Friday, 13 April 2012

தெங்குமரஹாடா - ஒரு சிலிர்ப்பான பயணம்

கடந்த இரண்டு மூன்று வருடங்களாக தெங்குமரஹாடா செல்ல வேண்டுமென்று ஆசை. ஆனால் நிறைவேறவே இல்லை. முதல் காரணம் அங்கு ஜீப் போன்ற பெரிய வாகனங்கள் இருந்தால்தான் செல்ல முடியும். நமக்கு ஜாதகத்தில் நான்கு சக்கர வாகனப் ப்ராப்தி கிடையாது. பேருந்து வசதி இருக்கிறது. ஆனால் அது வரும் சரியான நேரம் தெரியாது. அங்கு தங்குவதற்கு விடுதிகளும் கிடையாது. ஒரே ஒரு வன இலாகா விடுதி மட்டும் உள்ளது. அதற்கு டி.எஃப்.ஓ விடம் அனுமதி பெற வேண்டும். இத்தனை இடர்ப்பாடுகளையும் கடந்து இப்பயணத்தைச் சாத்தியமாக்கியவர் அண்ணன் அம்சா. எனது நீண்ட கால நண்பர். இவர் பலமுறை அங்கு சென்றுள்ளார். இவர் கால் பதிக்காத இடமே அங்கு இல்லையென சொல்லுமளவிற்கு தெங்குமரஹாடாவுடன் நல்ல பரிச்சயமுள்ளவர். முதலில் எங்களோடு வேறு இரண்டு நண்பர்களும் வருவதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவர்கள் வராததால் நாங்கள் இருவர் மட்டுமே புறப்பட்டோம்.
அண்ணன் அம்சா

நாள் : 08.04.2012 - ஞாயிறுமுதலில் திருப்பூரிலிருந்து புளியம்பட்டி. பிறகு பவானி சாகர் சென்றோம். அங்கே எங்களை வரவேற்றவர் நண்பர் பாரதிதாசன். இவர் தனது 'அருளகம்' அறக்கட்டளை மூலம் அழிந்து வரும் அரிய பறவையினமான பிணந்தின்னிக் கழுகுகளைப் பற்றி அப்பகுதி மக்களுக்குக் கடந்த மூன்றாண்டுகளாக விழிப்புணர்வு முகாம்களை மிகச் சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். பேருந்து நண்பகல் 12.30 மணிக்குதான் என்பதால் சிற்றுண்டியை முடித்து விட்டு அவர் அலுவலகத்தில் சுவாரஸ்யமாகப் பல விசயங்களை நானும் அண்ணன் அம்சாவும் பேசிக் கொண்டிருந்தோம். பாரதிதாசான் தெங்குமரஹாடாவில் நாங்கள் தங்குவதற்காக ஓர் அருமையான வீட்டை எற்பாடு செய்தார். மணி 12ஐ நெருங்கிய பொழுது அங்கிருந்து கிளம்ப எத்தனித்தோம். ஆனால் பேச்சு சுவாரஸ்யத்தில் பாரதிதாசன் எங்களிடம், '12.30 மணி பஸ் போனாலும் பரவாயில்லை. 2.30 மணிக்கு ஒரு வேன் செல்லும். அதில் போங்க' என்றார். நாங்களும் சரியென்று பேச்சைத் தொடர்ந்தோம். ஒரு மணி நேரம் கழித்து மூவரும் பேருந்து நிலையத்திற்கு எதிரில் மதிய உணவை முடித்து விட்டு வேன் வரும் நேரத்திற்கு முன்பாகவே சென்றோம். அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. வேன் அரைமணி முன்னதாகவேப் புறப்பட்டுவிட்டது. நல்ல வேளையாக மாலை 5.45 மணிக்குத் தெங்குமரஹாடாவிற்குக் கடைசிப் பேருந்து ஒன்று இருந்தது. சற்று சோர்ந்த நிலையில் பாரதியின் அலுவலகத்திற்கு வந்து சிறிது குட்டித் தூக்கம் போட்டுவிட்டு... ஒரு வழியாக மாலைப் பேருந்தில் ஏறி உட்கார்ந்தோம். பேருந்தில் கூட்டமில்லை. பவானிசாகர் அணையைக் கடந்த பிறகு வரும் வன இலாகா சோதனைச் சாவடியைத் தாண்டி சிறிது தூரத்திற்குதான் தார்ச் சாலை. பிறகு என் வாழ்க்கையிலேயே அப்படி ஒரு பாதையில் பயணித்ததில்லை. மிகவும் கரடுமுரடான மண் சாலை. கார்களிலெல்லாம் செல்லவே முடியாது. வெறும் முப்பது முதல் நாற்பது கிலோமீட்டர் தூரப் பயணம் கிட்டத்தட்ட ஒண்ணேமுக்கால் மணி நேரம் பிடித்தது. அங்கே இறங்கி பரிசலில் மோயாற்றைக் கடந்துதான் ஊருக்குள் செல்ல முடியும். பரிசலில் ஒரு நபருக்கு ஐந்து ரூபாய்!. ஊருக்குள் உணவு விடுதிகள் கிடையாதென்பதால் நாங்கள் இரவு உண்பதற்காக பிரட் மற்றும் பிஸ்கட்டுகளை எடுத்துச் சென்றோம். இருந்தாலும் பேருந்து ஓட்டுனரின் உதவியால் இரவு உணவு கிடைத்தது. சுமாரான இட்லிதான் என்றாலும் பசி ருசியறியவில்லை. பயணக் களைப்பினால் நன்றாகத் தூங்கிவிட்டோம்.


நாள் : 09.04.2012 - திங்கள்


நான்


காட்டுக்குள் கொடியவர்களின் செயல்
காலை ஏழு மணிக்கே எழுந்து அல்லி மாயாறு என்ற கிராமத்திற்குச் செல்லும் காட்டுப்பாதையில் பறவைகளை அவதானிக்கப் புறப்பட்டோம். பறவை அவதானிப்பு (Bird Watching) என்பது ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு. அதை அனுபவித்தால் தான் தெரியும். அதைப்பற்றி ஒரு தனி பதிவே எழுதலாம். ஏராளமான விசயங்கள் உள்ளன. காலை உணவிற்கு பிரட்-ஐ எடுத்துக்கொண்டு மதிய உணவிற்கு ஒரு சிறிய மெஸ்சில் முன்பதிவு செய்துவிட்டு நடையைத் தொடர்ந்தோம். பகல் நேரத்தில் தெங்குமரஹாடாவைப் பார்ப்பதே தனி அழகு. ஊரின் முப்புறமும் மலைத் தொடர்கள். ஊரைச்சுற்றி மோயாறு. சுத்தமான காற்று. இருந்தாலும் நகரத்தின் அம்சங்கள் அங்கே தீண்டாமலில்லை. தேநீர்க்கடையில் 'ஒய் திஸ் கொலவெறி' ஒலித்தது. பரவலாக அலைபேசிகள் தென்பட்டன. அலைபேசியைப் பொறுத்தவரை பி.எஸ்.என்.எல் மற்றும் வோடஃபோன் மட்டுமே. மற்றவை கவரேஜ் கிடையாது. ஊரைவிட்டு நகர்ந்து காட்டுப்பாதையில் செல்லும் பொழுது வழியெங்கும் விதவிதமான பறவைகள் எழுப்பும் ஒலி... சிம்பொனி தோற்றுவிடும். அண்ணன் அம்சா பறவை அவதானிப்பு மற்றும் சுற்றுச்சூழல் விசயங்களில் இருபது வருடத்திற்கும் மேலான அனுபவம் உள்ளவர். அவரின் உதவியோடு பைனாகுலர் வழியாகப் பார்த்த பறவைகளின் பட்டியல் கீழே...
1) Indian Robin
2) White Bellied Drango
3) Black-rumped Flameback (Woodpecker)
4) Jungle Babbler
5) Large billed Crow
6) Coppersmith Barbet
7) Rufous Treepie
8) Eurasian Collared Dove
9) Spotted Dove
10) Scarlet Minivet
11) Purple Sunbird
12) Purple-rumped Sunbird
13) Common Hawk Cuckoo
14) House Sparrow
15) Grey Francolin
16) Green Bee Eater
17) White-rumpled Vulture
18) Indian Grey Hornbill

அதிலும் மேலே கடைசியாக உள்ள வல்ச்சர் மற்றும் ஹார்ன்பில் பறவைகள் மிகவும் தனித்துவமானவை. அவைகளைக் காட்டில் பார்ப்பதே அரிது. அன்று எங்களுக்கு அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். மலை முகட்டின் உச்சியில் நான்கு வல்ச்சர்கள் பறந்து கொண்டிருந்தன. நீண்ட நேர அவதானிப்பிற்குப் பிறகே அவைகளை White-rumped Vulture என்று அடையாளம் கண்டோம். பிறகு ஓர் ஆலமரத்தில் Coppersmith Barbet என்ற பறவையின் ஒலி வந்த திசையில் அதைப் பார்த்து முடித்துத் திரும்புகையில்... அதே மரத்தின் மற்றொரு கிளையில் ஒரு பறவை வந்தமர்ந்தது.  அதைப் பார்த்த சில நொடிகளிலேயே அண்ணன் அம்சா துள்ளினார். அது  Indian Grey Hornbill என்று அடையாளப்படுத்தினார். பொதுவாக ஏப்ரல் முதல் ஜூன் மாதங்களில் ஆல மரத்தில் கனிகள் காய்க்கும். அக்கனிகளை உண்ண பறவைகள் அங்கு வரும். அப்படி வந்த பொழுதுதான் அது எங்கள் கண்களில் பட்டது. பறவை அவதானிப்பில் இறங்கிவிட்டால் நேரம் போவதே தெரியாது. மணி 12ஐ நெருங்கியது. மதியம் 2 மணிக்குப் பேருந்து என்பதால் அறைக்குத் திரும்பினோம்.  பிறகு மதிய உணவு  உண்டுவிட்டுப் பேருந்து நிற்குமிடத்தை நோக்கி நடையைக் கட்டினோம். அங்கிருந்து கிளம்ப மனமில்லாமல் நடந்து வந்த எங்களை மெல்லிய சாரலோடு விடைகொடுத்தது தெங்குமரஹாடா. பேருந்தில் வரும் வழியில் ஃபைனல் டச்சாக இந்தியாவிற்கே உரிய தனி சிறப்பினமான Black Buck எனப்படும் இரு வெளிமான்களைக் கண்டு ரசித்தோம். ஒரு காலத்தில் காடுகளெங்கும் காணப்பட்ட இவைகளை இன்று பார்ப்பதே வெகு அரிது. நல்ல பசியிலிருப்பவன் ஏதாவது கிடைக்காதா என ஏங்கிக்கொண்டிருக்கும் வேளையில் ஃபுல் மீல்ஸ் கிடைத்தால் எப்படியிருக்குமோ அப்படி இருந்தது வெளிமான்களைப் பார்த்தது. நீங்களும் ஒருமுறை தெங்குமரஹாடா சென்று வாழ்வின் உண்மையானப் பரவசத்தைக் கண்டெடுங்கள்!

11 comments:

வீடு சுரேஸ்குமார் said...

எங்கள் பகுதியினை பற்றி விவரித்ததுக்கு மிக்க நன்றி...திருப்பூர்ல எங்க இருக்கிங்க...?

மதுரை அழகு said...

திருமுருகன் பூண்டியில்

கோவை நேரம் said...

நல்ல பயணம் ....எனக்கும் கொஞ்சம் இந்த இடத்துக்கு போகனும்னு ஆசை...

கணேஷ் said...

இன்று வலைச்சரத்தில் உங்கள் பதிவைக் குறிப்பிட்டுள்ளேன். சமயமிருப்பின் பார்த்துக் கருத்திட வேண்டுகிறேன்.

http://blogintamil.blogspot.in/2012/05/blog-post_02.html

வீடு சுரேஸ்குமார் said...

அன்பு நண்பர் உயர்திரு மதுரை அழகு அவர்களுக்கு வணக்கம்

கோவை திருப்பூர் பொள்ளாச்சி மற்றும் பல்லடம் ஆகிய ஊர்களில் இருந்து
பதிவுலகிலும் முகநூல் மற்றும் டிவிட்டரில் எழுதி வரும் தாங்களும் தங்களின்
நண்பர்களையும் குழுமத்தில் இணைக்கலாம்.

விரைவில் கோவையில் கலந்துரையாடல் நடக்க உள்ளது...

kovaibloggers@gmail.com என்கிற மெயில் முகவரியில் தங்கள் மெயில் முகவரியை பதிவு செய்யவும்

உங்களின் தனிப்பட்ட ரகசியங்கள் காக்கப்படும்(புகைப்படம், தொலைபேசி எண்)


குழுமத்திற்கான முதல் விதை இங்கே...

http://www.kovaineram.com/2012/05/blog-post_16.html

கே. பி. ஜனா... said...

படிக்க சுவையாக இருந்தது. விவரங்களும் பயனுள்ளதாக...

arul said...

nice

T.N.MURALIDHARAN said...

உங்கள் பதிவு பற்றி வலைசரத்தில் குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது.
நேரமிருப்பின் பார்க்கவும்.
http://blogintamil.blogspot.in/

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பதிவு ! தொடர்ந்து எழுதுங்கள் !

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை !

இனி தொடர்வேன். நன்றி !

திண்டுக்கல் தனபாலன் said...

சின்ன வேண்டுகோள் : Email Subscription Widget வைக்கவும். நிறைய வாசகர்களுக்கு உங்களின் படைப்புக்கள் சென்றடையும் ! நன்றி !

சாதாரணமானவள் said...

கேள்விப்பட்டிராத இடம்... நல்ல பதிவு...

Post a Comment