Sunday, 26 February 2017

கடைசிக் கோடு


அரசுப் பணியின் பொருட்டு, நில அளவைப் பயிற்சிக்காக தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு தமிழ்நாடு நில அளவைப் பயிற்சி நிலையத்தில் கடந்த 2015-ம் ஆண்டு 35 நாட்கள் பயிற்சி தரப்பட்டது.  அங்கு பாடம் நடத்திய ஆசிரியர்களில் திரு.சந்திரசேகர் என்ற ஓய்வு பெற்ற நில அளவை ஆய்வாளரைத் தவிர மற்ற அனைவரும் கடனே! என பயிற்சி வகுப்புகளை நடத்தினர்.  திரு.சந்திரசேகர் இந்தியாவை வெள்ளையர்கள் எவ்வாறு நில அளவை செய்தனர் என்பதை சுருக்கமாகக் கூறி விட்டு, பிரதான பாடத்திற்குள் நுழைந்தார்.  அப்பொழுது இந்தியாவை முதன்முதலில் நில அளவை செய்தவர் வில்லியம் லாம்டன் என்ற பன்முகத் திறமை கொண்டவர் என்று சொன்னார்.  அந்த “பன்முகத் திறமை“ என்ற வார்த்தை தந்த ஆர்வத்தில் இந்திய நில அளவை தொடர்பாக தமிழில் ஏதேனும் புத்தகங்கள் இருக்கிறதா என்று தேடியபொழுது கிடைத்த புத்தகம் தான் ரமணன் எழுதியுள்ள இந்த “கடைசிக் கோடு.

வில்லியம் லாம்டன்
அண்மையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் முதல் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளுக்கு சாட்சியமாகத் திகழும் அன்றைய மதராசபட்டினத்தின் உலகப் புகழ்பெற்ற மெரினா கடற்கரையிலிருந்துதான் 1802-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி (புத்தகத்தில் தவறாக ஏப்ரல் 18 என குறிப்பிடப்பட்டுள்ளது) வில்லியம் லாம்டன் இந்தியாவை நில அளவை செய்து வரைபடம் தயாரிக்கும் பணியான The Great Trigonometrical Survey-யின் முதல் அடியை அல்ல! அல்ல!! முதல் அளவையைத் துவக்கினார்.  கூகுள் மேப், ஜிபிஎஸ் வந்து விட்ட இன்றைய காலகட்டத்தில்கூட சில நேரம் சரியான முகவரியைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறிப் போகிறோம்.  ஆனால் எவ்வித சாலை வசதிகளும் முறையான பாதைகளும் இல்லாத 1800-களில் இந்தியாவை நில அளவை செய்யப் புறப்பட்ட லாம்டனின் முயற்சி உண்மையிலேயே அந்த எவரெஸ்ட் சிகரத்தை விட பெரிதுதான்.
தியோடோலைட் கருவி
 புத்தகத்தின் அடுத்தடுத்த அத்தியாயங்களில் பள்ளி கணித வகுப்புகளில் நமக்குப் பயிற்றுவிக்கப்பட்ட கோணவியல் (Trigonometry) சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு நிலத்தில் ஒரு அடிப்படைக் கோடு (Base Line) இரும்பு சங்கிலிகளைக் கொண்டு அளவை செய்யப்பட்டு, பின்னர் சற்று தொலைவில் உயரமான கட்டிடம் அல்லது குன்றுகளின் உச்சியின் மீதான கோணத்தை தரையிலிருந்து கண்டுபிடிக்க தியோடோலைட் (Theodolite) என்னும் பல்சக்கரங்கள், டெலஸ்கோப் ஆகியவை பொருத்தப்பட்ட கருவி உபயோகிக்கப்பட்டு தொடர் முக்கோணங்களாக வரைந்து நில அளவை செய்யும் முறை சுருக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது.

முக்கோணங்கள் குறிக்கப்பட்ட இந்திய வரைபடம்
வில்லியம் லாம்டனைப் பற்றி மேலே முதல் பத்தியில் குறிப்பிட்ட “பன்முகத் திறமை வாய்ந்தவர்” என்னும் விடயத்திற்கு புத்தகத்தின் 3வது அத்தியாயத்தில் விடை கிடைக்கிறது.  லாம்டன் ஒன்றும் நில அளவையை முறையாகக் கற்றவர் அல்லர்.  அவர் 1781-ல் இங்கிலாந்து இராணுவத்தில் சேர்க்கப்பட்டு, அமெரிக்காவுடன் நடைபெற்ற போருக்கு சென்று, அங்கே அவர் பங்கேற்ற படையணி தோற்கடிக்கப்பட்டதில், சரணடைந்த லாம்டன் ஒரு வருடம் போர்க் கைதியாக சிறைத் தண்டனை பெற்றார்.  பின்னர் இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, விடுதலையான லாம்டன்  இன்றைய கனடாவில் உள்ள நியூ இங்கிலாந்தில் பிரிட்டிஷ் அரசின் உதவியுடன் ஆங்கிலேயர்கள் ஆட்சி நடைபெற்ற பகுதியில் இராணுவத்தில் சிவில் பணியேற்றார்.  அவருக்கு நியூ இங்கிலாந்து பகுதியை சர்வே செய்யும் வேலை வழங்கப்பட்டது.  அதுவரை நில அளவை என்றால் என்னவென்றே தெரியாத லாம்டன், தன் சுய முயற்சியால் பல்வேறு புத்தகங்கள், அறிக்கைகளைப் படித்து நில அளவையில் பெரிய விற்பன்னரானார்.  இந்நிலையில் 1799-ம் ஆண்டு திப்பு சுல்தானுக்கு எதிராக நடைபெற்ற நான்காம் மைசூர் போரை தலைமையேற்று நடத்த இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட கர்னல் ஆர்தர் வெல்லஸ்லியின் கோரிக்கையின் பேரில், அவருக்கு உதவியாக வந்து சேர்ந்தார் லாம்டன்.  போரின் கடைசிக்கட்டத்தில் வெல்லஸ்லி தலைமையேற்ற படையணி திசை தெரியாமல் எதிரியின் முகாம் அருகே செல்ல நேரிட்ட போது, டெலஸ்கோப்பில் நட்சத்திரங்களைப் பார்த்து அவர்களை சரியான திசைக்கு வரவழைத்துக் காப்பாற்றி வெற்றிக்கு உதவினார்.  ஆம்! லாம்டன் வானியல் வல்லுனரும் கூட!!.  அதற்கு நன்றிக்கடனாக வெல்லஸ்லி, “இந்தியாவிலேயே ஏதேனும் சிவில் பணி செய்கிறீர்களா?என்று கேட்ட நொடியில், லாம்டன் இந்தியாவை நில அளவை செய்யும் தன் ஆசையை வெளிப்படுத்தி அதற்கான உத்தரவை முறையாகப் பெற்றார்.
ஜார்ஜ் எவரெஸ்ட்
 உள்நாட்டு மக்களின் எதிர்ப்பு, மோசமான வானிலை, பணியாளர்களின் ஒத்துழையாமை ஆகியவற்றை தன் சகிப்புத்தன்மையால் கடந்து சர்வே முடிவடையாமேலேயே 1823-ம் ஆண்டு ஜனவரி 26-ம் நாள் (புத்தகத்தில் மாதம், வருடம் மட்டுமே உள்ளது) நாக்பூருக்கு அருகில் உள்ள ஹிங்கான்காட் என்ற ஊரில் உடல்நலக்குறைவால் இறந்தார்.  அவர் இறப்பதற்கு முன்னரே, அவரது சர்வே குழுவில் இணைந்த மற்றொரு இராணுவ அதிகாரியான ஜார்ஜ் எவரெஸ்ட் (இவர் பெயர்தான் எவரெஸ்ட் சிகரத்திற்கு வைக்கப்பட்டது) என்னும் கடின இதயம் கொண்ட, லாம்டனுக்கு நேரெதிரான குணங்கள் உள்ள மனிதரிடம் இந்தியாவை சர்வே செய்யும் பணி வழங்கப்பட்டு, சில மனித உயிர்கள் பலியாகி, கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உடல்நிலை காரணமாக இங்கிலாந்து திரும்பி சென்றார்.

எவரெஸ்ட்டிற்கு பின்னர் நில அளவைக்கு தலைமைப் பொறுப்பேற்ற ஆண்ட்ரூ ஸ்காட் வாக் இந்தியாவை சர்வே செய்யும் பணியை வெற்றிகரமாக முடித்தது, எவரெஸ்ட் சிகரம் கண்டுபிடிக்கப்பட்டது போன்றவை விறுவிறுப்பாக நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.  வெயிலில் வெப்பமடையும் இரும்பு சங்கிலிகளால் அளவுகளில் ஏற்படும் வித்தியாசங்களை சரிசெய்ய லாம்டன் பயன்படுத்திய உத்தி, ஆதிவாசிகள் கொடுத்த யோசனை என பல்வேறு விடயங்கள் சுவையாக விளக்கப்பட்டுள்ளன.

30 நபர்களுடன் தொடங்கப்பட்ட இந்திய நில அளவை, முடிவடையும் போது 4 யானைகள், 30 குதிரைகள், 42 ஒட்டகங்கள், 700 பணியாளர்கள் என பிரமாண்ட பரிவாரமாக மாறியதை சில நிழற்படங்களுடனும் நல்ல தகவல்களுடனும் விளக்கி இருந்தாலும், நான் படித்த புத்தகங்களிலேயே இவ்வளவு சொற்பிழைகள், சந்திப்பிழைகள், எழுத்து வடிவமைப்பில் ஏராளமான பிழைகள் மலிந்து, கிட்டத்தட்ட புரூஃப் பார்க்காமல் வெளிவந்திருக்கும் புத்தகம் இதுதான்.  இதில் முன்பக்கத்தில் திருத்திய பதிப்பு என்று வேறு போட்டிருக்கிறார்கள்.  எதைத்தான் திருத்தினார்களோ?!. பதிப்பகத்தாருக்கே வெளிச்சம்!.  இருப்பினும் கோபிநாத்களின் புத்தகங்கள் பரபரப்பாக விற்பனையாகும் இக்காலகட்டத்தில், இது போன்ற துறைசார்ந்த நூலை வெளியிட்டதற்காக இம்முயற்சியை நிச்சயமாக ஆதரிக்கலாம்.

ஆங்கிலத்தில் சரளமாக வாசிக்கும் நண்பர்கள் இந்திய சர்வே தொடர்பாக எழுதப்பட்ட ஜான்கே-யின் The Great Arc புத்தகத்தைப் படிக்கலாம்.

வெளியீடு கவிதா பப்ளிகேஷன்
பக்கங்கள் 111
விலை    - ரூ.90/-

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு நூல் அறிமுகத்திற்கு நன்றி...

Post a Comment