Thursday 2 March 2017

பின்நகர்ந்த காலம்


வாசிப்பில் ஆர்வமுள்ள எல்லோரையும் போல பலரின் பரிந்துரையில் கடல்புரத்தில் நாவலையும் எஸ்தர் சிறுகதையையும் வாசித்த பின்பு தான் வண்ணநிலவன் எனக்கு அறிமுகமானார்.  1970 முதல் 1980 வரை அவருடைய வாழ்க்கை அனுபவங்களை பின்நகர்ந்த காலம் என்ற இந்ந நூலில் விவரித்துள்ளார்.


மிகக் கடினமான வாழ்க்கையைத் துவக்கிய வண்ணநிலவன் பின்னாளில் துக்ளக் வார இதழில் தான் வேலைக்கு சேர்வது வரையான நிகழ்வுகளை எழுத்துச் சித்திரமாக தீட்டியுள்ளார்.  ஒவ்வொரு மனிதனுக்கும் தனது ஆழ்மனதில் ஏதாவது ஒரு துறையைச் சுற்றிய கட்டுக்கடங்காத உணர்வு (Passion) சுழன்று கொண்டிருக்கும்.  வாழ்க்கை கொடுக்கும் அழுத்தங்களால் மனதிற்குப் பிடிக்காத வேலையைப் பார்த்தாலும் அந்த உணர்வை மனம் சுமந்தபடியேதானிருக்கும்.  அதுபோல் வண்ணநிலவனும் கொடிய வறுமை கொத்தியெடுத்த பொழுதும் எழுத்தின் மீதான தனது தீராவிருப்பத்தை விடாமல் வளர்த்து வந்துள்ளார்.  சொந்த வீடு என்றில்லை... குடியிருக்க வாடகை வீடு கூட இல்லை.  அப்பாவுக்கு ஓர் இடத்தில் வேலை.  அம்மாவுக்கு மற்றோர் இடத்தில் வேலை.  இருவரும் வேலை பார்க்கும் இடத்திலேயே தங்கி விடுகின்றனர்.  தங்கைகள் படிக்கும் பள்ளியோ இலவச உண்டு உறைவிடப் பள்ளி.  வண்ணநிலவனோ முதலில் ஒரு நண்பர் வீட்டிலும் பின்னர் வக்கீல் ஒருவரிடம் குமாஸ்தாவாக சேர்ந்து அவர்கள் வீட்டிலேயே தங்கி விடுகிறார்.  ஆக வளரிளம் பருவத்தில் குடும்பத்துடன் வசிக்கும் பேறு  வாய்க்கவில்லை.

திருநெல்வேலியில் தொடங்கி மதுரை, சென்னை, பாண்டிச்சேரி, தஞ்சை, மீண்டும் திருநெல்வேலி, கடைசியாக சென்னை என தன்னை ஒரு வேலையில் நிலைநிறுத்திக் கொள்ள போராடுகிறார்.  பெரும்பாலும் நண்பர்களின் வீடுகளில் தான் உணவு, உறக்கமெல்லாம்.  சில சமயம் அதுவும் கிடைக்காதபோது வேறென்ன... பட்டினிதான்!.  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முழு நேர இலக்கியம் சோறு போடாது என்பதை முகத்திலடித்தாற்போல் எதிரொலிக்கிறது வண்ணநிலவனின் வாழ்க்கை.

அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த... தற்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் பிரசித்தி பெற்ற அனைத்து எழுத்தாளர்களுடனும் தொடர்பில் இருந்துள்ளார்.  கண்ணதாசன் இதழ் உட்பட பல இதழ்களின் ஆசிரியர் குழுவில் பங்கேற்றுள்ளார்.  பெரும்பாலும் இவரது மாத சம்பளம் 200 ரூபாயைத் தாண்டியதில்லை.  உணவு, தங்குமிடம் ஆகியவற்றிற்கே போதுமானதாக இருந்திருக்கிறது.

இந்நூலில் அவரது வாழ்க்கைப்பாடுகள் மட்டுமல்லாது 70, 80களின் வானொலி ஒலிபரப்பு, நண்பர்களுக்கிடையேயான கடிதப் பரிமாற்றம், பேருந்து மற்றும் இரயில் பயணங்கள், உணவு விடுதிகள், பல மொழித் திரைப்படங்கள், கையெழுத்துப் பத்திரிகைகள் மற்றும் பலவற்றை நேரில் பார்ப்பது போல் விவரித்துள்ளார்.  நூலில் கவனக்குறைவாக ஏற்பட்ட தகவல் பிழைகள் இருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்த வேண்டியதில்லை.  எனினும் ஒரு இடத்தில் மலைக்கள்ளன் படத்திற்கு வசனம் எழுதியது மக்களன்பன் என தவறாகக் குறிப்பிடுகிறார் (பக்.170).  அப்படத்திற்கு வசனம் எழுதியது கலைஞர் மு. கருணாநிதி என்பது ஊரறிந்த ஒன்று.  இவர் துக்ளக்கில் பணிபுரிந்ததும் திராவிட இயக்கம் மீதான இவரது வெறுப்பினாலும் அப்படி எழுதியிருக்கலாம்.

பள்ளி இறுதி வகுப்பை மட்டுமே முடித்துள்ள வண்ணநிலவன் தன் தடையில்லாத வாசிப்புப் பழக்கத்தாலும் இடைவிடாத எழுத்துப் பணிகளாலும் தமிழின் தவிர்க்க முடியாத எழுத்தாளராக மாறிய ரசவாதத்தைக் கற்பிக்கிற நூல் தான் இந்த பின்நகர்ந்த காலம்.

பின் குறிப்பு :- ஒரு காலத்தில் சென்னையில் எங்கு தங்குவது என தவித்துக் கொண்டிருந்த வண்ணநிலவன்... இன்று அதே சென்னையில் தன் சொந்த அடுக்ககத்தில் வசித்து வருகிறார்.

வெளியீடு நற்றிணை பதிப்பகம்
பக்கங்கள் 272

விலை    - ரூ.200/-

1 comment:

AM AMSA - Naturalist said...

அருமை... வரலாற்றை தெரிந்து கொண்டால், நாம் வாழும் சமூகத்தை புரிந்து கொள்ளலாம். வெள்ளையர்களின் ஆட்சி கொடுமையை, மனித நேயமிக்க வெள்ளைக்காரர் மூலமே தெரிந்து கொள்ள முடிகிறது என்பதற்கு இந்நூல் எடுத்துகாட்டாக இருக்கிறது. சமீபத்திய வரலாறே மறைக்கப்பட்டு இருக்கிறது என்றால் வேத காலம் முதல் மன்னர்கள் காலம் வரை எத்துனை சம்பவங்கள் மூடி மறைக்கபட்டனவோ, நாம் அறிந்த வரையில் எட்டாயிரம் சமணர்கள் மிக கொடூரமாக சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டது மட்டுமே செய்தியாக அறிந்து கொள்ள முடிகிறது. அதையும் மூடி மறைக்க இன்றைய வஞ்சக ஆளுமைகள் முயற்சிப்பதையும், அடிமை மனப்பான்மை உள்ளவர்கள் ஏற்று கொள்ளுவதையும் காண முடிகிறது. உலகில் சிறந்த தொல்லியல் துறை, இந்திய துணைக்கண்டத்தில் அகழ்வாராய்ச்சி செய்ய முற்பட்டதையும், அதை வஞ்சகர்கள் தடுத்து நிறுத்தியதும் நிகழ்கால வரலாற்றில் மூடி மறைக்கப்பட்டது. ராய் மாக்ஸம் எவ்வளவு இன்னல்களுக்கு பிறகு இதனை கண்டறிந்து இருப்பார் என கட்டுரை படித்த பிறகு உணர முடிகிறது.

Post a Comment