Saturday, 18 February 2012

கூடங்குளம் - காலத்தின் கட்டாயம்



கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் இப்போதைக்கு முடிவதாக இல்லை. அணு உலைக் கழிவால் தற்போது இருக்கும் மக்கள் மட்டுமல்ல... வருங்கால சந்ததியினரும் சேர்த்துதான் பாதிப்புகுள்ளாவர்கள் என்பது தான் போராட்டக்குழு முன்வைக்கும் முக்கியக் குற்றச்சாட்டு. இதற்கு அவர்கள் காட்டும் உதாரணம் ரஷ்யாவில் நடந்த செர்னோபில் அணு உலை விபத்து. இது நடந்தது 1986ல். ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன்பு. 25 ஆண்டுகளாக எந்தவித அப்டேட்டும் இல்லாமல் பழைய தொழில்நுட்பத்தையே பயன்படுத்த ரஷ்யர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. அவர்கள் நாட்டில் திறந்த வெளியில் யாரும் மல ஜலம் கழிப்பதில்லை. ஆனால் நம் நாட்டில்...?. இந்த சிறிய பொது சுகாதாரத்தில் கூட தரமில்லாத நாம் அணு உலைப் பாதுகாப்பைப் பற்றிப் பேசுவது வேடிக்கையானது!

நமது வரிப்பணம் சுமார் 14000 கோடியைக் கொட்டி இறைத்திருக்கும் அணு உலையைச் சப்பைக் காரணங்களைச் சொல்லி மூடச் செய்வதில் எந்த நியாயமுமில்லை. முதலில் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் என ஆரம்பமான மின் வெட்டு தற்பொழுது பத்து மணி நேரமாக மாறியுள்ளது. சில இடங்களில் பதிமூன்று மணி நேரம். இதனால் சிறு தொழில்கள் முடங்கி... அதை நம்பியுள்ள லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் தொடர் மின் வெட்டைக் கண்டித்துக் கோவையில் திரண்ட கூட்டமே இதற்கு சாட்சி.

நமது மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்து கூடங்குளம் அணு உலை செயல்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுக்கத் தொடங்கிவிட்டன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டக் குழுவினர் ... 'உங்கள் பகுதியில் அணு உலை வந்தால்தான் தெரியும் அதன் பாதிப்பு என்னவென்று...' என்கிறார்கள். அணு உலை ஒன்றும் பெட்டிக்கடையல்ல... முச்சந்திக்கு முச்சந்தி வைப்பதற்கு. அதற்கென்று பிரத்யேகமான புவியியல் அமைப்பு வேண்டும். அது கூடங்குளத்தில் பொருந்தி வருகிறது.

தேநீரில் ஆரம்பித்து உயர்தர அறுசுவை உணவு விடுதி வரை நாம் கூறுகட்டி அடிக்கும் உணவுகளில் கலப்படமில்லாத வகைகளே கிடையாது. ஒரு சில மெஸ்கள் மட்டுமே விதிவிலக்கு. இப்படி அன்றாடம் நாம் புழங்கும் பல விசயங்களுக்கு ஒரு போராட்டமில்லை. என்னவென்றே தெரியாத அணு உலைக்கு எதிராக வேட்டியை மடித்துக் கொண்டு நிற்கிறோம். கூடங்குளம் அணு உலையை விரைவில் செயல்படுத்த வேண்டும் என போராட்டங்கள் தீவிரமாகும் நாள் வெகு தொலைவில்லை.

பின் குறிப்பு :- இந்தப் பதிவு கூட மின்வெட்டு நேரத்தில் யு.பி.எஸ். உதவியால் பதிவிடப்பட்டுள்ளது.

1 comment:

ராஜ் said...

// இந்தப் பதிவு கூட மின்வெட்டு நேரத்தில் யு.பி.எஸ். உதவியால் பதிவிடப்பட்டுள்ளது.//

உண்மை தான், நான் கூட முதலில் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தான் இருந்தேன்.. ஆனால் இபொழுது தமிழ் நாட்டில் நடக்கும் மின் வெட்டை பார்க்கும் போது எதிர்ப்பு என்னத்தை மற்ற வேண்டியது உள்ளது..

Post a Comment