம் இத்தகவலைப் புகைப்படத்துடன் தெரிவித்தோம். அவரும் வியப்புடன் படத்தைப் பார்த்துவிட்டு இப்பறவையை இந்தப்பகுதியில் யாரும் இதுவரை பார்த்ததில்லை... முதன் முறையாக நீங்கள்தான் பதிவு செய்திருக்கிறீர்கள் என்றார். கூடவே இதைப் பெரிய படமாக்கி ஃபிரேம் செய்து கொடுத்தால் அதைத் தன் அலுவலக அறையில் வைப்பதாகவும் கூறினார். டிரெக்கிங் புறப்படுவதற்கு முன்பே Kashmir Flycatcher என்ற ஜாக்பாட்டைப் பார்த்த மகிழ்ச்சியில் அவரிடமிருந்து விடைபெற்று ஊழியர் தன்ராஜை அழைத்துக் கொண்டு ஜீப்பில் சென்றோம்.


ஜீப் தேனாடு கிராமம் செல்லும் சாலையில் தேயிலைத் தோட்டங்களினூடே சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் சென்று காடு ஆரம்பமாகும் எல்லையில் எங்களை இறக்கிவிட்டுத் திரும்பியது. காட்டுக்குள் நடைபயணம் தொடங்கியது. சிறிது நேரத்தில் தன்ராஜுக்கு ஓர் அவசர அழைப்பு வர அவர் ட்ரெக்கிங வழியை எங்களுக்கு விளக்கிவிட்டுத் திரும்பினார். நாங்கள் தொடர்ந்தோம். வழியில் பல விதப் பறவைகள் (பட்டியல் கீழே) , ஒரு சில விலங்குகள், ஊர்வன மற்றும் பூக்கள் ஆகியவற்றைப் பார்த்து ரசித்த படியே மூன்று மணி நேர நடைக்குப் பிறகு ஒரு மலை உச்சியை அடைந்தோம்.   காலை உணவிற்குக் கொண்டு போன ரொட்டிகளைக் காலி செய்தோம். அப்பொழுது சற்று தொலைவிலிருந்த குன்று ஒன்றின் மேல் கட மான் ஜோடி ஒன்று சிறிது நேரம் நின்று விட்டுப் பின்னர் ஓடி மறைந்தது. காட்டின் பச்சை மணம், இடையில் ஓடும் சிறு ஓடை, தூரத்து மலை முகடுகள் மற்றும் பூக்களின் நிறங்கள் போன்றவை நாம் வாழும் நெருக்கடி நிறைந்த வாழ்க்கையைப் பல மணி நேரம் மறக்கடிக்கச் செய்தன என்றால் அது மிகையில்லை. இருந்தாலும் அங்கே ஒரு பெரிய பரப்பைப் பஸ்பமாக்கிய மனிதர்கள் வைத்த காட்டுத்தீயின் எச்சங்கள் (நம் நாட்டில் காட்டுத்தீ தானாக உண்டாவதல்ல... அது வடிகட்டப்பட்டப் புனைவு!) மற்றும் நடுக்காட்டுப் பகுதியில் சில பொறுப்பற்றவர்களால் உடைத்து நொறுக்கப்பட்ட பியர் பாட்டில்கள்... இன்னும் எத்தனை காலத்திற்கு இயற்கைத் தாக்குப் பிடிக்கப் போகிறதோ என்ற அச்சத்தை எங்கள் மனதில் எழுப்பியது.

நாங்கள் பார்த்த பறவைகள் :
1)White throated Fantail
2) Spotted Dove
3) Oriental white eye
4) Red whiskered Bulbul
5) Red vented Bulbul
6) White eyed Buzzard
7) Black shouldered Kite
8) Jungle Myna
9) Large billed Crow
10) House sparrow
11) Kashmir flycatcher
12) Black and orange flycatcher
13) Tickell's blue flycatcher
14) Nilgiri laughingthrush
15) Great Tit
16) Black lored Tit
17) Grey Wagtail
18) Purple Sunbird
19) Purple rumped Sunbird
20) White cheeked Barbet
21) Pied Bushchat

இறுதியில் சுமார் மதியம் மூன்று மணியளவில் ட்ரெக்கிங்கை முடித்து விட்டு கடும் பசியுடன் முதலில் உணவு விடுதிக்கு வந்து மதிய உணவை முடித்து விட்டு அறைக்குத் திரும்பினோம். சிறிது நேர ஆசுவாசத்திற்குப் பிறகு வனக் கோட்ட அலுவலரை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம். விடுமுறையன்றும் அவர் பரபரப்பாக வேலை செய்தது வியப்பாக இருந்தது. அக்கறையுடன் கூடிய சமூகப் பார்வையுள்ள அவரது பேச்சு மற்றும் கனிவான உபசரிப்பு எங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவருக்கு நன்றி தெரிவித்து விட்டுக் கிளம்பினோம். அண்ணன் அம்சா இன்னும் சிறிது நேரமிருக்கிறது... நாம் கோத்தகிரியிலுள்ள லாங் உட் சோலைக்குச் செல்லலாம் என்றார். அங்கு அவருக்குத் தெரிந்த ராஜூ மாஸ்டர் என்பவரைத் தொடர்பு கொண்டு எங்கள் வருகையை உறுதிப்படுத்தினார்.

புலியின் காலடித்தடம்
மாலை ஐந்து மணியளவில் லாங் உட் சோலையை அடைந்தோம். இருள் சூழ ஆரம்பித்ததால் எந்த உயிரினினங்களையும் காண முடியவில்லை. ஒரு காட்டுக் கோழியின் ஓசையை மட்டும் கேட்க முடிந்தது. சோலையின் உட்பகுதிக்குள் சென்றோம். அங்கு ராஜூ மாஸ்டர் சிலருடன் எங்களுக்காகக் காத்திருந்தார். அங்கே ஓர் ஓடையின் சேறு நிறைந்த பரப்பில் புலியின் காலடித்தடம் (படம் கீழே) பதிந்திருந்தது. விழிகள் விரிய அதைப் பார்த்து எங்கள் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டோம். ஏனெனில் வட இந்தியாவின் சில புகழ் பெற்ற சரணாலயங்களில் புலிகள் ஒன்று கூட இல்லாமல் அற்றுப் போயிருக்க நமது மாநிலத்தில் அதுவும் கோத்தகிரி நகரை ஒட்டிய ஒரு சோலையில் புலித்தடம் பதிந்திருந்தது மிக முக்கியமான நிகழ்வு. அதை பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் கொண்டு படியெடுப்பதற்காகத் தான் அவர்கள் குழுமியிருந்தார்கள். அந்த வேலை முடிந்தவுடன் சோலையைச் சுற்றிக் காட்டினார் மாஸ்டர். அவர் இந்த வயதிலும் குறுக்கும் நெடுக்குமாகச் சீனப் படங்களின் சண்டைக் காட்சிகள் போன்று வேகமாக நடந்தார். நாங்கள் பின் தொடர்ந்தோம். ஏழு மணியளவில் சோலைக்கு வெளியே வந்து அவரிடம் விடை பெற்றுப் புறப்பட்டோம்.

மனதிற்கு மிக நிறைவான பயணம். அலைபேசிக்கு அவ்வப் பொழுது சார்ஜ் ஏற்றுவது போல நமக்கும் புத்துணர்ச்சியூட்ட கானக நடை உதவியாக இருக்கும் என்பதில் இரண்டாம் சிந்தனைக்கே இடமில்லை.

3 comments:

சாதாரணமானவள் said...

Super Place!

கோமதி அரசு said...

காட்டின் பச்சை மணம், இடையில் ஓடும் சிறு ஓடை, தூரத்து மலை முகடுகள் மற்றும் பூக்களின் நிறங்கள் போன்றவை நாம் வாழும் நெருக்கடி நிறைந்த வாழ்க்கையைப் பல மணி நேரம் மறக்கடிக்கச் செய்தன என்றால் அது மிகையில்லை.

இருந்தாலும் அங்கே ஒரு பெரிய பரப்பைப் இருந்தாலும் அங்கே ஒரு பெரிய பரப்பைப் பஸ்பமாக்கிய மனிதர்கள் வைத்த காட்டுத்தீயின் எச்சங்கள் (நம் நாட்டில் காட்டுத்தீ தானாக உண்டாவதல்ல... அது வடிகட்டப்பட்டப் புனைவு!) மற்றும் நடுக்காட்டுப் பகுதியில் சில பொறுப்பற்றவர்களால் உடைத்து நொறுக்கப்பட்ட பியர் பாட்டில்கள்... இன்னும் எத்தனை காலத்திற்கு இயற்கைத் தாக்குப் பிடிக்கப் போகிறதோ என்ற அச்சத்தை எங்கள் மனதில் எழுப்பியது.//

அருமையான காட்சி அமைப்பை சொல்லி விட்டு,
எத்தனை காலத்திற்கு இயற்கை தாக்குபிடிக்கப் போகிறதோ என்று அச்சத்தையும் எழுப்பிவிட்டீர்கள்.
அருமையான இயற்கை நடை பயணம்.

A.M.AMSA said...

மதுரை அழகு தனது அழகான எழுத்து நடையில்,இயற்கையாக நினைவில் நின்ற அருமையான பதிவு. தொடர்ந்து இது போன்ற இயற்கை பயண கட்டுரைகளை பதிவு செய்தால், படிப்பவர்கள் பசுமையை உணர்ந்து, பசுமையை நினைத்து,இயற்கைக் கூறுகள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற மனமாற்றம் ஏற்பட தூண்டுகோலாக அமையும்.

Post a Comment