Tuesday 13 March 2012

SILVER STREAK (1976) - ஓடும் இரயிலில் ஒரு த்ரில்லர்


ஜார்ஜ் கால்ட்வெல் (வைல்டர்) என்கிற புத்தக எடிட்டர் தன் தங்கையின் திருமணத்திற்காக லாஸ் ஏஞ்செல்சிலிருந்து சிகாகோவிற்கு சில்வர் ஸ்ட்ரீக் என்ற இரயிலில் புறப்படுகிறான்.  மொத்தம் இரண்டரை நாள் பயணம்.  முதல் நாள் பயணத்திலேயே இரயிலிலுள்ள பாரில் ஹில்லி (க்ளேபர்க்) என்ற பெண்ணைச் சந்திக்கிறான்.  ஹில்லி தான் ஸ்க்ரெய்னர் என்ற வரலாற்றாசிரியரின் உதவியாளர் என்றும் அவர் ரெம்ப்ரான்ட் என்ற புகழ்பெற்ற ஓவியரைப் பற்றி எழுதிய புதிய புத்தக வெளியீட்டிற்காக சிகாகோ செல்வதாகக் கூறுகிறாள்.  இருவருக்குமிடையே நடக்கும் தொடர் பேச்சு காதலில் முடிகிறது. ஸ்க்ரெய்னர், அதே இரயில் வேறு கம்பார்ட்மென்ட்டில் இருப்பதால், அன்றிரவு ஜார்ஜ் அவள் அறையில் தங்குகிறான்.  இருவரும் ரொமான்ஸ் மூடில் இருக்கும் பொழுது, ஜன்னல் வழியாக ஒரு வயதான மனிதர் தலையில் சுடப்பட்டன் ஹிலையில் இறந்து கீழே விழுவதை ஜார்ஜ் பார்க்கிறான்.  ஹில்லி அவனிடம், மறுநாள் காலை இரயில் நடத்துனரிடம் இதைபற்றி தெரிவிக்கலாம் என்கிறாள்.


மறுநாள் காலையில் அவள் ஜார்ஜிடம் ஸ்க்ரெய்னரின் புதுப் புத்தகத்தைக் காண்பிக்கிறாள்.  புத்தகத்தைப் பிரித்துப் பார்த்த ஜார்ஜ் அதிர்ச்சியாகிறான். முதல் நாள் இரவு ஜன்னல் வழியாகப் பார்த்த முகம் ஸ்க்ரெய்னரைப் போலவே இருக்க இறந்தது ஸ்க்ரெய்னர் தான் என்கிறான்.  ஹில்லி அதை மறுக்கிறாள். அந்தப் புத்த்கத்திற்குப் பின்னால் ஒரு கவர் இருக்கிறது.  அவன், ஹில்லி தான் சொல்வதை சீரியசாக எடுதுக்கொள்ளாததால் அந்தப் புத்தகத்தை உள்ளே இருக்கும் கவருடன் தூக்கி எறிகிறான்.  அது அவனுடைய பெட்டிக்குள்ளே விழுகிறது. உடனே ஜார்ஜ் ஸ்க்ரெய்னர் தங்கியிருந்த அறைக்குச் செல்கிறான். அந்த அறையில் இருக்கும் வயதான ஒருவன் ஜார்ஜை உள்ளே விடாமல் வெளியே தள்ளுகிறான்.  வெளியிலிருக்கும் அந்தக் கிழவனின் அடியாள் அவனை இரயிலிலிருந்து தள்ளி விடுகிறான்.  பொட்டல் வெளியில் தனியாக நடந்து வரும் ஜார்ஜ் அங்கே ஒரு பண்ணை வீட்டைப் பார்க்கிறான். அங்கிருக்கும் வயதான பெண்மணியிடம் உதவி கேட்கிறான்.  அந்த மூதாட்டி ஜார்ஜை தன் க்ளைடர் விமானத்தில் ஏற்றி சில்வர் ஸ்ட்ரீக் நிற்கும் அடுத்த ஸ்டேசனில் அவனை இறக்கி விடுகிறாள்.  ஒருவழியாக இரயிலில் ஏறி ஹில்லி இருக்கும் அறைக்குப் போகிறான்.  அங்கே ஸ்க்ரைனர் உயிரோடிக்கிறார்.  கூடவே அவரது நண்பர் ரோஜர் (மெக்கூகன்) என்பவனும் ஜார்ஜை இரயிலிலிருந்து கீழே தள்ளிவிடச் சொன்ன கிழவனும் கூட இருக்கிறார்கள்.  ஹில்லி, ஜார்ஜை தன் பாய் ஃபிரண்ட் என அவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறாள்.  ஜார்ஜ் அவர்கள் எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்கிறான்.  எல்லாம் தன் மன பிரமையாக இருக்கலாம் என சமாதானமடைந்து பாருக்கு வருகிறான்.

பாரில் ஜார்ஜுக்கு பாப் ஸ்வீட் என்ற மருந்து விற்பனையாளனுடன் பழக்கம் ஏற்படுகிறது.  அவனிடம் முந்தின நாள் நடந்தவற்றை விவரிக்கிறான் ஜார்ஜ். தான் பார்த்தது கனவா அல்லது நிஜமா என்ற குழ்ப்பத்திலேயே இருக்கிறான். ஸ்வீட் அந்தக் கொலை சம்பந்தமாக நிறையக் கேள்விகளை அவனிடம் கேட்கிறான். சந்தேகமடையும் ஜார்ஜ், ஸ்வீட்டிடம் 'அவன் யார்?' எனத் துருவுகிறான். ஸ்வீட், 'தான் ஒரு மருந்து விர்பனையாளன் அல்ல எனவும் தான் ஒரு உளவுத் துறை ஏஜென்ட் எனவும்' உண்மையைச் சொல்கிறான்.  அதோடு இந்த இரயிலில் உள்ள தேடப்படும் குற்றவாளியான ரோஜரைப் (ஹில்லி அறையில் ஸ்க்ரைனருடன் இருந்தவன்) கண்காணிக்க வந்ததாகவும் கூறுகிறான். ஜார்ஜுக்கு ஒரு விசயம் பளிச்சிடுகிறது.  அவன் ஸ்வீட்டிடம் முந்தின இரவு கீழே விழுந்த மனிதரின் கோட் கிழிந்த்திருந்ததாகச் சொல்கிறான். ஜார்ஜும் ஸ்வீட்டும் சேர்ந்து இரயிலின் மேல் பகுதிக்கு வந்து பார்க்கிறார்கள். அங்கே கோட்டிலிருந்து கிழிந்த துணியைப் பார்த்துக் கொலை நடந்ததை உறுதி செய்கிறார்கள்.  ஸ்க்ரைனரைக் கொன்றது ரோஜர்தான் என்றும் நம்புகிறார்கள்.  அப்படியானால் ஸ்க்ரைனர் போலவே தோற்றமளிக்கும் நபர் யார்? ரோஜர் ஏன் ஸ்க்ரைனரைக் கொல்ல வேண்டும்? இந்த இரண்டு கேள்விகளில் தான் அடங்கியுள்ளது அந்த எதிர்பாராத ட்விஸ்ட்...! அது உங்கள் பார்வைக்கு....

படத்துளிகள்

இப்படத்தின் திரைக்கதையை காலின் ஹிக்கின்ஸ் எழுதியிருக்கிறார். ஒரு த்ரில்லர் சினிமாவை படம் முழுவதும் நகைச்சுவை இழையோட அருமையாக அமைத்திருப்பார். குறிப்பாக படத்தின் இறுதியில் வரும் அந்த திருடன் கதாபாத்திரத்தின் சேட்டைகள் அட்டகாசம்.

திரைக்கதைக்கு அடுத்து நம் கவனம் ஈர்ப்பவர்களில் முதன்மையானவர் ஒளிப்பதிவாளர் டேவிட் வால்ஸ். இரவு நேரங்களில் தூரத்தில் ஒற்றைப் புள்ளியாய் இரயில் வரும் காட்சியும் க்ளைடர் விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட டாப் ஆங்கிள் காட்சியும் இதற்குச் சான்று. அடுத்து இசையமைப்பாளர் ஹென்றி மேன்சினி. படத்தின் முதல் காட்சியில் இரயில் புறப்படும் போது வரும் பின்னணி இசை அபாரம்!

க்ளைமாக்சில் சிகாகோ இரயில் நிலையத்தை சில்வர் ஸ்ட்ரீக் ரயில் உடைக்கும் காட்சியில் நிற்கிறார் இயக்குனர் ஆர்தர் ஹில்லர். அந்தக் காலத்திலேயே என்ன ஒரு பிரமாண்டம்! அந்தக் காட்சியில் ஆர்ட் டைரக்ஷனும் அற்புதம்.

சுருட்டை முடி கதாநாயகன் வைல்டர், நாயகி க்ளேபர்க், திருடன் ரிச்சர்ட் ஆகியோர் படம் முடிந்தும் நம் மனதில் நிற்கிறார்கள்.

க்ளைமாக்ஸ்
ஓடும் இரயிலை வைத்து எத்தனையோ த்ரில்லர் படங்கள் வந்தாலும் இந்தப்படம் ஒரு தனி ரகம். போரடிக்காத திரைக்கதைக்காகப் பார்க்க வேண்டிய படம்!

4 comments:

பால கணேஷ் said...

இப்படி ஒரு படத்தைப் பத்தி இப்பத்தான் கேள்விப்படுகிறேன். த்ரில்லர் டைப் என்றாலே எனக்கு ரொம்பப் பிடித்த விஷயம். தேடிப் பிடித்து பார்த்து விடுகிறேன். நன்றி!

அம்பலத்தார் said...

மிகவும் நேர்த்தியாக எழுதப்பட்ட சுவாரசியமான விமர்சனம் படத்தை பார்க்கும் ஆவலை தூண்டிவிடுகிறது.

Yaathoramani.blogspot.com said...

மிக மிக அருமையாக விமர்சனம் செய்துள்ளீர்கள்
தொடர வாழ்த்துக்கள்

Thava said...

விமர்சனம் அருமை நண்பரே..சில நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல திரில்லர் படத்தை பார்க்க நினைத்தேன்..இந்த படத்தை முயற்சி பண்ணுகிறேன்.மிக்க நன்றி.

Post a Comment