தமிழின் தவிர்க்கமுடியாத வரலாற்றாய்வாளர்களில் மிக
முக்கியமானவரான ஆ.இரா. வேங்கடாசலபதி, 13 ஆளுமைகளைப்பற்றி பல்வேறு கால கட்டங்களில்
எழுதித் தொகுத்து வெளிவந்திருக்கும் புத்தகம் “ஆஷ் அடிச்சுவட்டில்”. இதில் ஆஷ், எல்லிஸ், ஜி.யு. போப் மற்றும் எரிக்
ஹாப்ஸ்பாம் தவிர மீதி அனைவரும் நம்மவர்கள்.
இந்நூலில் உள்ள ஜி.யு. போப் தொடர்பான கட்டுரையின் தலைப்பு “தமிழ் மாணவர்!” என்று வியப்புக்குறியுடன் தொடங்குவதிலிருந்து
நமக்கும் வியப்பு தொற்றிக் கொள்கிறது. நான்
இறந்த பிறகு, எனது கல்லறையில் “நான் ஒரு தமிழ்
மாணவர்” என்று பொறிக்கப்பட வேண்டும் என ஜி.யு. போப் கூறியதாக ஒரு
செய்தி நீண்ட காலமாக உலவி நிலைபெற்றுவிட்டது.
உண்மை என்னவெனில், லண்டனில் உள்ள ஜி.யு. போப்பின் கல்லறையில் அப்படிப்பட்ட
வாசகம் ஏதும் பொறிக்கப்படவில்லை என்பதை நேரில் சென்று பார்த்ததுடன் அதன் நிழற்பட
நகலையும் புத்தகத்தில் இடம்பெற செய்துள்ளார் சலபதி. லண்டன் செல்லும் தமிழன்பர்கள் எவர்
வேண்டுமானாலும் போப்பின் கல்லறையை நிழற்படம் எடுத்து இதை நிறுவலாம். ஆனால் சலபதி வித்தியாசப்படுவது எதிலென்றால்,
“நான் ஒரு தமிழ் மாணவர்” என்ற சொற்றொடர்
எவ்வாறு நிலைபெற்றது என்பதைத் தேடி கண்டடைந்ததில் தான் உள்ளது. தமிழின் நீண்ட கால நம்பிக்கையைத் தகர்த்த முக்கியமான கட்டுரை.
தனியொருவராக 80,000 சொற்களை உள்ளடக்கிய மாபெரும் சித்த
மருத்துவக் களஞ்சியத்தை அதிக பணிச்சுமையுடைய காவல்துறையில் பணியாற்றியபடியே
உருவாக்கிய டி.வி. சாம்பசிவம்பிள்ளை, பத்திரிக்கைத் துறையில் அதிகம் அறியப்படாத ஆனால்
மிக சுவாரசியமாக எழுதும் ஆற்றல் படைத்த எஸ்.ஜி. ராமாநுஜலு நாயுடு, மகாபாரதத்தின்
தமிழ்ப்பதிப்பை வெளியிடுவதையே தன் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்ட ம.வீ.
இராமானுஜசாரியர், கண்பார்வை இல்லாத நிலையிலும் சென்னை தொழிற்சங்க வரலாற்றை எழுதிய
தே. வீரராகவன் பற்றிய கட்டுரைகள் நமக்கு தகவல்களை மட்டும் தராமல்
தன்னம்பிக்கையையும் தருகின்றன. நாமெல்லாம்
நமது அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கே சோர்ந்து விடுகிறோம், ஆனால்
மேற்கண்ட ஆளுமைகள் அவரவருக்கு ஒரே குறிக்கோளோடு தங்கள் வாழ்க்கையை
நகர்த்தியிருக்கிறார்கள் என்பதில் எவ்வளவு இடர்ப்பாடுகளை சந்தித்திருப்பார்கள்?!
இத்தொகுப்பின் மிக வீரியமான கட்டுரையும் தமிழ்நாட்டில்
இப்படி ஒரு மனிதர் இருந்தாரா என நம்மை வியப்பில் ஆழ்த்தும் கட்டுரை... அல்ல அல்ல...
விரிவான ஆய்வுரை... மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை படச்சுருளில்
ஆவணப்படுத்துவதையே தன் வாழ்நாள் பணியாக மேற்கொண்ட அண்ணாமலை கருப்பன் செட்டியார்
என்ற ஏ.கே. செட்டியார் தொடர்பான கட்டுரைதான் என்றால் அது மிகையில்லை. முப்பது ஆண்டுகளில் ஒரு லட்சம் மைல்கள் பயணம்
செய்து நூறு காமிராக்காரர்களால் எடுக்கப்பட்ட சுமார் 50,000 அடி நீளமுள்ள
படச்சுருள்களை சேகரித்து, அதை இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய படமாக மாற்றி, படம்
பார்த்தவர்களையெல்லாம் மிரளச் செய்த சாகசத்திற்கு சொந்தக்காரர்தான் ஏ.கே.
செட்டியார். ஆனால், தமிழர்களின் அக்கறையின்மையால்
செட்டியார் தன் வாழ்நாளேயே அர்ப்பணித்து என்று சொல்வதைவிட பணயம் வைத்து உருவாக்கிய
காந்தி ஆவணப்படம் தொலைக்கப்பட்டு, இன்று வரை கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது
வேதனை. செட்டியார் தி கிரேட்!.
உ.வே. சாமிநாதையர் பற்றிய கட்டுரையில் அவர் பிற்காலத்தில்
எழுதிய என் சரித்திரம் என்ற அவரது சுயசரிதை உள்ளிட்ட பிற கட்டுரைகளின்
சுவாரசியத்திற்குக் காரணம் கி.வா.ஜ தான் என்பதை பல ஆதாரங்களுடன் நிறுவியுள்ளது
புதிய வெளிச்சம்.
தொகுப்பின் தலைப்பான “ஆஷ் அடிச்சுவட்டில்” என்ற கட்டுரையில் திருநெல்வேலி மாவட்ட
ஆட்சியராகப் பணியாற்றி மணியாச்சி இரயில்நிலையத்தில் வாஞ்சிநாதனால் சுட்டுக்
கொல்லப்பட்ட ஆஷ் தொடர்பான வரலாற்றுத் தகவல்களைத் திரட்டுவதற்காக அவரது மகன் வழி
பேரன் இராபர்ட்டை சந்திக்க அயர்லாந்து சென்று வந்துள்ளார் சலபதி என்பது தமிழ்
இந்து பத்திரிக்கையில் ஒரு முறை குறிப்பிட்டுள்ளது போல அவர் ஒரு வரலாற்று
வேட்டைக்காரர் என்பதை அழுத்தமாக நிறுவுகிறது.
மட்டுமல்லாமால் ஆஷின் பணிப்பதிவேடு, பல்வேறு அரசாணைகள் மற்றும் நீதிமன்ற
தீர்ப்புகள் ஆகியவற்றை ஆராய்ந்து கொலைக்கான பின்னணியை அழுத்தமாக பதிவு செய்யும்
கட்டுரையாக மலர்ந்துள்ளது.
திராவிடம் என்ற கருத்தாக்கத்திற்கு உயிர் கொடுத்த எல்லிஸ்
பற்றிய “எல்லீசன் என்றொரு அறிஞன்” என்ற
கட்டுரை, ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காக இலட்சக்கணக்கான
தொகையை நன்கொடை என்ற பெயரில் வசூலித்துப் பகற்கொள்ளையடிக்கும் பள்ளிகளில் தங்கள்
பிள்ளைகளைச் சேர்த்துவிடும் பெற்றோர்கள் படிக்க வேண்டிய நெத்தியடி ஆய்வுரை.
வ.உ.சியும் திலகரும் என்ற கட்டுரை, சற்று பொறுமையுடன்
படிக்கக்கூடிய நடையில் அதாவது சம்பவம் நிகழ்ந்த வருடங்கள், பல்வேறு ஊர்கள் போன்றவை
அடிக்கடி வருவதாலேயே லேசான சோர்வைத் தருகிறது.
இந்நூலில் இடம்பெற்றுள்ள ஆஷ் தொடர்பான புகைப்படங்கள் தெளிவாகவும், நம்
ஆளுமைகள் தொடர்பான புகைப்படங்கள் தெளிவில்லாமலும் மங்கலாகவும் உள்ளதிலிருந்தே ஆவணப்படுத்துதல் என்ற விடயத்தில்
வெள்ளைக்காரர்களைவிட நாம் எவ்வளவு பின்தங்கியிருக்கிறோம் என்பதை மறைமுகமாக
உணர்த்துகிறது.
ஆ.இரா. வேங்கடாசலபதி என்ற பிறவி வரலாற்றாய்வாளரின் அதிதீவிர
உழைப்பில் தெள்ளிய நடையில் உருவான ஆய்வுரைகள் அடங்கிய இப்புத்தகம் தமிழர்கள்
தவறவிடக்கூடாத ஒன்று என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது.
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
பக்கங்கள் : 252
விலை : ரூ.225/-
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
பக்கங்கள் : 252
விலை : ரூ.225/-
No comments:
Post a Comment