Monday 28 April 2014

பரவச பரளிக்காடு


கோடையில் ஏதாவது காடு சார்ந்த சுற்றுலா செல்ல முடிவெடுத்து அதுவும் ஒரு நாள் சுற்றுலாவிற்குச் சிறந்த இடமாக பல மாதங்களாகச் செல்லத் திட்டமிட்ட பரளிக்காட்டிற்குச் சென்றோம்.   கோவை வனத்துறை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு எங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொண்டோம்பரளிக்காடு சுற்றுலா சனி, ஞாயிறு மட்டுமேநான்கைந்து நாட்களுக்கு முன்பே முன்பதிவு அவசியம்.


27.04.2014 - ஞாயிறு

காலை 7.45 மணி - முதலில் திருப்பூரிலிருந்து காரமடை. அங்கிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் சிறிது தூரம் சென்று காரமடை ரங்கநாதர் கோவில் என்ற நுழைவாயில் தோரணத்திற்கு நேர் எதிரில் தோலம்பாளையம் செல்லும் சாலையில் பயணித்தோம்.  அதில் சுமார் 20 கி.மீ சென்றால் தாயனூர் என்ற கிராமம் வருகிறது.  அங்கே சாலை இரண்டு பிரிவாகிறது.   இடதுபக்கம் சென்றால் தோலம்பாளையம் வதுபக்கம் சென்றால் வெள்ளியங்காடு.   நாம் வலதுபக்கம் திரும்பி வெள்ளியங்காடு நோக்கிப் பயணித்தோம்ஏதாவது திண்பண்டங்கள் இத்யாதி இத்யாதி வாங்க வேண்டுமென்றால் வெள்ளியங்காட்டில் வாங்கிவிடுவது நல்லது.   அதற்குமேல் எந்தக் கடையும் இல்லைகாரமடையிலிருந்து வெள்ளிங்காடு வரை அருமையான சாலைஅதற்கு மேல் குண்டும் குழியுமான சாலைஇருந்தாலும் மோசமில்லைவெள்ளியங்காடு தாண்டி மலைப்பகுதி ஆரம்பமாகும் இடத்தில் வனத்துறையின் முதல் சோதனைச் சாவடி வருகிறதுஅங்கு பரளிக்காடு சுற்றுலாவிற்கு முன்பதிவு செய்துள்ளோம் என்று சொன்னால் மட்டுமே அனுமதிக்கிறார்கள்பிறகு மலையேற்றம். குறுகலான மலைப்பாதை என்பதால் இருசக்கர வாகனம்தான் வசதி.   சாலையில் ஆங்காங்கே கிடந்த யானை த்திகள் திகிலூட்டினாலும் காட்டின் பசுமை நறுமணமும், பூச்சிகளின் ரீங்காரமும், பறவைகளின் சிம்பொனியும் பயணத்தை இனிமையாக்கின. மலையேறி இறங்குவது போல் இறங்கி மறுபடியும் ஒரு ஏற்றம்.  அங்கே முள்ளி என்ற இடத்தில் இரண்டாவது சோதனைச் சாவடி வருகிறது.  அங்கும் பரளியாறு சுற்றுலா என்றால்தான் வழி விடுகிறார்கள். 

அத்திக்கடவு  மேம்பாலம்



அந்த இரண்டாவது சாவடி தாண்டி சிறிது தூரம் சென்றால் அத்திக்கடவு மேம்பாலம் வருகிறது.  அங்கிருந்து எந்தப் பிரிவும் இல்லாமல் ஏற்ற இறக்கங்களுடன் சாலை செல்கிறது.  பிறகு ஒரு இடத்தில் பரளி மற்றும் குந்தா என கி.மீ பலகை வருகிறது.  அதில் பரளி என்ற பாதையில் சென்றால் மீண்டும் பரளி மின் நிலையம் மற்றும் பில்லூர் மின் நிலையம் என்ற பெயர்ப்பலகை வருகிறது.  அதில் பில்லூர் மின் நிலையம் என்று அம்புக் குறியிடப்பட்ட பாதையில் செல்ல வேண்டும்.  பரளி மின் நிலையம் என்ற பெயர் சற்று குழப்பும்.  வழி தவறி சென்று விட்டால் நேரம்தான் விரயமாகும்.  ஏனெனில் நாம் செல்ல வேண்டிய பரளிக்காடு, பில்லூர் மின் நிலையத்திற்குச் சற்று முன்னர்தான் அமைந்துள்ளது.


பில்லூர் அணை

அந்த நீரேற்று நிலையம்

ஒரு வழியாக இடத்தை நெருங்குகையில் பரளிக்காட்டிற்கு சிறிது முன்பே உள்ள ஒரு வளைவில் சுக்குக் காபியோடு நம்மை வரவேற்கிறார்கள்.  அதை முடித்து விட்டு மேலே சிறிது தூரம் சென்று ஒரு மேட்டுப்பகுதியில் வாகனத்தை நிறுத்தி, பில்லூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதிக்கு நடந்து சென்றோம்.  முன்பதிவு செய்யும் பொழுது குறிப்பிட்ட நேரமான காலை 10.30க்குள் சென்று சேர்ந்தோம்.  அங்கே இருந்த வனத்துறை ஊழியரிடம் எங்கள் பெயரைச் சொல்லி முன்பதிவு செய்த விபரத்தைக் கூறினோம்.  அவர், பெயரைச் சரிபார்த்த பிறகு ஒருவருக்கு ரூ.400 வீதம் இருவருக்குண்டான ரூ.800-ஐ செலுத்தினோம். (கட்டணம் மதிய உணவிற்கும் சேர்த்துதான்).  சிறுவர்களுக்குக் கட்டணம் இல்லை.  இந்தக் கட்டணம் உணவு சமைக்கும் பெண்கள் மற்றும் பரிசல் ஓட்டும் இளைஞர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படுகிறது.  பிறகு ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் அணி அணியாக வந்திறங்கினர்.  ஒரு நாளைக்கு 80 நபர்களுக்கு மட்டுமே அனுமதி.  பரிசல் பயணத்திற்குத் தயாரானோம்.  பரிசல் ஓட்டுவது உள்ளூர் இருளர் இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள்தான்.  சனி, ஞாயிறு மட்டும்தான் இந்த வேலை.  மற்ற நாட்களில் விவசாயம். 


ஒரு பரிசலுக்கு நான்கு பேர் மட்டுமே.  எல்லோருக்கும் லைஃப் ஜாக்கெட் தருகிறார்கள் (கடந்த 2009ம் ஆண்டு நடந்த தேக்கடி விபத்து தந்த படிப்பினை).  பரிசலானது பைபரால் ஆனது மூங்கிலால் அல்ல.  பயண நேரம் சுமார் ஒண்ணேகால் மணி நேரம்.  அதில் ஒரு கரையிலிருந்து மறு கரைக்குச் சென்று அங்கே இருபது நிமிடம் இளைப்பாறிவிட்டு மீண்டும் கிளம்பினோம்.  போகும் வழியில் பிரம்மாண்டமான நீரேற்று நிலையம் இருந்தது.  அதைப்பற்றி பரிசல் ஓட்டியிடம் கேட்ட பொழுது, அது காரமடை, மேட்டுப்பாளையம், திருப்பூர் மற்றும் கோவையின் சில பகுதிகளுக்கு நீர் இங்கிருந்துதான் அனுப்பப்படுகிறது என்றார்.  நாங்கள் வசிக்கும் திருமுருகன்பூண்டியில் பிரதான சாலையின் முகப்பிலுள்ள இரண்டு குழாய்களில் எந்நேரமும் தண்ணீர் வரும்.  நாங்கள் இந்த ஊருக்கு வந்த புதிதில் அந்தக்குழாய்களுக்கு எங்கிருந்து தண்ணீர் வருகிறது என்று பக்கத்திலுள்ளவர்களிடம் கேட்டால்... அது மேட்டுப்பாளையம் தண்ணீர் என்று சொல்வார்கள்.  இன்றைக்கு அதற்கான விடையை நேரில் கண்டது சுவாரஸ்யமாக இருந்தது.




பரிசல் பயணம் முடிந்து வெயில் தந்த களைப்பினால் பசி வயிற்றைக் கிள்ளியது.  கரையத் தொட்ட நிமிடமே உணவு தயார் என்றனர்.  முன்பு சுக்கு காபி அருந்திய இடத்திற்குப் பக்கத்தில் மதிய உணவு உண்டோம்.  காய்கறி பிரியாணி, சப்பாத்தி, கேசரி, கேழ்வரகு களி, கீரைக் கடைசல், சிக்கன் கிரேவி, தயிர் சாதம், முடிவில் வாழைப்பழம்.  இவைதான் மெனு.  மதிய உணவை அங்குள்ள இருளர் பெண்களே சமைத்து மிகவும் சுகாதாரமான முறையில் பஃபே முறையில் பரிமாறுகிறார்கள்.  சாப்பிட்டு முடித்து விட்டு அங்குள்ள பிரமாண்டமான மரத்தடியில் போடப்பட்டுள்ள பிளாஸ்டிக் நாற்காலிகளில் அமர்ந்து இளைப்பாறினோம்.  சிறுவர்கள் அந்த மரங்களில் கட்டப்பட்டுள்ள ஊஞ்சலில் ஆட் ஆரம்பித்தனர்.  பிறகு சில இளைஞர்கள் மற்றும் வயதானவர்களும் ஊஞ்சலாட்டத்தில் ஐக்கியமாயினர்.


பிறகு மதியம் சுமார் 3 மணி வாக்கில் அங்கிருந்து வந்த வழியே சிறிது தூரம் திரும்பி ஒரு இடத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு சிறிய மலைச்சரிவில் வன ஊழியர்கள் துணையுடன் இறங்கினோம்.  தூரத்தில் சுழித்து ஓடும் பவானி ஆறு.  சிறுவர்களுடன் பெரியவர்களும் உற்சாகக் குரலெழுப்பினர்.  கோடைகாலமாததால் தண்ணீர் குறைவாக இருந்தது.  இருந்தாலும் ஒரு சில வயதானவர்களைத் தவிர மற்ற அனைவரும் ஆற்றில் இறங்கி குதூகளித்தனர்.  நேரம் போனதே தெரியவில்லை.  5 மணிக்கு சற்று முன்பே வன ஊழியர் அனைவரையும் கிளம்பச் சொன்னார்.  அங்கிருந்து கிளம்ப மனமில்லாமல் அனைவரும் ஒருவித சோகத்துடன் புறப்பட்டோம்.

குறைந்த செலவில் நிறைவான சுற்றுப்பயணம் செய்ய பரளிக்காடு மிகப் பொருத்தமான இடம்.

சுற்றுலா தொடர்பிற்கு திரு. மூர்த்தி, உதவி வனக் காவலர்
                        அலைபேசி 9047051011.

2 comments:

கோமதி அரசு said...

அருமையான சுற்றுலா பயணச் செய்தி.
குழந்தைகள் ஊரிலிருந்து வரும் போது போக வேண்டும். குறித்து வைத்துக் கொண்டேன்.
நன்றி.

கோமதி அரசு said...

படங்கள், விவரங்கள் எல்லாம் மிக அருமை.
நன்றி.

Post a Comment