1952ல் நடந்த அமெரிக்க - கொரிய யுத்தத்தின் போது சிக்கிய அமெரிக்க வீரர்கள் சிலரை சீனாவின் மஞ்சுரியா என்ற இடத்திற்குக் கொண்டு சென்று ஹிப்னாடிசம் செய்து மீண்டும் அமெரிக்காவிற்கு அனுப்பி விடுகின்றனர். அவர்களில் ஒருவன் தான் ரேமண்ட் ஷா (லாரன்ஸ் ஹார்வி). அவன் சீட்டுக்கட்டில் உள்ள சிவப்பு ராணி (டயமண்ட் மட்டும்) சீட்டைப் பார்த்தால் ஹிப்னாடிச நிலைக்குச் சென்று விடுவான். அதன் பிறகு என்ன கட்டளையிட்டாலும் செய்து முடிப்பான். கொடுக்கப்பட்ட வேலை முடிந்தவுடன் சுய நினைவிற்கு வந்தாலும் அவன் மயக்க நிலையில் செய்த வேலைகள் ஞாபகத்திற்கு வராது. அவனை அமெரிக்காவில் இயக்கும் பொறுப்பு மிசஸ். செலின் (ஏஞ்சலா லேன்ஸ்பரி) என்ற கம்யூனிஸ்ட் பெண்ணிடம் கொடுக்கப்படுகிறது. அவள் வேறு யாருமல்ல ஷாவின் அம்மா தான். அவள் தன் இரண்டாவது கணவனான செலினை ஜனாதிபதியாக்கி விட்டால் அமெரிக்காவை கம்யூனிஸ்ட் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து விடலாம் என திட்டமிடுகிறாள். அதற்குத் தன் மகனையே சதி வேலைகளில் ஈடுபடுத்துகிறாள்.
ஒரு நாள் கம்யூனிசத்தை எதிர்க்கும் பத்திரிக்கை அதிபரை ஷா ஹிப்னாடிச நிலையில் கொன்று விடுகிறான். இதனைத் துப்பறிய வரும் மார்கோ (ஃப்ராங்க் சினாட் ரா) என்ற ராணுவ அதிகாரிக்கு எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. மார்கோ, ஷாவின் நண்பரும் கூட. இதற்கிடையில் ஷாவின் பழைய காதலி ஜோர்டான் அவனை ஒரு பார்ட்டியில் சந்திக்கிறாள். அவள் அப்போது எதார்த்தமாக அணிந்துள்ள சிவப்பு டயமண்ட் ராணி படம் போட்ட ஆடையைப் பார்த்ததும் ஷா தன்னிலை மறந்து அவளைத் திருமணம் செய்து கொள்கிறான். அவனது தாய்க்கு இதில் விருப்பமில்லை. அவள் ஷாவை ஹிப்னாடிச நிலைக்குத் தூண்டி அவன் மனைவி ஜோர்டானையும் அவள் தந்தையையும் கொலை செய்ய உத்தரவிடுகிறாள். ஷா அவர்களிருவரையும் கொலை செய்துவிட்டு ஒரு ஹோட்டலில் தங்குகிறான். இந்தக் கொலையை ஷாதான் செய்திருப்பான் என்ற முடிவிற்கு வரும் ராணுவ அதிகாரி மார்கோ அவனைச் சந்திக்க அந்த ஹோட்டலுக்குச் செல்கிறார். அப்பொழுதுதான் மார்கோவிற்கு, ஷா தன்னிலை மறந்த நிலையில் தான் அந்தக் கொலைகளையெல்லாம் செய்தான் என்பதும் அவனை ஆட்டுவிப்பது அவன் தாய் மிசஸ். செலின் தான் என்பதும் புரிகிறது. அவர் அவனுக்குக் கவுன்சிலிங்க் கொடுத்து ஹிப்னாடிச நிலையிலிருந்து மீட்கிறார்.
வீட்டிற்கு வரும் ஷாவிடம், அவன் தாய் மறுநாள் நடக்கப் போகும் ஜனாதிபதி அறிமுகக் கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளரைக் கொல்லுமாறு அவனை மெஸ்மரைஸ் செய்கிறாள். மறுநாள் துப்பாக்கியுடன் விழா நடக்கும் அரங்கத்திற்கு முன்னதாகவே சென்று ஓர் அறையில் ஒளிந்து கொள்கிறான் ஷா. உளவுத் துறை மூலம் யாரோ ஒருவன் ஜனாதிபதி வேட்பாளரை சுடப் போகிறான் என்ற தகவ்ல் மார்கோவிற்குக் கிடைக்கிறது. அவர் உடனே விழா அரங்கிற்குப் புறப்படுகிறார். கடைசியில் காத்திருக்கிறது செம ட்விஸ்ட்! அது உங்கள் பார்வைக்கு...
படத்துளிகள்
கறுப்பு வெள்ளை படம் தான் என்றாலும் பல கேமரா கோணங்களில் கவனம் ஈர்க்கிறார்கள் இயக்குனர் ஜான் ஃப்ராங்க்ஹெய்மரும் ஒளிப்பதிவாளர் லியோனல் லிண்டனும். கடைசியில் வரும் ஆடிட்டோரிய ஷாட்டுகள் அருமை.
இப்படத்தின் திரைக்கதையை இதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜார்ஜ் ஆக்ஸ்லார்ட் எழுதியிருக்கிறார். திரைக்கதை முதல் முக்கால் மணி நேரம் மெதுவாக நகர்ந்து நம் பொறுமையைச் சோதிக்கிறது. மீதி ஒரு மணி நேரமும் செம பரபரப்பு.
படத்தில் ரேமண்ட் ஷாவாக நடித்த லாரன்ஸ் ஹார்விக்கு அடுத்து நம் மனதில் இடம் பிடிப்பவர் அவரின் அம்மாவாக நடித்த ஏஞ்சலா லேன்ஸ்பரிதான். ஏஞ்சலா இப்படத்திற்காக கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தில் பின்னணி இசைக்குப் பெரிதாக வேலையில்லை.
க்ளைமாக்ஸ்
எனக்கு உடன்பாடில்லாத கம்யூனிச எதிர்ப்புப் படமாக இருந்தாலும் வித்தியாசமான கதைக்களனுக்காக உங்கள் சினிமா பட்டியலில் சேர்க்க வேண்டிய படம்.
3 comments:
தங்களது விமர்சனங்களை தொடர்ந்து படித்து வருகிறேன் சகோ..அழகாகவும் கச்சிதமாகவும் வித்தியாசமான கோணத்திலும் உள்ளது..அந்த வரிசையில் இத்திரை விமர்சனம்..நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்திய படைப்பிது.டென்சில் வாஸிங்க்டன் நடித்த இதன் ரீமேக் படத்தை பார்த்திருக்கிறேன்..அதுவும் ரொம்பவும் அருமையான திரில்லர்..பழையதையும் விரைவில் பார்ப்பேன் என்ற நம்பிக்கையில் விடைப்பெறுகிறேன்..நன்றிகளோடு வாழ்த்துக்கள்.
Falling Down (1993) - ஹாலிவுட் "இந்தியன்" தாத்தா (திரைப்பார்வை)
அருமையான விமர்சனப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
இதே போல் இன்னொரு படம் கலரில் பார்த்த நியாபகம். நல்ல விமர்சனம்.
Post a Comment