Monday, 24 December 2012

சேவல்கட்டு


சேவல்கட்டைப் பற்றித் தமிழில் வெளிவந்திருக்கும் முதல் நாவல்... 2011ம் ஆண்டுக்கான யுவ புரஸ்கார் விருது வென்ற நாவல்... போன்ற காரணங்களால் இந்நாவலை வாங்கிப் படித்தேன். போத்தையா என்கிற முக்கியக் கதாபாத்திரத்தின் பார்வையில் கதை விரிகிறது. நாவலைப் பாதி ஃபிளாஷ்பேக் பாதி நிகழ்காலம் என்ற கலவையில் எழுதியுள்ளார் ம. தவசி. போத்தையாவின் தந்தை சேவுகன் பிரிட்டிஷ் இந்தியாவில் கிராமங்களில் வரி வசூல் செய்யும் ஜமீனாகப் பணிபுரிகிறார். அவருக்கு சேவல்கட்டின் மீது அதீத ஆர்வமேற்பட்டு அதனால் அவரது வாழ்வும் அதைத்தொடர்ந்து அவரது மகன் போத்தையாவின் வாழ்வும் எப்படிச் சீரழிந்தது என்பதுதான் நாவலின் மையக் கரு.



ஜமீன் சேவுகன் தன் குடும்ப நகைகள், நிலங்கள் போன்றவற்றைப் படிப்படியாக சேவல் சண்டையில் சரியான பயிற்சியில்லாமலும் ஜமீன் என்ற மமதையாலும் இழப்பது நாவலைப் படிக்கும் நமக்குப் பதை பதைப்பை உண்டு பண்ணும். பிறகு அவரது மகன் போத்தையாவும் தன் தந்தையைப் போலவே சேவல் சண்டையில் தோற்பதும் விடாமுயற்சிக்குப் பிறகு அதன் நுணுக்கங்களைக் கற்று முக்கியப் போட்டி ஒன்றில் தொடர்ந்து வெல்வார். அப்போட்டி நடந்து கொண்டிருக்கும் போதே போலீஸ்காரர்கள் வருகிறார்கள் என்ற தகவலால் போட்டிப் பாதியிலேயே நிறுத்தப்பட்டு அனைவரும் தப்பித்து ஓடுகிறார்கள். பல நூற்றாண்டுகளாக சுதந்திரமாக நடந்து வந்த சேவல் கட்டுக்கு இப்பொழுதெல்லாம் காவல்துறையின் ஒப்புதலைப் பெற வேண்டியுள்ளதே! எனத் தன் நண்பனிடம் புலம்பிய படியே வரும் போத்தையாவின் நிலை இறுதியில் என்னவானது என்பதோடு கதை முடிகிறது.

சேவல்கட்டு என்ற ஒரு துறைசார்ந்து எழுதப்பட்ட நாவல் என்பதால் சேவலைத் தேர்ந்தெடுப்பதில் ஆரம்பித்து... அதறகானப் பயிற்சிகள்... உணவு முறைகள் என்று பல தகவல்கள் நூல் முழுதும் பரவிக் கிடக்கின்றன. சண்டைச் சேவல்களை வளர்த்து விற்கும் சேவல் கட்டின் பிதாமகன்கள், கத்தி செய்யும் ஆசாரி, தென் மாவட்டங்களில் சேவல் கட்டின் சுருக்கமான வரலாறு, சேவல் கட்டுக்கென்றேப் பயன்படுத்தும் சில சொற்பிரயோகங்கள் போன்ற பல நுட்பமான தகவல்களில் ஆசிரியரின் உழைப்புப் பாராட்டத்தக்கது. இருப்பினும் ஒரு சிறிய குறையாக நாவலில் அவ்வப் பொழுது வரும் வட்டார வழக்குச் சொற்களுக்கு அடிக்குறிப்புகள் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

தோற்றுப் போனவர்களின் கதைதான் என்றாலும் வெற்றிக்கான சூத்திரங்களை இந்நாவல் மறைமுகமாகச் சொல்கிறது. இது எல்லாப் போட்டிகளுக்கும் பொருந்தும்! படிக்க வேண்டிய நாவல்.

நூல்           : சேவல்கட்டு
ஆசிரியர்  : ம. தவசி
விலை       : ரூ. 70/-
வெளியீடு : புதுமைப்பித்தன் பதிப்பகம்,
57, 53வது தெரு, 9வது அவென்யு,
அசோக் நகர்,
சென்னை - 600 083.
தொலைபேசி எண் : 044-24896979

3 comments:

ராஜ் said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் பதிவு போட்டு இருக்கீங்க. :):):)
எனக்கு நாவல் என்றால் ஹாப்பி என்டிங் தான் பிடிக்கும். நீங்கள் சொல்லுவதை பார்த்தால் முடிவு மனத்தை பிசையும் போல் தெரிகிறது. "சேவல்கட்டு" வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாய் படிக்கிறேன்.

Unknown said...

அழகு நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பதிவு. சுவாரஸ்யமானது சேவல் சண்டை அதைப் பற்றிய நாவல் படிக்கமல் விடமுடியுமா...!

இராஜராஜேஸ்வரி said...

இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

Post a Comment