Friday, 2 March 2012

திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார்


முன் குறிப்பு : பாரதியை அதீதமாக நேசிப்பவர்கள் தயவுசெய்து மேற்கொண்டு படிக்க வேண்டாம்.

வாலாசா வல்லவன் என்ற செ. சேகர் எழுதியுள்ள இந்தப் புத்தகத்தை வாங்கி மூன்றாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இருந்தாலும் திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் இந்நூலை உங்களுக்கு அறிமுகம் செய்வது பொருத்தமாக இருக்கும்.

பாரதி என்றவுடன் நமது மனதில் தோன்றும் பிம்பம்... முறுக்கிய மீசை, கூர்விழிப் பார்வை, தேஜசான முகம், தைரியமான குணம் மற்றும் தன் சொந்த சாதியையே சாடும் முற்போக்குக் கவிதைகள் ஆகியவை. இதற்குக் காரணம் நமது ஊடகங்களில் நீண்ட காலமாக வெளியான பாரதியின் ஓவியங்கள், அவரின் கவிதைகள் மற்றும் திரைப்படங்களில் பாரதியாக நடித்த எஸ்.வி. சுப்பையாவின் நடிப்பு போன்றவைதான். இந்தப் பிம்பங்களை ஒவ்வொன்றாக வலுவான ஆதாரங்களுடன் தகர்த்தெறிகிறது இந்நூல்.



முதல் அத்தியாயமான 'பாரதியின் உயிர்மூச்சு தமிழா? ஆரியமா?' என்ற கட்டுரையிலேயே பாரதி க்ளீன் போல்டாகிறார். அவரின் 'செந்தமிழ் நாடெனும் போதினிலே...' மற்றும் 'யாமறிந்த மொழிகளிலே...' போன்ற கவிதைகளை நான் உட்பட ரசிக்காதவர்களே கிடையாது. 1915ல் சுதேசமித்திரனில் 'தமிழ், தமிழ்நாடு' முதலியவற்றின் சிறப்பைக் குறித்து எழுதும் சிறந்த கவிதைக்கு மதுரைத் தமிழ்ச் சங்கம் சார்பில் பரிசளிக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இப்போட்டிக்காக மேற்கண்ட இரண்டு கவிதைகளையும் எழுதி அனுப்புகிறார் பாரதி. மற்றபடி அவரின் கவிதைகள், கட்டுரைகள், கதைகள் போன்றவை ஆரிய மொழி, ஆரிய நாகரிகம், ஆரியப் பண்பாடு போன்றவற்றை உயர்த்திப் பேசுவதாகவே உள்ளன என்ற உண்மையை ஏராளமான ஆதாரங்களுடன் நிறுவுகிறார் நூலாசிரியர்.

1908ல் பாரதி ஆசிரியராகப் பணிபுரிந்த இந்தியா ஏட்டில் வெளியிடப்பட்ட படைப்புகளுக்கு எதிராக சென்னை நகரப் போலீஸ் கமிஷனர் பிறப்பித்த கைது வாரண்ட்டிற்குப் பயந்து போய் தன் மனைவிடம் கூடக் கூறாமல், அன்று இரவே பாண்டிச்சேரிக்குச் சென்று விட்டார் 'அச்சமில்லை... அச்சமில்லை' எனப் பாடிய பாரதியார். இச்சம்பவத்தை 'இந்தியா' இதழின் உரிமையாளர் மண்டயம் சீனிவாசன் பதிவு செய்துள்ளார்.

அடுத்து பாரதி காந்தியைச் சந்தித்தார் என்று ஒரு சம்பவம் ஞானராஜசேகரனின் 'பாரதி' திரைப்படத்தில் கூட காட்டப்பட்டது. இதில் துளி கூட உண்மையில்லை... பாரதி காந்தியைச் சந்திக்கவேயில்லை எனத் தேதிவாரியாக தகுந்த ஆதாரங்களுடன் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாரதியின் பார்ப்பன இன உணர்வு அவரின் முக்கால்வாசி கவிதைகளிலும் கட்டுரைகளிலும் எப்படி விரவியுள்ளது என்பதைப் படிக்கும் போது நமக்கு அதிர்ச்சியாக உள்ளது. உதாரணத்திற்கு, "ஸ்வாமி விவேகானந்தர் சொல்லியபடி, எல்லோரையும் ஒரேயடியாக பிராமணர்களாக்கிவிட முடியுமென்பதற்கு நம்முடைய வேத சாஸ்திரங்களில் தக்க ஆதாரங்களிருக்கச் செய்து விட்டால் நல்லதென்பது என்னுடைய அபிப்ராயம். எந்த ஜாதியாகயிருந்தாலும் சரி, அவன் மாம்ச பக்ஷணத்தை நிறுத்தும்படி செய்து அவனுக்கு ஒரு பூணூல் போட்டுக் காயத்ரி மந்திரம் கற்பித்துக் கொடுத்து விட வேண்டும்" என்று ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார். (ஆதாரம் : பாரதியார் கட்டுரைகள், பக். 401)

இதுபோக பாரதி பெண் விடுதலை, பொதுவுடமை, திராவிட இயக்கம் மற்றும் மதங்கள் போன்றவை பற்றிய அவருடைய முரணான கருத்துக்கள் இந்நூலில் தனித்தனி அத்தியாயங்களாக விவரிக்கப்பட்டுள்ளன. இந்நூலுக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ அருமையானதொரு சிறப்புரை எழுதியுள்ளார். இந்நூலாசிரியர் வாலாசா வல்லவன் ஐநூறுக்கும் மேற்பட்ட நூல்களைப் படித்துதான் இதை தாம் எழுதியதாக முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். அது முற்றிலும் உண்மைதான் என்பதை இந்நூல் முழுவதையும் படிக்கும் பொழுது உணர முடிகிறது.

பாரதி உயிரோடிருக்கும் பொழுது கண்டு கொள்ளாத பார்ப்பனர்கள் அவர் இறந்த பிறகு அவரை 'மகாகவி' என இன்றும் போற்றிக் கொண்டு பரப்புரை செய்வது முரணாக இருக்கிறது. எது எப்படியோ பாரதியின் பிம்பத்தைத் தூள் தூளாக்கிய இந்நூலுக்கு இதுவரை எந்த மறுப்பும் வெளிவரவில்லை என்பதுதான் இதன் வெற்றி.

நூல் :             திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார்
ஆசிரியர் :   வாலாசா வல்லவன்
விலை :       ரூ.40/-
வெளியீடு : தமிழ்க் குடியரசு பதிப்பகம்,
                        14/12 மியான் முதல் தெரு,
                         சேப்பாக்கம் ,
                        சென்னை - 600 005
                        அலைபேசி எண் : 9444321902

1 comment:

அம்பலத்தார் said...

வித்தியாசமான ஒரு புத்தகம் பற்றிய அறிமுகம் தந்ததற்கு நன்றி.

Post a Comment