நேற்று கோவைக்கு ஒரு வேலையாகச் சென்று விட்டு திருப்பூருக்குப் புறப்படும் பொழுது பேருந்தில் அவ்வளவாகக் கூட்டமில்லை. ஆனால் கோவை நகருக்குள் அவினாசி சாலையில் ஒவ்வொரு நிறுத்தமாக நிற்க நிற்கக் கூட்டம் எகிற ஆரம்பித்தது. நான் மூன்று சீட்டில் ஜன்னலோரத்திலிருந்து மூன்றாவது ஆளாக இடையில் உள்ள கம்பியோடு கம்பியாக ஒட்டி உட்கார்ந்து வந்தேன். ஏனெனில் என் வலது பக்கத்தில் உட்கார்ந்திருந்த இருவருமே சற்று குண்டு. நான் ஒல்லியாக இருந்ததால்தான் அங்கே உட்கார முடிந்தது. ஒவ்வொரு நிறுத்ததிலும் ஏறிய நபர்கள் இருக்கைகள் நிறைந்து விட்டால் பேருந்தின் இடையிலுள்ள கம்பியில் சாய்ந்து நிற்கவாவது இடம் கிடைக்குமா என எதிர்பார்ப்பது வழக்கம். அப்படி ஒருவர் நான் கையைச் சுற்றியுள்ள கம்பியில் சாய வந்தார். உடனே நான், அவரிடம் 'இடப் பற்றாக்குறையால் கம்பி மேல் கையை வைத்து உட்கார்ந்து வருகிறேன்... சற்று தள்ளி நில்லுங்கள்!' என்றேன். அவர் கடுப்பாகி, 'கூட்டத்தில் அப்படி தான் நிற்க முடியும்...! வேணும்னா கையை எடுத்துட்டு உட்காரு(ங்கள்)' என்றார். அடைப்புக்குறிக்குள் உள்ள 'ங்கள்' என் மனத் திருப்திக்காக நானாக சேர்த்துக் கொண்டது. அவரைச் சொல்லிக் குற்றமில்லை!... பாவம் அவரே வேலை முடிந்து களைப்பாக வீட்டிற்க்குப் போய்க் கொண்டிருக்கிறார். எனது கோபமெல்லாம் நமது அரசு நிர்வாக அவலட்சணத்தின் மீதும் நமது அதீதமான மக்கள் தொகையின் மீதும் தான். சென்ற வருடம் டிசம்பர் மாதம் என் நண்பர் ஒருவர் சிங்கப்பூர் சென்று வந்தார். அவரிடம் சிங்கப்பூரைப் பற்றிப் பல்வேறு விசயங்களைப் பேசும் பொழுது பேருந்துப் பயணத்தைப் பற்றிக் கேட்டேன். அவர் சொன்னார்... காலையில் மக்கள் வேலைக்குச் செல்லும் நேரங்களில் மட்டும் சிறிது நெரிசலாக இருக்கும்... மற்ற நேரங்களில் மேலே உள்ள படத்தில் இருப்பது போல் இருக்கும் என்றார் (பட உபயம் : கூகுள் இமேஜஸ்). நெரிசல் என்பது நம்மூரைப் போல் நானூறு பேர் அல்ல... நான்கைந்து பேர் நின்று கொண்டு வருவார்கள். அவ்வளவுதான்!
இது எப்படி சிங்கப்பூரில் மட்டும் சாத்தியமாகிறது?. நமது பாரதப் 'புண்ணிய' பூமி ஏன் இப்படி இருக்கிறது என இணையத்தில் தேடினால் சில விவரங்கள் கிடைத்தன. இனிவரும் வாசகங்களை 'ரமணா' விஜயகாந்த் பாணியில் படிக்கவும்! சிங்கப்பூரின் மொத்தப் பரப்பளவு வெறும் 710 ச.கி.மீ தான். மக்கள் தொகை 2011ம் ஆண்டு நிலவரப்படி தோராயமாக 51,82,000. அதாவது ஒரு ச.கி.மீட்டருக்கு 7300 பேர். இவ்வளவு நெருக்கடி நிறைந்த ஊரை அந்நாட்டு அரசாங்கம் எவ்வளவு அழகாக நிர்வகிக்கிறது. நம் நாட்டில் ஒரு ச.கி.மீட்டருக்கு 364 பேர் மட்டுமே வசிக்கின்றனர். இதைத் திறமையாக நிர்வாகம் செய்ய முடியமா? முடியாதா...? பூமியில் நாம் அன்றாடம் அவதிப்பட்டுக் கொண்டிருக்க, கோடிக்கணக்கில் நமது வரிப்பணத்தைச் செலவு செய்து சந்திரனுக்குச் செயற்கைக் கோள் அனுப்பியதைப் பெருமையாகப் பேசும் வரை... நாம் பேருந்தில் ஒருவர் மீது ஒருவர் உரசி நின்றபடியே பயணிப்போம்!. வேறு என்ன செய்ய?
7 comments:
சரிதான்....நாம அப்படியே பழகி விட்டு இருக்கிறோம்..
ஊழல் இருக்கும் வரை உரிமை குறைவுதான் நண்பரே..
பூமியில் நாம் அன்றாடம் அவதிப்பட்டுக் கொண்டிருக்க, கோடிக்கணக்கில் நமது வரிப்பணத்தைச் செலவு செய்து சந்திரனுக்குச் செயற்கைக் கோள் அனுப்பியதைப் பெருமையாகப் பேசும் வரை... நாம் பேருந்தில் ஒருவர் மீது ஒருவர் உரசி நின்றபடியே பயணிப்போம்!. வேறு என்ன செய்ய?
VALID. WISHES
அழகு சார் பக்கத்து மாநிலம் ஆந்திராவில் திருப்பதியில் பேருந்து நெரிசல் என்பது கிடையாது, காரணம் 55 இருக்கைக்கு உறிய ஆட்கள் மட்டுமே பேருந்தில் ஏற்றுவார்கள்...அதே முறையையை இங்கும் பின்பற்றினால் சரியாக இருக்கும்.....
சிங்கப்பூரில் நான் ஐந்து ஆண்டுகள் இருந்திருக்கிறேன். உங்கள் நண்பர் சொன்னது போல எல்லா பேருந்துகளும் காலியாக போகும் ஓரிரு சமயங்கள் தவிர. மக்கள் வாழும் எல்லா இடங்களுக்கும் பேருந்து உண்டு. இரு சக்கர வாகனங்களுக்கு நிறைய வரி இருப்பதால் பேருந்துகளையே மக்கள் விரும்புவர்.
ஆமா, தமிழ்நாடு முன்னேறவேண்டிய விடயங்கள் நிறைய இருக்கு.
மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.சட்டங்கள் சரியாக இருந்தாலொழிய இவற்றிற்கு எல்லாம் தீர்வு காண வழியில்லை.தனி மனித ஒழுங்கு என்பது இல்லாததால் சரியான சட்ட,திட்டங்களே இதற்குத் தீர்வாய் அமையும்.
Post a Comment