Monday 13 March 2017

உப்பு வேலி


இந்திய வரலாற்றில் மறக்கப்பட்ட மாபெரும் சுங்கப் புதர்வேலியின் ஒரு சிறிய பகுதியைக் கிட்டத்தட்ட 120 ஆண்டுகளுக்குப் பிறகு தேடிக் கண்டுபிடித்த ராய் மாக்ஸம் என்ற வெள்ளைக்காரரின் பயணம் தான் உப்பு வேலி என்ற இந்தப் புத்தகம்.  ராய் மாக்ஸம் ஆங்கிலத்தில் எழுதிய The Great Hedge of India என்ற புத்தகத்தை சிறில் அலெக்ஸ் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.


ராய் மாக்ஸம்
இந்திய வரலாற்றை அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வமுள்ள ராய் மாக்ஸம் 1995-ல் லண்டனில் உள்ள குயின்டோ என்ற பழைய புத்தகக் கடையில் மேஜர் ஜெனரல் ஸ்லீமன் எழுதிய “ஒரு இந்திய அதிகாரியின் புலம்பல்களும் நியாபகங்களும்“ என்ற புத்தகத்தின் தலைப்பால் ஈர்க்கப்பட்டு அதை வாங்கிப் படிக்கிறார்.  அதில் உப்பின் மீது சுங்கவரி வசூலிக்கும் நோக்கத்திற்காக மட்டுமே இன்றைய பாகிஸ்தானின் சிந்து நதி முதல் ஒரிசாவின் மகாநதி வரை ஒரு பிரமாண்ட புதர்வேலி அமைக்கப்பட்டிருந்தது என்ற செய்தியைப் படித்து ஆச்சரியமடைகிறார்.  ஏனெனில், தான் இதுவரை படித்த இந்திய வரலாற்றுப் புத்தகங்களில் இப்படியொரு புதர்வேலியைப் பற்றிய குறிப்புகள் ஏதும் தென்படாததால், இந்தியாவில் பணிபுரிந்த வெள்ளை அதிகாரிகள் எழுதிய புத்தகங்கள் மற்றும் அரசின் ஆண்டறிக்கைகள் ஆகியவற்றை வெறிபிடித்தாற் போல் லண்டனில் உள்ள நூலகங்களில் தேடித் தேடி வாசித்து மேற்கண்ட புதர்வேலியைக் குறித்த தகவல்களைத் திரட்டுகிறார்.

திரட்டிய குறிப்புகளின் அடிப்படையில் 1996 அக்டோபரில் இந்தியா வந்து வேலியைத் தேடும் பணியைத் தொடங்குகிறார்.  சரியான திட்டமிடல் இல்லாததால் தோல்வியே மிஞ்சுகிறது.  மீண்டும் லண்டன் திரும்பி வேலி தொடர்பான சரியான வரைபடங்களைத் தேடியதில், அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியில் வரையப்பட்ட ஆக்ரா மாகாணத்தின் பிரமாண்ட வரைபடம் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார்.  அந்த வரைபடத்தில் வேலி தெளிவாகக் காட்டப்பட்டுள்ளதை அறிந்து துள்ளிக் குதிக்கிறார்.  பின்னர் வரைபடத்தை மிகச் சரியாக புரிந்து கொள்வதற்கான சிறிய புத்தகத்தைப் படித்து தெளிவடைகிறார்.  இதற்கிடையில் ராய் வேலியைத் தேடும் பணியில் முழு வீச்சில் இறங்கியதைக் கண்ட அவரது நணபர்கள் மற்றும் சகபணியாளர்கள் இது வெட்டி வேலை என்பது போல் கிண்டலடிக்கின்றனர்.  அதைப் பொருட்படுத்தாமல் ராணுவ திசைகாட்டி, ஜி.பி.எஸ் கருவி மற்றும் சில வரைபடங்களுடன் மீண்டும் 1997 நவம்பரில் இந்தியாவிற்கு பயணமாகிறார்.  இம்முறை ஜான்சி உள்ளிட்ட சில இடங்களில் தேடியும் தோல்விதான் கிடைக்கிறது.

கடைசியாக 1998 நவம்பரில் இந்தியா வந்த ராய், உத்திரப்பிரதேசத்தில் உள்ள இடாவாவில் உலக வரலாற்றிலேயே மனிதர்களால் அமைக்கப்பட்ட மாபெரும் சுங்கப் புதர்வேலியின் எச்சங்களைக் கண்டுபிடித்து, ஒரு பழைய புத்தகக்கடையில் தொடங்கிய தனது மூன்றாண்டு தேடலை வெற்றித் துள்ளலோடு முடிக்கிறார்.
 
உப்பு வேலி
1504 மைல்கள், 1727 காவல் மாடங்கள் (Watch Towers), 12000 பணியாளர்களால் பராமரிக்கப்பட்ட புதர்வேலி தொடர்பான விவரங்களை எந்தவொரு இந்திய வரலாற்றாசிரியரும் பதிவு செய்யாதது ஆச்சரியமளிக்கிறது.  அது சரி! வரலாற்று நினைவிடங்களில் அதன் முக்கியத்துவம் அறியாமல் இன்றும் “ஐ லவ் ___________” என ஏதாவது பெண்களின் பெயர்களை எழுதும் மலிவான மனிதர்கள் தானே நாம்!. 

மனித உடலுக்குத் தேவையான உப்பின் அளவு, உப்பு தொடர்பாக சீனா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் போடப்பட்ட வரிகள், ஏ.ஓ. ஹ்யூம் எனப்படும் ஆலன் ஆக்டேவியன் ஹ்யூமின் கொடூர முகம், பிரிட்டிஷ் இந்தியாவில் ஏற்பட்ட பஞ்சங்கள், உப்புவேலியை மீறி நிகழ்த்தப்பட்ட கடத்தல்கள், வேலியமைக்கப் பயன்படுத்தப்பட்ட மர வகைகள், ராய் மாக்ஸம் இந்தியாவில் தங்கியிருந்த காலத்தில் உண்ட உணவு வகைகள், மக்களின் பழக்கவழக்கங்கள், வெளிநாட்டுக்காரன் என தெரிந்த உடன் வாடகையை அநியாயமாக உயர்த்திக் கேட்கும் வாடகை வண்டி ஓட்டுநர்கள், இரயிலில் தான் முன்பதிவு செய்த இருக்கையில் வேறு நபர்கள் உட்கார்ந்து கொண்டு செய்த அழிச்சாட்டியம், சம்பல் கொள்ளையர்கள், இந்தியாவில் தனக்கு உதவிய நல்ல நண்பர்கள் மற்றும் முன் அறிமுகமில்லாத மனிதர்கள் என புத்தகம் முழுவதும் சுவையான தகவல்களுக்குப் பஞ்சமில்லை.

ஒரே நேர்க்கோட்டில் எழுத சாத்தியமுள்ள புத்தகம், முன்பின்னான தகவல்களால் சில இடங்களில் தொய்வடைகிறது.  அதையும் மீறி சிறில் அலெக்ஸின் மொழிபெயர்ப்பு மூல நூலின் தொய்விலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறது.  முக்கியமான வரலாற்றுப் புத்தகம்!

வெளியீடு :- எழுத்து (அலைபேசி எண் 90479 20190)
விலை    :- ரூ.240/-
பக்கங்கள் :- 253

2 comments:

சிறில் அலெக்ஸ் said...

நன்றாக எழுதியுள்ளீர்கள். நன்றி.

AM AMSA - Naturalist said...

அருமை... வரலாற்றை தெரிந்து கொண்டால், நாம் வாழும் சமூகத்தை புரிந்து கொள்ளலாம். வெள்ளையர்களின் ஆட்சி கொடுமையை, மனித நேயமிக்க வெள்ளைக்காரர் மூலமே தெரிந்து கொள்ள முடிகிறது என்பதற்கு இந்நூல் எடுத்துகாட்டாக இருக்கிறது. சமீபத்திய வரலாறே மறைக்கப்பட்டு இருக்கிறது என்றால் வேத காலம் முதல் மன்னர்கள் காலம் வரை எத்துனை சம்பவங்கள் மூடி மறைக்கபட்டனவோ, நாம் அறிந்த வரையில் எட்டாயிரம் சமணர்கள் மிக கொடூரமாக சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டது மட்டுமே செய்தியாக அறிந்து கொள்ள முடிகிறது. அதையும் மூடி மறைக்க இன்றைய வஞ்சக ஆளுமைகள் முயற்சிப்பதையும், அடிமை மனப்பான்மை உள்ளவர்கள் ஏற்று கொள்ளுவதையும் காண முடிகிறது. உலகில் சிறந்த தொல்லியல் துறை, இந்திய துணைக்கண்டத்தில் அகழ்வாராய்ச்சி செய்ய முற்பட்டதையும், அதை வஞ்சகர்கள் தடுத்து நிறுத்தியதும் நிகழ்கால வரலாற்றில் மூடி மறைக்கப்பட்டது. ராய் மாக்ஸம் எவ்வளவு இன்னல்களுக்கு பிறகு இதனை கண்டறிந்து இருப்பார் என கட்டுரை படித்த பிறகு உணர முடிகிறது.

Post a Comment