Wednesday, 7 March 2012

FLY AWAY HOME (1996) - பரவச சினிமா


நியூசிலாந்தில் நடக்கும் ஒரு சாலை விபத்தில் சிறுமி ஏமியும் (அன்னா பகுய்ன்) அவள் தாயும் சிக்கிக் கொள்கிறார்கள். தாய் இறக்கிறாள். ஏமியை அவள் தந்தை தாமஸ் (ஜெஃப் டேனியல்ஸ்) தன் சொந்த நாடான கனடாவிற்கு அழைத்துச் செல்கிறார். அங்கு ஏமியின் தந்தையுடன் அவரது தோழி சூசனும் இருக்கிறாள். ஆரம்பத்தில் ஏமிக்கு அவர்களோடு இருக்கப் பிடிக்கவில்லை. அவள் தந்தை வீட்டுக்குப் பக்கத்திலேயே இருக்கும் தனது சொந்தப் பட்டறையில் வேலை செய்கிறார். பட்டறை என்றால்... க்ளைடர் விமானகள், பெரிய சிலைகள் செய்யும் இடம். அவர்கள் வசிப்பது ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு பண்ணை வீடு. பக்கத்திலேயே ஒரு குளமும் அதில் கனடா கூஸ் எனப்படும் காட்டு வாத்துகளும் இருக்கின்றன. அவை குளிர் காலத்தில் இனப்பெருக்கத்திற்காக கனடாவின் வடக்குப்பகுதியிலிருந்து தெற்குப்பகுதிக்கு ஒவ்வொரு வருடமும் வருகின்றன. ஒருநாள் அந்தக் குளம் இருக்குமிடத்தில் கட்டிட வேலைகளைத் தொடங்குவதற்காகப் புல்டோசருடன் வரும் ஆட்கள் மரங்களை வெட்டுகின்றனர். குளத்தில் விழும் மரங்களால் வாத்துகளின் வாழிடம் பாதிக்கப்படுகிறது. அவைகள் வேறு இடம் நோக்கிப் பறக்கின்றன.

புது வீட்டு சூழ்நிலையில் வெறுமையை உணரும் ஏமி அந்தக் குளத்துக்குப் பக்கத்தில் நடந்து வரும் பொழுது வெட்டப்பட்ட மரத்திற்குக் கீழிலிருந்து ஏதோ ஒலி கேட்டு குனிந்து பார்க்கிறாள். அங்கே வாத்து முட்டைகள் இருக்கின்றன. அவற்றிலிருந்துதான் அந்த ஒலி வருகிறது. அந்த முட்டைகளை எடுத்துவந்து ஒரு இடத்தில் பாதுகாப்பாக வைக்கிறாள். அவற்றிலிருந்து ஒரு சில நாட்களில் குஞ்சுகள் வெளிப்படுகின்றன. ஏமியின் தந்தைக்கு வாத்துகளை வளர்ப்பதில் விருப்பமில்லை. இருந்தாலும் மகளின் விருப்பத்திற்கேற்ப அவர் தன்னை மாற்றிக் கொள்கிறார். குஞ்சு வாத்துகளும் ஏமியோடு நன்றாகப் பழக ஆரம்பித்தன. ஏமியும் அவள் தந்தையோடும் வளர்ப்புத் தாயோடும் அந்நியோன்யமாகிறாள்.


சில மாதங்களிலேயே அந்த வாத்துகள் வளர்கின்றன. பிறகு ஒரு பறவை நிபுணரின் ஆலோசனைப்படி அவைகளுக்குப் பறக்கும் பயிற்சி அளிக்கிறார்கள் ஏமியும் அவள் குடும்பத்தாரும். அதற்காகவேப் பிரத்யேகமாகா வாத்து வடிவத்திலேயே ஒரு க்ளைடர் விமானத்தை செய்கிறார் தாமஸ். பயிற்சியின் போது ஆரம்பத்தில் தடுமாறும் வாத்துகள் பிறகு மெள்ளப் பறக்கின்றன. ஒரு நாள் பயிற்சியின் போது இகோர் எனப் பெயர் வைக்கப்பட்ட வாத்து க்ளைடர் விமானத்தில் அடிபட்டு காட்டுப் பகுதியில் விழுகிறது. அதைத் தேடி ஏமியும் அவள் குடும்பத்தாரும் சென்று கண்டுபிடிக்கின்றனர். அதே வேளையில் இங்கு வீட்டிலிருக்கும் வாத்துகளை உள்ளூர் காட்டு இலாகா அதிகாரி வந்து திருடிச் சென்று அவர் பகுதியிலுள்ள கூட்டில் அடைக்கிறார். மறுநாள் ஏமியின் தந்தை தன் சகாக்களுடன் சென்று அவற்றை மீட்கிறார். குளிர் காலம் முடிந்து கோடைகாலம் ஆரம்பிக்கப் போகும் நிலையில் வாத்துக்கள் இங்கிருந்தால் இறந்து விடும் என்பதால் அவைகளை மீண்டும் வடக்குப் பகுதிக்குப் பறந்தே அழைத்துச் செல்கின்றனர். போகும் வழியில் ஏமியின் தந்தை தாமசின் விமானம் விபத்துகுள்ளாகி சேதமடைகிறது. தாமஸ், ஏமியைத் தனியாக அவளுடைய விமானத்தில் புறப்படும்படியும் தான் சாலை வழியாக அங்கு வந்து சேர்வதாகவும் சொல்கிறார். அவள் வடக்குப் பகுதியை நோக்கி வாத்துகளை அழைத்துக் கொண்டு புறப்படுகிறாள். இதற்கிடையில் வாத்துக்கள் போய் இறங்கவிருக்கும் வடக்குப்பகுதியிலுள்ள சரணாலயத்தை சில ஆக்கிரமிப்பாளர்கள் பெரிய ஹவுசிங் திட்டத்திற்காக அழிக்கவிருப்பதாக புல்டோசருடன் சரணாலயத்தின் முகப்பில் தயார் நிலையில் இருக்கிறார்கள். ஏமி வாத்துகளுடன் அங்கு வரும் செய்தி மீடியாவில் பரவுகிறது. ஆக்கிரமிப்பாளர்களை எதிர்ப்பதற்காக அங்கே கூட்டம் குவிகிறது. ஏமி பாதுகாப்பாக வந்து சேர்ந்தாளா? அந்தப் பரவச க்ளைமாக்ஸ் உங்கள் பார்வைக்கு...!


படத்துளிகள்

ஏமியாக நடித்த அன்னாவும் அவள் தந்தை தாமசாக நடித்த ஜெஃப் டேனியல்சும் மிகச் சரியான தேர்வு. அது நடிப்புதானா? அவ்வளவு தத்ரூபம்.

இந்தப்படத்தின் லொகேசனுக்கே இயக்குனர் கரோல் பல்லார்டுக்கு ஒரு வணக்கம். குஞ்சு வாத்துகள் புல் தரையில் ஓடும் பொழுது அவைகளோடு பயணிக்கும் கேமரா... அட்டகாசம். அதே போல் வானத்தில் க்ளைடர் விமானத்தோடு பறக்கும் காட்சியில் கேமரா கோணங்கள் அருமை.

படத்தின் அடுத்த கதாநாயகன் ஒளிப்பதிவாளர் கேலப் டெஸ்சேனல் தான். தூக்கம் கெட்ட நிலையிலும் படம் பார்த்தால் கூட கண்களுக்கு அவ்வளவு குளிர்ச்சி! ஒளிப்பதிவிற்காக இந்தப் படம் 1997ல் ஆஸ்காருக்குப் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் விருது கிடைக்கவில்லை.

வாத்துகள் மெதுவாக வளர்ந்து முதன் முதலில் அவை பறக்கும் பொழுது பின்னணி இசை நம் மனதில் உற்சாகத்தைத் தூண்டுகிறது. (இசை : மார்க் இசாம்)

நிக்கோலஸ் ஸ்மித்தின் எடிட்டிங் வெகு கச்சிதம்.

க்ளைமாக்ஸ்
நம்மூரில் இந்தக் காதல், சென்டிமென்ட், ஒரே பாட்டில் பணக்காரனாவது, ஒல்லியாக இருப்பவன் பெரிய தாதாவாக மாறுவது மற்றும் நிஜத்தில் நடக்க வாய்ப்பே இல்லாத ஆக்சன் போன்ற குப்பைகள் இல்லாமல் இந்த மாதிரிப் படங்கள் எப்போது வருமோ? என்ற ஏக்கத்தை நம் மனதில் ஏற்படுத்துவதுதான் இப்படத்தின் வெற்றி.

2 comments:

Kumaran said...

கேள்விப்படாத படம்..விமர்சனம் படிக்கும் போழுதே அது உங்களுக்குள் தந்த தாக்கத்தை உணர முடிகிறது..ரொம்பவும் அழகான படமென்று நினைக்கிறேன்..உடனே வாட்ஸ் லிஸ்ட்டில் சேர்த்துவிடுகிறேன்..பல நல்ல படங்களை தொடர்ந்து சிறப்பாக அறிமுகம் செய்து வைக்கும் தங்களுக்கு எனது வாழ்த்துக்களோடு நன்றிகள்.

Falling Down (1993) - ஹாலிவுட் "இந்தியன்" தாத்தா (திரைப்பார்வை)

Unknown said...

இந்த படத்தை நான் ஒரு சேனலில் பார்த்திருக்கிறேன். பீல் குட் மூவி. நல்ல விமர்சனம்.

Post a Comment