Friday, 21 April 2017

சோலை எனும் வாழிடம்தமிழில் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் எழுத்துகளின் முன்னோடியான தியடோர் பாஸ்கரன் பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கட்டுரைகள் மற்றும் அவரது ஒரு நேர்காணல் ஆகியவற்றின் தொகுப்பு “சோலை எனும் வாழிடம்என்ற புத்தகமாக வந்துள்ளது.


வால்பாறை பயணம் பற்றிய... புத்தகத்தின் பெயரைத் தலைப்பாகக் கொண்ட முதல் கட்டுரையே... கிரிக்கெட் ஆட்டத்தின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடிப்பதைப் போல நேர்த்தியாக உள்ளது.  பாஸ்கரன் எழுத்துகளின் சிறப்பே... அதன் ஆழமும் சுவையும்தான்.  வெறும் பயணக் கட்டுரையாக இல்லாமல் வால்பாறையின் வரலாறு மற்றும் அது தொடர்பான பிரிட்டிஷாரின் ஆவணங்கள், அங்கு நிலவும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள், அவற்றிற்கான தீர்வுகள் என 360 டிகிரியில் சுற்றிச் சுழல்கிறது.

கானமயில்களின் அழிவு, வட்டார வழக்குச் சொற்கள், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், ஏ.ஓ.ஹ்யூம் நடத்திய சஞ்சிகை என கலந்து கட்டிய தகவல் செறிந்த பாலை எனும் வாழிடம் கட்டுரை மிக முக்கியமானது.

கொல்லிமலை பயணக் கட்டுரையின் தொடக்கம் மற்றும் முடிவு ஆகியவை அலாதியான தன்மையுடன் ரசித்து அனுபவிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
 
நெகெவ் பாலைவனம்
இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் நாடுகளுக்கிடையே அமைந்துள்ள நெகெவ் பாலைவனத்திற்கு சென்று வந்த நிகழ்வைப் பற்றிய இரு கட்டுரைகளும் உண்மையாகவே அங்கேயே அழைத்துச் சென்று விட்டன.  இது மிகையில்லை!

இக்கட்டுரைத் தொகுப்பின் முத்தாய்ப்பான கட்டுரையென்றால் அது பேரரசன் அசோகன் பற்றிய “தேவர்களுக்குப் பிரியமான மன்னன் பியதாசி சொல்வதாவது“ என்ற கட்டுரைதான்.  கலக்கிவிட்டார் பாஸ்கரன்!

தமிழ்ப் பதிப்பகங்களில் பிழை திருத்தம் செய்பவர்கள் இல்லை என்பதை ஆங்காங்கே அப்பட்டமாகத் தெரியும் எழுத்துப் பிழைகள் உணர்த்துகின்றன.

வளர்ச்சி என்ற பெயரில் காட்டுயிர்களும் சுற்றுச்சூழலும் விரைந்து அழிந்து வருவதைப் படிக்கும் போது அவற்றைக் காப்பாற்றித் தக்க வைக்க முடியாது என்பது உறுதியாகத் தெரிகிறது.  ஏதோ நாம் வாழும் காலத்திலாவது இருக்கிற சொற்ப உயரினங்களைப் பார்த்து ரசித்து மகிழ்வதற்கான பாதையைத் திறந்து விடுபவைதான பாஸகரனின் எழுத்துகள்.
சோலை மந்தி

புள்ளி ஆந்தைகள்
பல்வகை மரங்கள், சோலைமந்தி, வரையாடு, ஆந்தைகள், நீர்ப்புறத்து பறவைகள், புலி, ஏறுதழுவுதல், பூச்சிக்கொல்லிகள், நூல் அறிமுகங்கள், டிஜிட்டல் நிழற்படம் எடுப்பவர்களின் அட்டகாசங்கள் என இச்சிறிய புத்தகத்தில் இவ்வளவு செய்திகளையும் உள்ளடக்கி கருப்பு வெள்ளை நிழற்படங்களுடன் மிகச் சிறப்பான கட்டுரைத் தொகுதியாக மிளிர வைத்துள்ளார் பாஸ்கரன்.  சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மட்டுமல்ல... வாசிக்கும் பழக்கம் உள்ள  அனைவரும் தவறவிடக்கூடாத புத்தகம்!

வெளியீடு :- உயிர்மை பதிப்பகம்
பக்கங்கள் :- 128

விலை    :- ரூ.110/-

No comments:

Post a Comment