Wednesday, 12 October 2011

THE DAY OF THE JACKAL (1973) - அரசியல் த்ரில்லர்


1960களில் ஃபிரான்ஸ் நாட்டிடம் அடிமைப்பட்டுக்கிடந்த அல்ஜீரியாவிற்க்கு விடுதலையளிக்கிறார் ஃபிரஞ்சு ஜனாதிபதி டி காலே. இதனால் கோபமுற்ற ஃபிரஞ்சு ராணுவ உயரதிகாரிகளில் ஒரு குழுவினர் ஒன்று சேர்ந்து ஓஏஸ் எனப்படும் தீவிரவாதக்குழுவைத் தொடங்குகிறார்கள். இவர்களின் ஒரே நோக்கம் ஜனாதிபதி டி காலே-வைக் கொல்வது தான். 1962ம் ஆண்டு ஒரு நாள் ஜனாதிபதியைச் சுட்டுக் கொல்லும் முயற்சியில் தோல்வியடைகிறார்கள். இந்தக் கொலை முயற்சி நடந்து ஆறு மாதங்களுக்குப்பிறகு அவர்களின் தலைவன் பாஸ்டியன் தியரி ராணுவத்தினரால் கொல்லப்படுகிறான். இத்துடன் ஓஏஸ்-ன் கதை முடிந்து விட்டதாக ஃபிரஞ்சு அரசாங்கம் முடிவிற்க்கு வருகிறது. ஆனால் அவர்கள் தங்கள் புதுத் தலைமையுடன் ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் இருந்து செயல்படுகிறார்கள்.

இனி பழைய ஃபிரஞ்சு ஆட்களை வைத்து ஜனாதிபதியைக் கொல்வது முடியாத காரியம்... எனவே கூலிக்காகக் கொலை செய்யும் வெளி நாட்டவன் ஒருவனைத் தேர்வு செய்கிறார்கள். அவன் லண்டனிலிருந்து வியன்னா சென்று ஓஏஸ் தலைவனைச் சந்த்தித்து ஜனாதிபதியைக் கொல்ல ஒப்புக் கொள்கிறான். அவனுக்கு குள்ளநரி எனப்பொருள்படும் "ஜேக்கல்" என்ற சங்கேத வார்த்தையைப் பெயராக வைக்கிறார்கள். ஜேக்கல் பலவிதமான பாஸ்போர்ட்களைத் தயார் செய்கிறான். அத்துடன் ஃபிரஞ்சு நாட்டுக் குடிமகனுக்குள்ள அனைத்துப் போலி ஆவணங்களையும் தயாரித்து ஃபிரான்சுக்குள் நுழைகிறான்.

இத்ற்கிடையில் ஃபிரஞ்சு ராணுவத்தினர் ஓஏஸ்-க்கு உதவி செய்யும் வோலன்ஸ்கி என்ற முக்கியமான நபரைக் கைது செய்கிறார்கள். அவனைச் சித்திரவதைக்குள்ளாக்கி ஓஏஸ்-ன் அடுத்த திட்டத்தை அறிய முயல்கிறார்கள். வோலன்ஸ்கியோ "ஜேக்கல்" என்ற வார்த்தையைத் தவிர வேறு எதையும் சொல்ல மறுக்கிறான். அரசாங்கம், கிலாட் லேபல் என்ற டிடெக்டிவிடம் ஜேக்கலைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை ஒப்படைக்கிறது. லேபலும் அவருக்குத் துணையாக ஓர் இளம் காவல் அதிகாரியும் இணைந்து புலன் விசாரணையில் இறங்குகிறார்கள். இத்ற்கிடையில் போலிஸ் கமிஷனர் ஒருவரை ஓஏஸ் அமைப்பைச் சேர்ந்த பெண் ஒருத்தித் தன் வலையில் வீழ்த்துகிறாள். அவள் மூலம் போலிசின் ஒவ்வொரு அசைவும் ஜேக்கலுக்குத் தெரிய வருகிறது. அதனால் டிடெக்டிவ் லேபல், ஜேக்கலை நெருங்கும் பொழுதெல்லாம் அவன் நூலிழையில் தப்பி விடுகிறான். இத்ற்குக் காரணம் அந்த போலிஸ் கமிஷனர்தான் என லேபல் கண்டு பிடிக்கிறார். இதனால் மனமுடைந்த கமிஷனர் தற்கொலை செய்கிறார்.

ஜேக்கல், வரப்போகும் ஃபிரஞ்சு சுதந்திர தின விழா அன்று ஜனாதிபதியைக் கொல்லத் திட்டம் தீட்டுகிறான். தீவிர விசாரணைக்குப் பிறகு... லேபல், ஒரு மாடியிலிருந்து சுட முயற்சிக்கும் ஜேக்கலைக் கண்டுபிடித்துக் கொல்வதோடு படம் நிறைவடைகிறது.

படத்துளிகள்...

படத்தின் பிரதானப் பாத்திரங்களான... ஜேக்கலாக எட்வர்ட் ஃபாக்சும் டிடெக்டிவ் லேபலாக மைக்கேல் லௌடேலும் தூள் கிளப்பியிருப்பார்கள். அதிலும் பார்ப்பதற்க்குக் கல்லூரி இரண்டாமாண்டு படிக்கும் மாணவன் போலிருக்கும் எட்வர்ட் ஃபாக்சின் நடிப்பு அசத்தல்.


இறுதிக் காட்சியில்... பலத்த போலிஸ் பாதுகாப்பையும் மீறி எப்படி எட்வர்ட் ஃபாக்ஸ் ஜனாதிபதியைக் கொல்லப் போகிறான் என நாம் பதற்றத்தில் இருக்கும் பொழுது... எட்வர்ட் ஃபாக்சின் அந்த கெட்டப்... செம ஐடியா!.

ஜனாதிபதியைக் கொல்வதற்க்காகப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும் துப்பாக்கி ரசனையின் உச்சகட்டம்.

படத்தில் எட்வர்ட் ஃபாக்ஸ் அறிமுகமாகும் காட்சியிலிருந்து தொடங்கும் விறுவிறுப்பு... இறுதி வரை சுருதி குறையாமல் இருக்குமாறுத் திரைக்கதையை அமைத்திருப்பார் கென்னத் ராஸ்.

தன்னைப் பற்றி லேசாக சந்தேகம் கொள்பவர்களைக் கூட இரக்கமில்லாமல் எட்வர்ட் ஃபாக்ஸ் கொல்லும்பொழுது பின்னணி இசையே இல்லாமல் மௌனமாகக் காட்டுவது திகிலை அதிகப்படுத்தும். அதேநேரம் ஜனாதிபதி தன் மாளிகையிலிருந்து புறப்படும் ஆரம்பக் காட்சியாகட்டும்... இறுதியில் நடைபெறும் ஃபிரஞ்சு சுதந்திர விழாவாகட்டும்... ஜார்ஜெஸ் டெலிரின் பின்னணி இசையே பிரதானம்.

பிரமாண்ட பாரிஸ் நகரத்து வீதிகளிலும், டாப் ஆங்கிள் ஷாட்களிலும்... பகல் மற்றும் இரவு நேரக் காட்சிகளிலும் கண்களை உறுத்தாத ஜீன் டூர்னியரின் ஒளிப்பதிவு கச்சிதம்.

நாம் சற்றும் யூகிக்க முடியாத சின்னச் சின்ன டுவிஸ்டுகளுடன்... ஒரு அருமையான அரசியல் த்ரில்லரைப் படைத்திருக்கும் இயக்குனர் ஃபிரட் சின்மேனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

என்ன...! அந்த சுதந்திர தின காட்சி மட்டும் சற்று இழு....வை.

க்ளைமாக்ஸ்

1973ல் வெளிவந்த இந்தப்படம் திறமையானதொரு நல்ல திரைப்படக்குழுவால் இன்று ரீமேக் செய்யாப்பட்டால் கூட... வசூலில் கல்லா கட்டும் என்பது மட்டும் உறுதி.  எனவே டோன்ட் மிஸ் இட்...!

2 comments:

சக்தி கல்வி மையம் said...

டோன்ட் மிஸ் இட்...! / ஓகே..

பால கணேஷ் said...

எப்போதோ பார்த்த நினைவு. இப்போது நீங்கள் எழுதியதைப் பார்த்ததும் மீண்டும் படிக்க விழைவு. சொல்லியிருப்பது நன்று.

Post a Comment