Thursday, 1 March 2012

RED SUN (1971) - விறுவிறுப்பான கௌபாய் சினிமா


1870ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியைச் சந்திக்க ஒரு ஜப்பானியத் தூதரும் அவருக்குப் பாதுகாப்பாக நான்கு சாமுராய் வீரர்களும் ஒரு ரயிலில் வருகிறார்கள். அதே ரயிலில் பொற்காசு மூட்டைகளும் பலத்த பாதுகாப்போடு இணைக்கப்பட்டுள்ளன. அந்த ரயிலை லிங்க் (சார்லஸ் பிரான்சன்) மற்றும் காட்ச் (ஆலன் டெலான்) என்ற இரண்டு கொள்ளையர்கள் தங்கள் சகாக்களுடன் கொள்ளையடிக்கின்றனர். அப்பொழுது ஜனாதிபதிக்குப் பரிசளிப்பதற்காக ஜப்பானியத் தூதர் கொண்டு வந்திருக்கும் விலையுயர்ந்த தங்க வாளையும் பறித்துக் கொண்டு சாமுராய் வீரன் ஒருவனையும் கொல்கின்றனர். கொள்ளை முடிந்து கிளம்பும் காட்ச், லிங்கிற்குப் பங்கு தரக் கூடாது என்ற எண்ணத்தில் அவனைக் கொல்ல முயல்கிறான். லிங்க் தப்பித்து விழும் பொழுது மயக்கமடைகிறான். அவன் இறந்து விட்டதாக நினைக்கும் காட்ச் கொள்ளை முடிந்து தனது இடத்திற்க்குப் புறப்படுகிறான்.




மயக்கமடைந்த லிங்கை ஜப்பான் தூதர் காப்பாற்றுகிறார். அவர் லிங்க்கிடம் அந்தத் தங்க வாள் தனக்கு ஏழு நாட்களுக்குள் வேண்டும் என்கிறார். அவன் தனக்குக் காட்ச் கொள்ளையடித்த காசுகள் மட்டும் போதும் என்றும் தங்க வாளை மீட்டுத் தருவதாகவும் அரைமனதாக ஒப்புக் கொள்கிறான். அவனுக்குத் துணையாக ஒரு சாமுராயை (டொஷிரோ மிஃப்யுன்) அனுப்பி வைக்கிறார் தூதர். சொன்னபடி ஏழு நாட்களுக்குள் தங்க வாளை மீட்காவிடில் சாமுராய் லிங்கைக் கொன்று விடுவான் என எச்சரித்து அனுப்புகிறார். போகும் வழியிலெல்லாம் லிங்க் எப்படியாவது சாமுராயிடமிருந்து தப்பித்து விடலாம் என முயற்சிக்கிறான். ஆனால் அவன் திட்டம் பலிக்கவில்லை.


பிறகு மனம் மாறி வாளை மீட்டெடுக்க நினைக்கிறான். லிங்க், சாமுராயிடம் நாம் இரண்டு பேர் மட்டும் போய் காட்ச்சிடம் சண்டையிட்டு வெல்ல முடியாது என்கிறான். காட்ச்சின் காதலி கிறிஸ்டினாவைக் (அர்சுலா) கடத்தி பிணையக் கைதியாக வைத்துக் கொண்டால் சுலபமாக அவனிடமிருந்து வாளைக் கைப்பற்றிவிடலாம் என திட்டம் போடுகிறான். அதன்படி கிறிஸ்டினாவைக் கடத்தி ஒரு குதிரையில் ஏற்றி மூவரும் காட்ச் இருக்குமிடத்திற்க்குச் செல்கின்றனர். காதலி கடத்தப்பட்ட விசயம் காட்ச்சிற்குத் தெரிய வருகிறது. கடுப்பான அவன் லிங்க்கையும் சாமுராயையும் கொல்வதற்காகப் புறப்படுகிறான். ஒரு பாழடைந்த கோட்டையில் இரு தரப்பும் மோதுகிறது. அப்பொழுது எதிர்பாராதவிதமாக ஒரு பழங்குடி கொள்ளைக் கும்பல் அவர்களைச் சுற்றி வளைக்கிறது. தங்க வாள் மீட்கப்பட்டதா? காட்ச் கொல்லப்பட்டானா? என்பதற்கு விடை... மீதி உங்கள் கணினித் திரையில்...!

படத்துளிகள்


இப்படத்தின் இயக்குனர் 1960களில் வெளிவந்த முதல் ஜேம்ஸ்பாண்ட் படமான டாக்டர். நோவை இயக்கிப் புகழ் பெற்ற டெரன்ஸ் யங்.  சும்மா சொல்லவில்லை.  உண்மையிலேயே யங் பெரிய கை!

வில்லனைத் தேடிச் செல்லும் வழியெங்கும் உள்ள பிரமாண்ட பள்ளத்தாக்குகளும் பனி மலைகளும் நாம் பிரமிக்கத்தக்க வகையில் ஒளிப்பதிவை செய்திருக்கிறார் ஹென்றி ஆல்கன்.

கௌபாய் படங்களுக்கே உரித்தான பின்னணி இசை அருமை. (இசை : மௌரிஷ் ஜேர்)

இப்படத்தின் கலை இயக்குனர் ஹென்றி அலர்கனைப் பற்றிக் கண்டிப்பாகச் சொல்ல வேண்டும். 1870களின் ரயில், தங்கும் விடுதி, வில்லன் பதுங்கியிருக்கும் மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட சிறு கோட்டை போன்றவற்றில் கடும் உழைப்பைச் செலுத்தியிருக்கார்.

சார்லஸ் பிரான்சன் தன் அநாசயமான நடிப்பால் நம் மனதில் இடம் பிடிக்கிறார். சாமுராயாக வரும் டொஷிரொ மிஃப்யுனும் திறம்பட தன் பங்களிப்பை செய்திருக்கிறார்.

க்ளைமாக்ஸ்
வழக்கம் போன்ற லாஜிக்கில்லாத துப்பாக்கிச் சண்டையைத் தவிர்த்து விட்டு... வெளிப்புறப்படப்பிடிப்பிற்காகவும் கௌபாய் சாகசங்களுக்காகவும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்.

5 comments:

Kumaran said...

கௌபாய் படங்கள் என்றாலே மிக பெரிய இஷ்டம் எனக்கு..இப்போதுதான் ஏதாவது வெஸ்டெர்ன் படம் டவுன்லோட் போட வேண்டும் என்றிருந்தேன்.அதற்குள் ஒரு அருமையான விமர்சனம் தங்களது பாணியில் சூப்பர்.நன்றி நண்பரே..தொடருங்கள்.நல்ல படங்களை அறிமுகப்படுத்துங்கள்.

சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..

தமிழ்வாசி பிரகாஷ் said...

மதுரை அழகுக்கு சொந்த ஊரு மதுரையா?

மதுரை அழகு said...

தமிழ்வாசி பிரகாஷ்
//மதுரை அழகுக்கு சொந்த ஊரு மதுரையா?//

சொந்த ஊர் மதுரை தான்! தற்பொழுது வசிப்பது திருப்பூரில்...

ராஜ் said...

படம் ரொம்ப சுவாரிசியமா இருக்கும் போல. கௌபாய் & சமுராய் காம்பிநேஷன் ரொம்ப வித்தியாசமாக இருக்கும். நான் படத்தை இப்பதாங்க கேள்வி படுறேன்.
டோர்ரென்ட் கிடைச்சா கண்டிப்பா பார்க்குறேன்.

கோவை நேரம் said...

என்னது....திருப்பூரா..? நம்ம ஊரு பக்கம் ....

Post a Comment