ஐ.டி என்றில்லை... பெரும்பாலான தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்களின் கனவு
தேசம் எதுவென்றால்...? அது அமெரிக்காதான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. கவர்ச்சி
நிறைந்த அந்த நாட்டின் நிறை குறைகளை அலசும் புத்தகம்தான் நாகேஸ்வரி அண்ணாமலை
எழுதியுள்ள அமெரிக்காவின் மறுபக்கம்.
இந்நூலை இவர் தமிழ்நாட்டிலிருந்து எழுதியிருந்தால் அதன் நம்பகத்தன்மை
ஆட்டம் கண்டிருக்கும். ஆனால் அவர்
அமெரிக்காவில் ஐந்து வருடங்கள் தன் மகள் வீட்டில் வசித்து பல்வேறு புத்தகங்களை
ஆய்வு செய்தும் நேரில் களப்பணியாற்றியும் எழுதியுள்ளதால் தகவல்கள் பெரும்பாலும்
உண்மையாகவே இருக்க வாய்ப்புள்ளது.
புத்தகத்தின் பாதி அமெரிக்காவை கொலம்பஸ் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு
வந்ததலிருந்து ஒபாமா பதவியேற்ற 2009-ம் ஆண்டுவரையான வரலாற்றையும், மீதிப் பகுதி
அமெரிக்கர்களின் நுகர்வுக் கலாசாரம், பெருவணிக நிறுவனங்களின் வியாபாரத்
தந்திரங்கள், சுற்றுச்சூழல் சீர்கேடுகள், மருத்துவக் காப்பீடு மோசடிகள், குடும்ப
அமைப்புகள் மற்றும் அரசு நிர்வாகத்தின் போக்கு ஆகியவற்றை விவரிக்கிறது.
இதில் முதல் பாதி சற்று அல்ல... நிறையவே பொறுமையைச் சோதிக்கிறது. ஏனெனில் வரலாற்றை சுவையாக எழுதுவது என்பது
மிகச் சிலருக்கே வாய்த்திருக்கும் திறமை. ஆனால்,
நாகேஸ்வரி பெரும்பாலான எழுத்தாளர்களைப் போலவே தட்டையான நடையில் எழுதியுள்ளார். பின்பகுதியில் அமெரிக்காவின் தற்போதைய போக்குகள்
சரளமான நடையில் எழுதப்பட்டுள்ளன.
9/11 சம்பவம்
நம் அனைவருக்கும் தெரியும். இரட்டைக்
கோபுரங்கள் தரைமட்டமாக்கப்பட்டு... ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து... அமெரிக்காவே உறைந்திருந்த
நேரத்தில்...அன்றைய அதிபரான ஜார்ஜ் புஷ், “தளர்ந்து விடாதீர்கள்! செலவழித்துக்கொண்டே இருங்கள். அப்போதுதான் நம் பொருளாதாரம் தேக்கமடையாமல் இருக்கும்“
என்று அறிவித்துள்ளார். ஏனெனில்,
வெளிப்பார்வைக்கு ஜனநாயக நாடு என சொல்லிக் கொண்டாலும் அமெரிக்க அரசை
நிர்வகிப்பதும் யார் அதிபராக வரவேண்டுமென தீர்மானிப்பதும் அந்நாட்டிலுள்ள பெருவணிக
நிறுவனங்கள் எனவும், அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும் இந்நூல் நமக்கு விளக்குகிறது. தங்களது பொருட்களை வாங்க மக்களைத் தூண்டும் பெருவணிக நிறுவனங்களின் தந்திரங்கள் அபாரம்!
அமெரிக்காவின் சமூக வாழ்க்கை டேக் இட் ஈஸி பாணியில் உள்ளது. பள்ளிகளில் படிக்கும் வயதிலேயே உறவு வைத்துக்
கொள்வது நாகரிகமாகக் கருதப்படுகிறது. அங்கு
குழந்தை பெற்றுக் கொள்ளும் பத்து இணைகளில் நான்கு இணைகள் மட்டுமே திருமணம்
செய்கின்றனர். மீதி அனைவரும் லிவிங்
டுகெதர் வாழ்க்கைதான். திருமணம், லிவிங்
டுகெதர் எதுவானாலும் ஆண்-பெண் பிரிவு ஏற்பட வாய்ப்புகள் நிறையவே உள்ளன. அப்பொழுது குழந்தைகள் பெரும்பாலும் தாயிடமே
வளர்கின்றன.
இந்நூலில் அமெரிக்காவின் எதிர்மறை பக்கங்கள் அதிகமாக விவரிக்கப்பட்டு, அங்கு வாழ்வது ஒரு பெரிய
போராட்டம் போல சித்தரிக்கப்படுகிறது.
சென்ற மாதம் (மார்ச் 2017) வெளியிடப்பட்ட உலக மகிழ்ச்சிக் குறியீட்டில்
அமெரிக்காவிற்கு 14வது இடம், இந்தியாவிற்கு 122வது இடம் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதே நேரத்தில், இந்தியாவைவிடப் பல மடங்கு
பின்தங்கிய நாடு... அங்கிருக்கும் பெரும்பாலானவர்கள் வேலையின்மை காரணமாக தொடர்ந்து
இந்தியா வருகின்றனர் என சுட்டிக்காட்டப்படும் நேபாளத்திற்கு 99வது இடம். இப்போது சொல்லுங்கள்... மக்கள் மகிழ்ச்சியாக
வாழத் தகுதியுள்ள நாடு இந்தியாவா? அமெரிக்காவா?? இல்லை நேபாளமா???.
நூலாசிரியர் அமெரிக்காவில் பணிப்பாதுகாப்பின்மை அதிகம் எனவும், எப்போது
வேண்டுமானாலும் பணியிலிருந்து நீக்கப்படலாம் என்ற சூழ்நிலையில் பணியாளர்கள் ஒருவித
அழுத்தத்தோடு வேலை செய்கின்றனர் என குறிப்பிடுகிறார். இதில் உண்மையில்லாமல் இல்லை. ஆனால், நம் நாட்டிலோ வேலை கிடைப்பதே
பெரும்பாடாக உள்ளதையும் கிடைத்த வேலையைக் காப்பாற்றிக் கொள்ளவும்... சென்னையின்
புறநகர்களிலிருந்து மாநகரத்தை நோக்கிப் புறப்படும் இரயில்களில் சொற்ப சம்பளம் பெறும்
வேலைக்காக வெறும் வயிற்றோடும் ஈரத்தலையுடனும் காலை 6.30 மணிக்கே செல்லும்
பெண்களின் மன அழுத்தத்தோடு ஒப்பிடும் போது அமெரிக்கா எவ்வளவோ பரவாயில்லை என
தோன்றுகிறது. சென்னையின் வாடகை வீடுகளில்
பெரும்பாலானவை நரகங்களே! அது தனிக்கதை!!
மேலே உள்ள அமெரிக்கா மற்றும் இந்தியா ஒப்புநோக்கல் இந்நூலைப் படித்ததால்
என்னுள் தோன்றியவையே! ஆனால் நூலாசிரியர்
நாகேஸ்வரி அண்ணாமலை எவ்வித ஒப்புநோக்குமின்றி நோம் சாம்ஸ்கி போன்ற அறிஞர்களின் மேற்கோள்களை
ஆங்காங்கே குறிப்பிட்டு, அமெரிக்காவை உள்ளது உள்ளபடி பதிவு செய்திருக்கார். வாசிக்க வேண்டிய புத்தகம்!
வெளியீடு :- அடையாளம்
பக்கங்கள் :- 264
விலை :- ரூ.165/-
No comments:
Post a Comment