Monday, 19 September 2011

பணம் அண்டர்கிரவுண்ட் வரை பாயும்


1952ல் வெளிவந்த 'பராசக்தி' படத்தில் வரும் "தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம் காசு முன் செல்லாதடி..." என்று தொடங்கும் பாடலிலுள்ள ஒவ்வொரு வரிகளும் இப்பொழுதும் எவ்வளவு உயிரோட்டத்தோடு இருகின்றது என்பதை நினைத்தால் வியப்பாக உள்ளது. எடுத்துக்காட்டாக சில வரிகள் மட்டும்...

நல்லவரானாலும் 'இல்லாதவரை' நாடு மதிக்காது...
(நிகழ்காலம் :- உறவினர் நிகழ்ச்சிகளில் அளிக்கப்படும் வரவேற்பு வித்தியாசங்கள்)

கல்வி இல்லாத மூடரை கற்றோர் கொண்டாடுதல் வெள்ளிப்பணம் அடியே...
(நிகழ்காலம் :- ஒரு மயி.....க்கும் லாயக்கில்லாத பணம் படைத்த கல்வித்தந்தைகள் விழாக்களில் புகழப்படுதல்)

உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே...
காசுக்கு உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே...
(நிகழ்காலம் :- பணம் கைக்கு வரும் வரை பொறுமை காத்துப் பின் அது வந்த பிறகு தனது வஞ்சகத்தை வெளிப்படுத்தும் பலர்)

சில முட்டாப் பயல எல்லாம் தாண்டவக்கோனே...
காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே...
(நிகழ்காலம் :- இது பல நிறுவனங்களில் இன்று மட்டுமல்ல... என்றும் காணலாம்)

கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே...
பிணத்தைக்கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே...
பணப் பெட்டி மேலே கண் வையடா தாண்டவக்கோனே...
(நிகழ்காலம் :- சொத்துக்குரியவர் இறந்து விட்டால் அவரை அடக்கம் செய்வதற்கு முன்பே அவரது வாரிசுகள் போடும் கேவலமான சண்டைகள்)

இதைவிட உச்சகட்டமாகப் பெற்றோரே தன் மகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது மற்றும் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தைகள் பிச்சை எடுப்பதற்காகக் கடத்தப்படுவது போன்ற நிகழ்வுகளைப் பார்க்கும் பொழுது பணத்தின் வீரியம் நம் முகத்தில் அறையும்.

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்... "வாழ்க்கைக்குப் பணம் முக்கியமல்ல... அன்புதான் முக்கியம்", என்று கோடி கோடியாய்த் தங்க்கக்கட்டிகளையும் பணத்தையும் குவித்து வைத்துக் கொண்டு குஷன் சிம்மாசனத்தில் அமர்ந்து போஸ் கொடுக்கும் போலிச் சாமியார்களின் வெற்று உபதேசங்களை நம்பாதீர்...!

அக்கால 'பராசக்தி' முதல் இன்றைய 'வானம்' வரை சொல்லும் செய்தி இதுதான்... "பணம்... பணம்... பணம்... அது இல்லையினா பொணம்..."

1 comment:

Anonymous said...

VERI NICE

Post a Comment