Tuesday, 27 October 2015

வலசைப் பறவைகளின் வாழ்விடச் சிக்கல்கள்

வலசைப் பறவைகளின் வாழ்விடச் சிக்கல்கள்

தோழர் ஏ. சண்முகானந்தம் எழுதி பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டிருக்கும் வலசைப் பறவைகளின் வாழ்விடச் சிக்கல்கள் என்ற வண்ணப்படங்கள் அடங்கிய நூல் தமிழில் மிகக் குறைவாகவே வெளியிடப்படும் பசுமை இலக்கியம என்ற வகைப்பாட்டில் கவனிக்கத்தக்க நூலாகும். வலசைப் பறவைகள் பற்றிய நூல் என படிக்க ஆரம்பித்தால் சூழலியல், மானிடவியல், மார்க்சியம், சங்க இலக்கியம் மற்றும் சமூகஅறிவியல் எனப் பல தளங்களிலிருந்தும் தகவல்களைக் கொட்டிக் கடும் உழைப்பில் உருவாக்கி இருக்கிறார். எடுத்தவுடன் புத்தகத் தலைப்பிற்கேற்ப விடயங்களை அடுக்காமல் பறவைகளின் உடற்கூறியல் மற்றும் அவற்றின் பரிணாம வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றிக் குறிப்புகள் வழங்கிவிட்டுப் பின்னர் தலைப்பைத் தொடர்கிறார்.  சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை ஒளிப்படக்கலைஞர் என்ற இரட்டைச் சவாரியில் நிலை தடுமாறாமல் பயணம் செய்திருக்கிறார். அதிலும் குறிப்பாக 52 மற்றும் 53ம் பக்கங்களிலுள்ள புகைப்படங்கள் அவ்வளவு அருமை! இருக்கிற வாழ்க்கை இடர்ப்பாடுகளில் இந்தப் பறவைகளைப் பாதுகாத்து என்ன பயன் என்பதைப் பணத்தைத் துரத்தும் சமூகமாக மாறிப் போன இன்றைய இயந்திர மனிதர்களுக்குப் புரியவைப்பது மிகவும் கடினமான வேலையாக இருந்தாலும் இது போன்ற நூல்களின் வரவு மெல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.  

2013ம் ஆண்டு ஜனவரியில் கீழ் கோத்தகிரிக்குச் சென்ற பொழுது நாங்கள் தங்கியிருந்த வனவிடுதியின் வேலியில் வந்தமர்ந்த, பறவைக் கையேடுகளில் சிவப்பு நிறத்தில் அழிந்து வரும் பறவையினம் எனக் குறிப்பிடப்பட்டுள்ள காஷ்மீர் ஈப்பிடிப்பான் (Kashmir Flycatcher) என்ற பறவையைப் பார்த்ததை இன்றும் மகிழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். பறவைகளைப் பார்ப்பது என்பது அறிவியல்பூர்வமான மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய பொழுதுபோக்கல்ல... பொழுது ஆக்கம் என்பதே சரியாகும். இந்நூலில் குறிப்பிட்டுள்ளதைப் போல் பூச்சிகள் சூழ் உலகில் வாழும் நாம் அவற்றைக் கொல்ல பெரும்பணத்தைச் செலவழித்து நச்சு உரங்களை இட்டு மண்வளத்தையும் சூறையாடி நம் சவக்குழியை நாமே அதிவேகமாக வெட்டி வருகிறோம். ஆனால் எவ்விதக் கூலியும் பெறாமல் பூச்சிகளைத் தின்று அவற்றின் பெருக்கத்தைப் பெருமளவில் கட்டுப்படுத்தும் பறவைகளுக்கு நாம் செய்யும் பிரதி உதவி ஒன்றே ஒன்றுதான்... அவற்றின் வாழிடங்களை நாசப்படுத்தாமல் இருப்பதே! சுற்றுச்சூழலிற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பது ஏன்... ஒட்டுமொத்த இயற்கையையும் அழிப்பது தொழில்வளர்ச்சி தான் என்பதை பல ஆதாரங்களோடு முன்வைக்கிறார் சண்முகானந்தம். இவற்றில் உண்மையில்லாமல் இல்லை. ஆனால் தனிநபர் ஒழுக்கச் செயல்பாடுகளான மின்சிக்கனம், தண்ணீர் சிக்கனம் போன்றவைகளை முன்னெடுத்தலே தீர்வு என்ற மழுப்பல்வாதங்களைப் புறந்தள்ள வேண்டும் என நூலாசிரியர் ஒரு இடத்தில் குறிப்பிடுவதை ஏற்றுக் கொண்டாலும் அதில் இருக்கும் உண்மையையும் நாம் புறந்தள்ள முடியாது. நுகர்வுக்கலாச்சாரத்திற்கு அடிமையாகாமல் நாம் ஒவ்வொருவரும் நம் தேவையைக் குறைத்துக் கொள்ளலாமே! நாம் வாங்குவதால்தானே ஒருவன் விற்கிறான். கடந்த பத்தாண்டுகளில் மிகப் பிரபலமான அட்சய திருதியையும் ஐம்பதாயிரத்திற்கும் மேல் விலையுள்ள ஐ-போன் வாங்க அது வெளியாகும் முன் தினமே கடைவாசலில் இரவு முழுவதும் கண் விழித்து வரிசையில் நிற்கும் கூட்டமுமே இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகள்! நூலின் ஆரம்பப் பக்கங்கள் கிறிஸ்டோபர் நோலனின் திரைக்கதை போல அங்குமிங்கும் பயணித்தாலும் போகப் போக கோர்வையாக முடித்திருக்கிறார்.  

நூலின் இறுதியில் சாதியத்தின் தீமைகளைக் குறிப்பிடும் பொழுது அம்பேத்கரைப் பற்றி எழுதும் அதே நேரத்தில்... நூலாசிரியர் ஆங்காங்கே மேற்கோள் காட்டும் பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவனின் வார்த்தைகளிலேயே சொன்னால் “பெரியார் பிறந்த மண்ணில் யூஸ் அண்ட் த்ரோ டம்ளரை யாரும் கண்டுபிடித்திருக்க முடியாது. அது வடக்கத்திக்காரன் கலாச்சாரம்” என தொ.ப சிறப்பு செய்யும் பெரியாரைப் பற்றி எழுதாமல் விட்டது ஏனோ?! நூலில் இடம்பெற்றிருக்கும் ஒளிப்படங்களில் பறவைகளின் பெயரைத் தமிழில் எழுதியிருப்பதோடு அவற்றின் ஆங்கிலப் பெயரையும் குறிப்பிட்டிருந்தால் தொடக்க நிலை பறவை ஆர்வலர்களுக்கு உதவியாக இருந்திருக்கும். பறவைகளின் வலசை தொடர்பான உலக மற்றும் இந்திய வரைபடங்கள் இடம்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு! மல்டிபிளக்ஸ்களில் திரைக்காட்சிகளின் இடைவேளையில் உடலுக்கு ஒவ்வாத நொறுக்குத் தீனிகளுக்கு ஆயிரங்களைச் செலவழிப்பதைவிட, பெரிய லாப நோக்கமின்றி இருநூறு ரூபாய் விலையில் தோழர் சண்முகானந்தம் எழுதியிருக்கும் இந்நூலை வாங்கிப் படிப்பது இந்தியா முழுவதும் இயற்கை சுற்றுலா சென்ற உணர்வைத் தரும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

No comments:

Post a Comment