புத்தகக் கண்காட்சியில் அதிகம் விற்பனையாகும் புத்தகங்கள் வரிசையில் ஜோதிடம், பக்திக்கு அடுத்து சுயமுன்னேற்றப் புத்தகங்கள்தான் என்று ஒரு தகவல் உண்டு. அப்படி வெளிவரும் சுயமுன்னேற்றப் புத்தகங்களில் பல... நம்புங்கள்! நம்மால் முடியும்!! என்று வெற்று கோஷங்களாகவே இருக்கும். அவற்றில் நடைமுறை உதாரணங்கள் ஒன்று கூட இருக்காது. ஆனால் இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபடும் புத்தகம்தான் ராஷ்மி பன்சால் எழுதிய Connect The Dots என்ற ஆங்கிலப் புத்தகம். இதை புள்ளிகள்... கோடுகள்... பாதைகள்! என்ற தலைப்பில் ரவிபிரகாஷ் மொழிபெயர்க்க விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது.
ராஷ்மியின் முந்தைய புத்தகமான Stay Hungry Stay Foolish (தமிழில் 'முயற்சி திருவினையாக்கும்') 20 எம்.பி.ஏ. பட்டதாரிகளின்... அதுவும் ஐ.ஐ.எம்-மில் படித்தவர்களின் வெற்றிக் கதைகளைப் பற்றியதாக இருந்ததால் என்னைப் பெரிதாகக் கவரவில்லை. அட...! என்னதான் இருந்தாலும் அவர்களெல்லாம் ஐ.ஐ.எம்-மில் படித்தவர்கள். அதனால் அவர்களின் வெற்றி ஒன்றும் பெரிய விசயம் அல்ல என்ற நினைப்பு இருந்தது. ஆனால் இந்த பு.கோ.பாவோவில் நம்மில் பெரும்பாலோரைப் போல சாதாரணமானவர்களாக இருந்து பின்னர் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளதை படிக்கும் பொழுது நம்மனதில் இந்தப் புத்தகம் பசை போல... இல்லை! இல்லை!! பெவிகால் போல ஒட்டிக் கொள்கிறது.
புத்தகத்தில் உணவகம், எலெக்ட்ரானிக்ஸ், ஃபார்மா, ட்யூசன் சென்டர், சமையல் கலை, ஆயத்த ஆடை, புத்தகக் கடை, புகைப்படக்கலை, சினிமா, விவசாயம் போன்ற இருபது பல்வேறு துறைகளில் ஜொலிப்பவர்களின் கதைகளை வறட்சியான பேட்டி சடங்காக இல்லாமல் விறுவிறுப்பான சிறுகதை போல சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார் ராஷ்மி பன்சால். நமது தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டு இன்று இந்தியா முழுவதும் கோலோச்சும் விவேகானந்தா ஆங்கில பயிற்சி மையத்தின் வெற்றிக் கதையைப் படிக்கும் பொழுது நமக்குத் தோன்றும் ஒரு விசயம் காலத்தின் தேவையை முன் கூட்டியே கணித்தால்... அந்த சமயத்தில் ஒர்க் அவுட் ஆகாவிட்டாலும் பிற்காலத்தில் நிச்சயம் ஹிட்டாகும் என்பது புரிகிறது. சுருக்கமாகச் சொன்னால் ஆளே இல்லாத கடையில் டீ (நல்ல டீ!) ஆத்துவது போல வேலை பார்க்க வேண்டும்.
பிரபல வனவிலங்கு புகைப்படக் கலைஞர் கல்யாண் வர்மாவின் கதையப் படித்தால் வலைதளத்தின் சக்தி என்னவென்று நன்றாகவேத் தெரிகிறது. இவர் யாகூவில் பார்த்து வந்த வேலையை உதறிவிட்டு வனங்களுக்குச் சென்று புகைப்படம் எடுப்பதில் தீவிரமாக இறங்கினார். அப்படி எடுத்த படங்களைத் தன் பிளாக்கில் ஏற்றினார். அதைப்பார்த்த ஒரு தொலைக்காட்சி நிறுவனம் இவரைத் தனது புராஜக்ட்களுக்கு நிரந்தரப் புகைப்படக் கலைஞராகப் பெரும் தொகை கொடுத்து ஒப்பந்தம் செய்தது. அந்நிறுவனம் வேறு யாருமல்ல... உலகப் புகழ்பெற்ற பி.பி.சி.
அதே போல் ஒரிஸ்ஸாவின் பிரின்ஸ் நாடககுழுவின் நிறுவனர் 26வயதே நிரம்பிய கிருஷ்ணா ரெட்டியின் கதை ஒரு த்ரில்லர் சினிமாவிற்க்கு நிகரானது. 'கலர்ஸ்' என்ற தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய இந்திய அளவிலான ஷோவில் இந்நாடகக் குழுவும் பங்கேற்று பல்வேறு துயரங்களைக் கடந்து இறுதிச் சுற்று வரை முன்னேறியது. பரிசுத் தொகை ஐம்பது லட்சம்! யாருடைய நிகழ்ச்சிக்கு அதிக எஸ்.எம்.எஸ். ஓட்டுகள் பதிவாகிறதோ அந்தக் குழுதான் வெற்றியாளர். பிரின்ஸ் நாடகக் குழு வெற்றி பெறுவதற்காக ஒரிசா முழுவதும் எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள் என்று பிரசாரம் செய்தது யார் தெரியுமா? அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்! பிறகென்ன கிருஷ்ணா ரெட்டியின் கைகளில் ஐம்பது லட்சம் சுளையாக விழுந்தது.
இதே போல் மீதி பதினெட்டுக் கதைகளைப் படித்து முடிக்கும் பொழுது நம்மை அளவு கடந்த உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. இதனால் கிடைக்கும் நீதி என்னவெனில் நம் மனதிற்க்குப் பிடித்ததைச் செய்தால் வெற்றியும் வரும்! கூடவே நிறைய பணமும் வரும்!! பிடிக்காத வேலையிலேயே உழன்று கொண்டிருந்தால்... நாம் காலி!. ராஷ்மி பன்சால் பல்வேறு துறைகளச் சார்ந்தவர்களைத் தேர்ந்தெடுத்ததிலேயே பாதி வெற்றி பெற்று விட்டார். மீதி அவைகளை நேர்த்தியாகப் பதிவு செய்தது. இல்லாவிட்டால் இவரது இந்தப் புத்தகம் மட்டுமே இரண்டு லட்சம் பிரதிகள் விற்றிருக்குமா...? ஒன்றைச் சொல்லாமல் விட்டு விட்டேனே...! ரவிபிரகாஷின் மொழிபெயர்ப்பு அருமை. உபரித் தகவல் :- இந்தப் புத்தகம் எட்டு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
4 comments:
த.ம.1
நல்ல அறிமுகம்.
புத்தகச் சந்தையில் வாங்கி விடுகிறேன்.
திரு.சென்னைப்பித்தன் சொன்னதை அப்படியே வழிமொழிகிறேன். அதுதான் நான் சொல்ல நினைத்ததும்... (த.ம.2)
இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.
நானும் வாங்கி விடுகிறேன். "தினந்தோறும் ஒரு தவளை" என்ற புத்தகம் கிடைத்தால் படித்து பாருங்கள்.
Post a Comment