ஓவியம் வரையாவிட்டாலும் அதன் மீது எனக்கு ஓர் ஈடுபாடு உண்டு. அதன் விளைவாக பிரபல ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவின் மேற்கண்ட புத்தகத்தை வாங்கினேன். ஓவியத்திற்குப் பின்னால் இத்தனை தகவல்களா என வியக்க வைக்கும் புத்தகம். இது ஏதோ ஓவியங்களைப் பற்றிய புத்தகம் மட்டுமல்ல... மருதுவின் பால்ய கால நினைவுகள், திரைப்படக்கலையின் நுணுக்கங்கள், அனிமேசன், காமிக்ஸ் உலகம், 'நடிகவேள்' எம்.ஆர். ராதா, எம்.ஜி.ஆர் மற்றும் விடுதலைப்புலிகளின் முக்கிய தளகர்த்தர்களில் ஒருவரான மறைந்த தமிழ்ச்செல்வன் ஆகியோரைப்பற்றிய சுவையான புதிய தகவல்களும் உள்ளடக்கியது.
மேலை நாட்டு ஓவியர்களிலிருந்து நம்மூர் ஓவியர்கள் வரை பலரை வெறும் எழுத்துகளால் அறிமுகம் செய்யாமல் அவர்களது தத்ரூபமான ஓவியங்களுடன் மிகச்சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். புத்தகத்தில் ஆங்காங்கே விரவிக் கிடக்கும் மருதுவின் பண்டைய அரசர்களைப் பற்றிய கோட்டோவியங்கள் கொள்ளை அழகு. அதிலும் எங்கும் காணக் கிடைக்காத வாளேந்திய நிலையிலுள்ள எம்.ஆர். ராதா மற்றும் எம்.ஜி.ஆர் ஓவியங்கள்... வாவ்!. இப்புத்தகத்தில் இவற்றைத்தவிர என்னைக் கவர்ந்தவை புலம் பெயர்ந்து அமெரிக்கா வரும் அகதிகளைப் பற்றி 1903ம் ஆண்டு வரையப்பட்ட ஜீ.டபிள்யு. பீட்டர்சின் ஓவியங்கள் மற்றும் பல பழைய சினிமாக்களில் பின்னணி ஓவியங்கள் வரைந்த ஓவிய மேதை கே. மாதவனின் படைப்புகள்.
மருது, தான் ஒரு தீவிர காமிக்ஸ் ரசிகன் என்கிறார். புத்தகத்தில் காமிஸ்களைப் பற்றியே அதிகம் எழுதியுள்ளார். மேலும் காமிக்ஸ் புத்தகங்களை வெளியிடுவதில் முன்னணி நாடு ஜப்பான் எனவும் அவர்கள் பள்ளிப் பாடப் புத்தகங்கள் முதல் பொறியியல் புத்தகங்கள் வரை பலவற்றை காமிக்ஸ் வடிவத்திலேயே வெளியிடுகின்றனர் என்கிறார். ஜப்பானியர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் நமது நாட்டிலோ காமிக்சைப் பற்றிப் பேசக்கூடிய இருவர் சந்திப்பதென்பது ரோமியோவும் ஜூலியட்டும் சந்தித்துக்கு கொள்வது போன்ற ஓர் அபூர்வமான நிகழ்வாய் இருக்கிறது என வருத்தத்தோடு கிண்டலடிக்கிறார்.
புத்தகத்தில் ஒரே ஒரு சின்னக் குறை என்னவென்றால்... சில ஓவியங்களையாவது பல்வண்ணத்தில் வெளியிட்டிருக்கலாம். இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். மற்றபடி இது ஓவிய ரசிகர்களுக்கு மட்டுமல்ல அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.
நூல் : கோடுகளும் வார்த்தைகளும்
ஆசிரியர் : ட்ராட்ஸ்கி மருது
வெளியீடு : சாளரம்
2/1758, சாரதி நகர், என்ஃபீல்டு அவென்யூ,
மடிப்பாக்கம்,
சென்னை - 600 091.
3 comments:
காமிக்ஸ் புத்தகங்களை வெளியிடுவதில் முன்னணி நாடு ஜப்பான் எனவும் அவர்கள் பள்ளிப் பாடப் புத்தகங்கள் முதல் பொறியியல் புத்தகங்கள் வரை பலவற்றை காமிக்ஸ் வடிவத்திலேயே வெளியிடுகின்றனர் என்கிறார். ஜப்பானியர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம்.
அருமையான பகிர்வுக்கு பாராட்டுக்கள்..
பல விதமான பதிவுகளை இட்டு கலக்கி வரும் நண்பரே முதலில் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
புத்தக விமர்சனம் அருமை நண்பரே..மொத்தத்தையும் விளக்காது சுருக்கமாக அழகாக தொகுத்து வழங்கியுள்ள தங்களுக்கு எனது நன்றிகள்.
Falling Down (1993) - ஹாலிவுட் "இந்தியன்" தாத்தா (திரைப்பார்வை)
ட்ராட்ஸ்கி மருதின் ஓவியங்களுக்கு நானும் ரசிகன். அவரது வாளோர் அமலை.. என்ற நூல் வண்ண புத்தகம். தமிழக அரசர்களைக் குறித்த நூல் என்று விகடனில் படித்தேன்.
பகிர்விற்கு நன்றி.
Post a Comment