Thursday, 19 April 2018

எழுத்தே வாழ்க்கை



எழுத்தை மட்டுமே நம்பி ஒருவர் தமிழ்நாட்டில் வாழ முடியும் என்பதற்கு நம்முன் உள்ள மிகச் சில எழுத்தாளர்களில் எஸ். ராமகிருஷ்ணனும் ஒருவர்.  அவர் பல்வேறு காலகட்டஙகளில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து எழுத்தே வாழ்க்கை என்ற இந்நூல் வெளிவந்துள்ளது.  இதில் அவரது எழுத்து மற்றும் பதிப்பு அனுபவங்களை சிறிதளவும், பயண அனுபவங்களை அதிகளவிலும் தொகுக்கப்பட்டுள்ளது.  பயணக் கட்டுரைகள் வறட்சியாக இல்லாமல் இலக்கியம், வரலாறு, சினிமா ஆகியவற்றைக் கலந்து சுவையாக எழுதியுள்ளார்.  இவை போக சினிமாத் துறை அனுபவங்கள்... அதுவும் இளையராஜா இசையில் ஒரு பாட்டு எழுதியுள்ள அனுபவம் அருமை!

சிறு பிராயத்திலேயே புத்தகங்களினூடே வளர்ந்ததால் தீராத புத்தக வெறியனாக... அவற்றுடனான தனது பயணங்களை  புத்தகங்களும் நானும் மற்றும் வாழ்வின் உன்னதங்கள் என்ற இரண்டு கட்டுரைகளில் சுவாரஸ்யமாக பதிவு செய்துள்ளார்.  என்னடா...! ஒரு மனுஷன் இந்த சமூகம் கற்பிக்கும் எவ்வித வேலைக்கும் செல்லாமல் புத்தகங்கள், எழுத்து, சினிமா என வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறாரே...!! என எஸ்.ராவின் வாழ்க்கை நம்மைப் பொறாமைப்படுத்தும்.  ஆனால், அதற்குப் பின்னால் உள்ள வலிகளை ஒரு சில கட்டுரைகளில் எழுதியிருக்கிறார்.  குறிப்பாக அவரது காதல் துணைவியார் அளித்த ஆதரவு... லட்சத்தில் ஒரு பெண்மணிதான் இது போன்று இருக்க முடியும்.  ஆசிர்வதிக்கப்பட்டவர் எஸ்.ரா!

இவரது அமெரிக்க மற்றும் ஜப்பான் பயணக் கட்டுரைகள் விசா எடுக்காமலேயே நம்மை நயாகராவின் சாரலில் நனைத்தும் தோக்கியோவின் பனியில் உறைய வைக்கவும் செய்கின்றன.  அதிலும் அமெரிக்காவில் மார்க் ட்வைனின் வீட்டிற்குச் சென்றது, ஜப்பானில் ஹிரோஷிமாவிற்கு சென்றது ஆகியவை அற்புதமாக எழுதப்பட்டுள்ளன.

இதில் நினைவுகள் கசியும் கிணறு, கூட்ஸ் ரயிலில் ஒரு பயணம் ஆகிய கட்டுரைகள் நம் பால்ய காலத்தைக் கண் முன் நிறுத்துகின்றன.  எனது பார்வையில் இத்தொகுப்பின் முத்தாய்ப்பான உலகிற்கு உப்பாக இருங்கள் என்ற கட்டுரைக்காகவே இந்நூலை வாங்கலாம்.  அருமையான வாசிப்பு அனுபவம்!  Proof Reading-ல் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்!!

பக்கங்கள் 176
விலை   - ரூ.175/-
வெளியீடு தேசாந்திரி பதிப்பகம்.

Sunday, 15 April 2018

தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள்

கடந்த 2014-2017 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவை விட்டு சுமார் 23,000 கோடீஸ்வரர்கள் வெளியேறி, வளர்ந்த நாடுகளில் குடியேறியுள்ளதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.  அவர்கள் விபரமில்லாமல் வெளியேறவில்லை!  இந்தியாவில் பெருகும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம், அதற்கு நேர்மாறாக அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை... இவை உண்டாக்கும் குற்றங்கள் என ஒருபுறமும் சீரழியும் சுற்றுச்சூழல், அதல பாதாளத்திற்குச் சென்ற நிலத்தடி நீர் என மறுபுறமும் இணைந்து, இந்தியா மனிதர்கள் நிம்மதியாக வாழ்வதற்குத் தகுதியில்லாத நாடாக அதிவேகமாக மாறி வருகிறது.  அதனால்தான் விபரமறிந்த பணக்காரர்கள் சத்தமில்லாமல் வெளியேறி வருகின்றனர்.  இந்நிலையில் இயற்கையைக் காப்பாற்றுவதில்தான் அனைத்தும் அடங்கியுள்ளது என்பதை உரக்க வலியுறுத்தி, தோழர்கள் சண்முகானந்தம் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் எழுதி வெளியிட்டிருக்கும் தமிழகத்தின் பறவைக் காப்பிடங்கள் என்ற நூல் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்நூல் பறவைக்காப்பிடங்கள் எங்கெங்கு உள்ளன... அங்குள்ள  முக்கியமானவைகள் எவை என்பதைப் பாடப்புத்தகங்கள் போல் சுருக்கமாகச் சொல்லாமல் அவற்றின் பெயருக்கான வேர்ச்சொற்கள் தொடங்கி, அங்கு எவ்வாறு செல்வது, வலசை வரும் முக்கியப் பறவைகள், அவையிடும் முட்டைகள், கூடுகளின் அமைப்பு, காப்பிடங்கள் எதிர்நோக்கியுள்ள சிக்கல்கள், அவற்றிற்கான தீர்வுகள் என  முழுமையான விபரங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளது.  இடையிடையே வரும் சங்க இலக்கியப் பாடல்களின் மேற்கோள்கள், ஆதித் தமிழர்களின் அறிவை மெச்சும் அதே வேளையில் நமது வாசிப்பு இன்பத்தை அதிகரிக்கின்றன என்பது மிகையல்ல!

பறவைகளின் பரிணாம வளர்ச்சி, உடற்கூறியல், பெயர் வகைப்பாட்டியல், நூலின் இடையே வரும் பெட்டிச் செய்திகள் போன்றவை வாசகர்களுக்கு சலிப்பூட்டும் வகையில் இல்லாமல்  எளிமையாகவும் அதே நேரத்தில் சுவையாகவும் எழுதப்பட்டுள்ளன.  பறவைகளின் இறகுகள் மற்றும் முட்டைகளின் எண்ணிக்கை, பறக்கும் போது இறக்கைகள்  அடிக்கும் வீதம், வலசை முறைகள், விருப்பமான உணவுகள், இரை உண்ணும் முறைகள், ஆயுட்காலம் என முடிந்தவரையிலான விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. 

நூலில் கணிசமான எழுத்து மற்றும் சந்திப் பிழைகளும் சிற்சில தவறுகளும் தென்பட்டாலும் அவை, கம்ப ராமாயணத்தை எழுதியது சேக்கிழார்? என்ற அளவிற்குத் தீவிரமானதாக இல்லாததால், இந்நூலின் ஆக்கச் சிறப்பு கருதி அவற்றைப் பொருட்படுத்த வேண்டியதில்லை.  இதில் இடம்பெற்றிருக்கும் நிழற்படங்களைப் பற்றி மட்டுமே தனிக் கட்டுரை எழுதும் அளவிற்கு, மேலை நாட்டுப் புத்தகங்களுக்கு இணையாகக்  கண்கவர் வண்ணப் படங்கள் பொருத்தமான பகுதிகளில் சொருகி வைக்கப்பட்டுள்ளன.  வழுவழுப்பான தாளில் புத்தகம் முழுவதும் வண்ணங்களில் உறுதியான கட்டமைப்புடன் வெளியிட்டிருக்கும் எதிர் வெளியீடு பதிப்பகத்தாரையும், பல்வேறு நூல்களிலிருந்தும் களப்பணிகளிலிருந்தும் தரவுகளைத் திரட்டி தங்களது அதிகபட்ச உழைப்பைக் கொடுத்து இந்நூலை உருவாக்கியுள்ள தோழர்கள் சண்முகானந்தம் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.  பசுமை இலக்கியத்தில் ஒரு முத்திரைப் படைப்பு!

பறவை நோக்குதல் வழியாக சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது எவ்வாறு என்ற புரிதலில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சும்  இந்நூலை, சதா சர்வகாலமும் தொடுதிரை அலைபேசிகளைத் தங்கள் விரல் நோகத் தோய்த்து, அது மட்டுமே உலகம் என நம்பும் இளையதலைமுறையினர் படித்து, அதை முடிந்தவரை மற்றவருக்குப் பரப்ப முயற்சிக்க வேண்டும்.  அது ஒன்று மட்டுமே... எஞ்சியுள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இந்நூலாசிரியர்களுக்கும் கிடைக்கும் உண்மையான வெகுமதியாகும்.

Tuesday, 6 March 2018

ஸ்டீவ் ஜாப்ஸ்



இந்த பூமியில் 56 வருடங்கள் மட்டுமே வாழ்ந்த ஸ்டீவ் ஜாப்ஸ் செய்த சாதனைகளை இனி ஒருவர் செய்ய முடியுமா என்பதே மிகப் பெரிய கேள்விக்குறி.  ஏனெனில் ஜாப்ஸ் சிறிதளவு தொழில்நுட்ப அறிவையும் பெருமளவு உள்ளுணர்வையும் கற்பனையையும் பயன்படுத்தி பிரமாண்டமான கண்டுபிடிப்புகளை உருவாக்கி அழியாப் புகழைப் பெற்றார்.

சிரிய தந்தைக்கும் அமெரிக்க தாய்க்கும் பிறந்து குழந்தைப் பருவத்திலேயே வேறொரு அமெரிக்க-ஆர்மீனிய தம்பதிக்குத் தத்துக் கொடுக்கப்பட்ட துயரமான ஆரம்ப கட்டம் நிறைந்தது ஜாப்ஸின் வாழ்க்கை.  படிப்பில் பெரிதாக நாட்டமில்லை.  ஆனால் கம்ப்யூட்டரின் மீது தீராக் காதல்.

கார் ஷெட்டில் ஆரம்பிக்கப்பட்ட ஆப்பிள் நிறுவனம் இன்று 8,50,000 சதுர அடி பரப்பளவில் அட்லாண்டிக் சமுத்திரம் போல் இயங்கி வருகிறது.  ஐமாக், அனிமேஷன் திரைப்படங்கள், ஐபாட், ஐபேட், ஐபோன், ஐடியூன்ஸ் என தொட்டதெல்லாம் அமோக வெற்றி.  உண்மையிலேயே மிடாஸ் டச்தான்.


ஆப்பிள்-I மற்றும் ஆப்பிள்-II என மெல்ல முன்னணி மேசைக்கணினி தயாரிக்கும் நிறுவனமாக வளர்ந்து வந்த ஆப்பிளிலிருந்து ஒரு கட்டத்தில் ஜாப்ஸ் வெளியேற்றப்படுகிறார்.  பின்னர் நெக்ஸ்ட் என்ற கணினி தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்குகிறார்.  அதுவும் தோல்வியில் முடிகிறது.  அவ்வளவுதான் ஜாப்ஸ்...! என டெக் உலகம் தீர்மானித்திருந்த நிலையில் பிக்ஸார் என்ற அனிமேஷன் படம் தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கினார்.  அது தயாரித்து வெளியிட்ட Toy Story முதல் Ratatouille வரையான அனைத்துத் திரைப்படங்களும் பாக்ஸ் ஆஃபிஸில் வசூலை வாரிக் குவித்தன.  பாரம்பரியமான வால்ட் டிஸ்னியே பிக்சாரின் தொடர் வெற்றிகளால் அதிர்ந்தது.  பின்னர் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 32,000 கோடிக்கு பிக்ஸாரை வால்ட் டிஸ்னிக்கு பெருத்த லாபத்தில் விற்கிறார் ஜாப்ஸ்.  இதற்கிடையில் தன் முதல் குழந்தை போல் பாவித்த ஆப்பிள் நிறுவனம் சரியான தலைமையில்லாமல் கிட்டத்தட்ட மூடும் நிலைக்குச் சென்றது.  மீண்டும் பங்குதாரர்கள் ஜாப்ஸிடம் சரணடைகிறார்கள்.  வீறு கொண்டு எழுந்தது ஆப்பிள்! அதனால்தான் அந்நிறுவனத்தின் சென்ற வருட கையிருப்புத் தொகை அமெரிக்காவின் பெரிய வங்கியான பேங்க் ஆஃப் அமெரிக்காவின் இருப்புத் தொகையைவிட அதிகமாக உள்ளது.  அதாவது சுமார் 15 இலட்சம் கோடி ரூபாய்கள்!


இந்நூலைப் படிக்கும் பொழுது ஜாப்ஸ் போன்ற மனிதனோடு குடும்பம், தொழில் என ஒருவருமே சுமூக உறவோடு இருக்க முடியாது என துல்லியமாகத் தெரிகிறது.  அவ்வளவு மூர்க்கத்தனம் உள்ளவர்.  இத்தனைக்கும் தன் வாழ்நாள் முழுவதும் சைவ உணவு மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளார்.  தான் நினைத்த வடிவம் வரவில்லையென்றால் அந்த இடத்திலேயே கடும் வசவுகள், பொருட்களைத் தூக்கியெறிதல், தன்னையே நொந்து கொண்டு அனைவரது முன்பும் அழுவது என ஒரு சைக்கோ போல நடந்துள்ளார்.  ஆனால் இவை எதையும் பொருட்படுத்தாமல் அவருக்கு உறுதுணையாக ஓர் அருமையான தொழில்நுட்பக் குழு வாய்த்துள்ளது பெரிய விஷயம்!

தனிப்பட்ட வாழ்க்கையிலும் சற்று இரக்கமில்லாதவராக இருந்துள்ளார்.  மூன்று பெண்களுக்கு மேல் தொடர்பு.  அவர்களுக்குப் பிறந்த நான்கு வாரிசுகள் என மனுஷன் சும்மா விளையாடியிருக்கார்.  கணையத்தில் ஆரம்பித்த புற்றுநோய் கல்லீரல் மற்றும் உடலின் பிற பாகங்களில் பரவி கடந்த 05.10.2011 அன்று இவ்வுலகை விட்டு மறைந்தார் ஜாப்ஸ்.  பெரும் செல்வங்கள் சேர்ந்த நிலையிலும் அமெரிக்காவின் பிற பணக்காரர்களைப் போல தனக்குப் பாதுகாப்பு அலுவலர்கள், வேலைக்காரர்கள், கார் ஓட்டுநர்கள் என ஒருவரையும் பணிக்கு வைக்காமல் கடைசிவரை எளிமையாக வாழ்ந்தார்.  ஒருமுறை பில்கேட்ஸ் தனது வீட்டிற்கு வந்த போது ஜாப்ஸ் தானே சென்று குளிர்சாதனப் பெட்டியிலிருந்து குடிநீர் கொண்டு வந்து கொடுத்து அதிர வைத்தார்.

இந்நூல் மிக மிக முக்கியமான ஒன்று.  ஏனெனில் தொழில்முனைவில் ஆர்வமுள்ளவர்கள், கல்லூரி மாணவர்கள், ஐ.டி பணியாளர்கள் ஆகியோருக்கு மட்டுமல்ல... அனைத்துத் தரப்பினரும் படித்துப் பல பாடங்களைக் கற்றுக் கொள்ள ஏராளமான விஷயங்கள் அடங்கிய பொக்கிஷம்! Don’t miss it ரகம் என்றால் அது மிகையல்ல!!

வால்டர் ஐசாக்ஸன் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஸ்டீவ் ஜாப்ஸ் உள்பட சுமார் 200 நபர்களுக்கும் மேல் பேட்டியெடுத்து சிறப்பாகத் தொகுத்து வெளியிட்டுள்ளார்.  ஆங்கிலத்தில் படித்தால் தாவு தீர்ந்துவிடும் அளவிற்கு சிக்கலான இந்நூலை நல்ல வாய்ப்பாக உமா பாலு அற்புதமாக மொழிபெயர்த்துள்ளார்.  கலைச்சொற்கள், சொல்லடைவு என முழுமையான வடிவில் சிறப்பாக வெளியிட்டுள்ளனர் அடையாளம் பதிப்பகத்தார்.

வெளியீடு :- அடையாளம்
பக்கங்கள் :- 878
விலை    :- ரூ.660

Thursday, 1 March 2018

என்னை நான் சந்தித்தேன்


பெரும்பாலான புத்தக வாசகர்களைப் போலவே தீவிர வாசிப்பிற்குச் செல்வதற்கு ஆரம்ப கட்டமான அம்புலி மாமா, காமிக்ஸ்கள், க்ரைம் நாவல்களைப் பதின்ம வயதுகளில் வாசித்துக் கிளர்ச்சியடைந்ததில் பெரும்பங்கு வகித்தவை ராஜேஷ்குமார் எழுதியவை. அவரது சுயசரிதையின் ஒரு பகுதியாக வந்துள்ள இந்நூல், அவர் எழுதிய க்ரைம் நாவல்களைப் போன்று விறுவிறுப்பாக உள்ளது. தற்போது பணி நெருக்கடியினால் நேரமின்மை, வாசிப்பில் அடுத்த கட்ட நகர்வு காரணமாக இவரது நாவல்களைப் படிப்பதில்லை. ஆனால் இந்நூல் விதிவிலக்கு.
எடுத்த வேகத்தில் இரண்டு நாட்களில் 500 பக்க புத்தகத்தை வாசித்து முடிக்க வைக்கிற எக்ஸ்பிரஸ் வேக எழுத்து நடை! எழுத்தை மட்டுமே நம்பி தமிழ்நாட்டில் ஒருவர் வாழ முடியும் என்பதற்கு ராஜேஷ்குமார் சரியான... அதே நேரத்தில் அரிதான உதாரணம். இதில் கதையை உருவாக்குவதிலிருந்து அதை மேம்படுத்துவது வரையான ரகசியங்களை எவ்வித பூடகமுமின்றி வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழ் சினிமா, எழுத்தாளர்களின் சிந்தனைகளை உறிஞ்சி எடுத்து விட்டு, எப்படி நாமம் சாத்துகிறது என்பதைப் பல அத்தியாயங்களில் போட்டுடைத்துள்ளார். சினிமா உலகம் தொடர்ச்சியாகத் தன்னை ஏமாற்றி வந்தாலும் தன் முயற்சியில் மனம் தளராமல் சலிப்பின்றி கோடம்பாக்கத்தை மீண்டும் மீண்டும் முற்றுகையிட்டுள்ளார். அதனால் தான் இன்று கோவையிலிருந்து கொண்டே சினிமாவில் தனக்கான இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
பல அறிவியல் விஷயங்களை பின்னணியாகக் கொண்டு தனது நாவல்களை உருவாக்கிய ராஜேஷ்குமார்... ஜோதிடம், பிரசன்னம் பார்ப்பது, எண் கணிதம் போன்றவற்றில் நம்பிக்கை உள்ளவராக இருப்பது இந்நூலைப் படிக்கும் நமக்கு வியப்பளிக்கிறது. இருந்தாலும் இவரது வாசகர்கள் மட்டுமின்றி சுவாரஸ்ய விரும்பிகள் அனைவரும் தவற விடக்கூடாத முக்கியமான நூல்.

Wednesday, 20 September 2017

மய்யழிக் கரையோரம்




கேரளாவில் கோழிக்கோடு, கண்ணனூர் ஆகிய மாவட்டங்களுக்கு நடுவே வெறும் ஒன்பது சதுர கிலோமீட்டர் பரப்பளவு மட்டுமே உள்ள சிறிய ஊர் மய்யழி (மாஹி).  இவ்வூரைப் பின்னணியாகக் கொண்டு எம். முகுந்தன் எழுதிய நாவல்தான் மய்யழிக் கரையோரம்.
நாவல் சிற்பம்
மாஹியில் உள்ள அரசு நிர்வாக கட்டிட அலுவலகத்தின் ஆறடி உயரமுள்ள சுற்றுச்சுவரில் சுமார் நூறடி நீளத்திற்கு இந்நாவலின் 30 முக்கிய நிகழ்வுகளை பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் சிற்பமாக அரசாங்கமே செய்து வைத்துள்ளது என்ற செய்தியைப் படித்த  பொழுது, அப்படி என்னதான் இருக்கிறது என ஆர்வம் மேலிட இந்நூலை இணையத்தில் தேட, அதன் தமிழ் மொழிபெயர்ப்பை என்பிடி (NBT) சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டுள்ளது தெரிய வந்தது.  நம்மவர்களின் இலக்கிய ஆர்வம் நன்றாகத் தெரியுமென்பதால், இந்நூல் கண்டிப்பாக விற்று முடிந்திருக்காது என்கிற நம்பிக்கையில் ஈரோடு புத்தகக் கண்காட்சியில் என்பிடி அரங்கில் சீந்துவாரின்றிக் கிடந்த பிரதிகளில் ஒன்றை வாங்கினேன்.
குறம்பியம்மா என்ற வயதான பெண்மணியின் நினைவலைகளில் ஆரம்பிக்கும் நாவல், அவளது பேரன் தாசன் (கதையின் நாயகன்) பிறந்து, பள்ளி பயின்று, இளைஞனாவது வரையிலான கால கட்டத்தை மய்யழியின் புவியியல் பின்புலத்தோடு ஓர் அற்புத எழுத்தோவியமாக செதுக்கியுள்ளார் முகுந்தன்.

பிரெஞ்சு ஆதிக்கத்தோடு ஆரம்பிக்கும் கதை, மய்யழியின் விடுதலையோடு முடிகிறது.  இதற்கிடையில் நூற்றுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் உலவுகின்றன.  ஆனால் அவை நம் நினைவை விட்டு நீங்காவண்ணம் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு சின்ன சம்பவத்தைப் புதைத்து வைத்துப் படைத்துள்ளார் நூலாசிரியர்.

குறம்பியம்மாவின் மகனான அதிகம் படிக்காத தாமு, மாஹியில் உள்ள கோர்ட்டில் ரைட்டராகப் பணிபுரிகிறார்.  அவரது மகன் தாசன் நன்றாகப் படிப்பதால், அவ்வூரின் மேயர் அவனை மேல்படிப்பிற்காகப் பாண்டிச்சேரி அனுப்புகிறார்.  திரும்பி வரும் அவன் முன்னால், பிரான்ஸிற்கு மேற்கொண்டு படிக்க செல்வது அல்லது மாஹியின் செகரடேரியட்டில் அரசாங்கப் பணியில் சேர்வது என இரண்டு தேர்வுகள் உள்ளன.  இதற்கிடையில்  கம்யூனிச சிந்தாந்தத்தில் ஊறிப் போகும் தாசன், பிரெஞ்சு அரசாங்கத்தின் ஆதரவு தனக்குத் தேவையில்லை என முடிவெடுத்து மய்யழியின் விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெறுகிறான்.  மகன் தன் குடும்பத்தைக் காப்பாற்றுவான் என்ற கனவு பொய்த்துப் போக தாமு, தாசனை வீட்டை விட்டு துரத்துகிறார்.  சந்திரிகா என்ற பெண்ணுடன் தாசன் காதல் கொள்கிறான்.  உருப்படியான வேலை இல்லாததால், தாசனுக்கு சந்தரிகாவின் அப்பா பெண் தர மறுக்கிறார்.  வேறு மாப்பிள்ளை பார்த்து விட்டு போன பிறகு, சந்திரிகா காணாமல் போகிறாள்.  எங்கு தேடியும் கிடைக்கவில்லை!  தாசனுக்குத் தெரியும், அவள் இனி கிடைக்கப் போவதில்லை என்று.  முடிவில் மாஹி விடுதலை பெற்ற பிறகும், எந்த வேலையிலும் நாட்டம் செல்லாமல் வாழ்க்கையை வெறுத்த நிலையில் சுற்றிக் கொண்டிருக்கும் தாசன் என்னவாகிறான் என்பதோடு கதை முடிகிறது.

இந்நாவலில் நம்மை ஒன்ற வைக்கும் பல்வேறு அம்சங்கள் உள்ளன.  மின்சார விளக்குகள் இல்லாததால் எண்ணெய் ஊற்றி ஒளிர விடப்படும் தெரு விளக்குகள், கள்ளுக்கடை, மூடநம்பிக்கைதான் என்றாலும் குறம்பியம்மா தன் பேரனுக்குச் சொல்லம் சுவாரஸ்யமான கதைகள், இரயில் நிலையம், பாலம், மய்யழியின் பருவகால மாற்றங்கள், குஞ்ஞிச்சிறுதை எனும் வேசியின் பாத்திரப்படைப்பு, தெரு விளக்கேற்றும் கான்டிராக்ட் பெறும் முதலாளி அதில் செய்யும் ஏமாற்று வேலை, பிரெஞ்சு அதிகாரிகளின் குதிரை வண்டிகள், கடலையொட்டிய மேயரின் பங்களா, தேவாலயம் என ஒரு விஸ்தாரமான உலகை நம் மனதில் உருவாக்கும் சிறந்த படைப்பு.

நாவலைப் படித்து முடித்தவுடன் மாஹி சென்று, நாவலின் கதாபாத்திரங்கள் உலவிய பகுதிகளில் நாமும் நடமாட வேண்டும் என்ற உந்துதலைத் தவிர்க்க முடியவில்லை.

என்னதான் அறுசுவை விருந்து படைத்தாலும், அதில் நரகலை எடுத்து வைத்தது போல ஒரு சிறிய பத்தி நம்மைக்  காயப்படுத்துகிறது.  பெரும்பாலான மலையாளப் படைப்பாளிகளுக்கே உரிய கெட்ட குணம் அது.
“அந்தக் காலத்தில் மய்யழியில் போலீஸ்காரர்களில் பெரும்பகுதியினர் பாண்டிச்சேரியிலிருந்தும் காரைக்காலிலிருந்தும் வந்த தமிழர்களாயிருந்தார்கள்.  அவர்கள் பொதுவாக மடையர்களாவும் மண்டை காய்ந்தவர்களாகவும் இருந்தார்கள்.  பொழுது புலரும்போதே குடிக்கப் போய்விடுவார்கள்.  பாட்டுப் பாடியும் பெண்கள் பின்னே சுற்றித் திரிந்தும் நேரத்தைக் கொல்வார்கள்“. (பக்.-81)

எந்த சித்தாந்தமாக இருந்தாலும் ஓரளவிற்கு மேல் உள்வாங்கினால், இயல்பான வாழ்க்கை பாதிக்கப்படும் என்ற செய்தியை தாசன் கதாபத்திரம் மூலம் மறைமுகமாக சொல்கிறது இந்நாவல்.  அவசியம் வாசிக்க வேண்டிய நாவல் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.  மொழிபெயர்ப்பு நன்றாகவே இருக்கிறது.

வெளியீடு - என்பிடி (NBT)
பக்கங்கள் 267
விலை    - ரூ.48/-

Monday, 28 August 2017

ரத்தம் ஒரே நிறம்


தமிழின் 100 சிறந்த நாவல்களில் ஒன்றாக எஸ்.ரா மற்றும் ஜெயமோகன் ஆகியோரால் குறிப்பிடப்படும் சுஜாதாவின் ஒரே நாவல் ரத்தம் ஒரே நிறம்.  நீண்ட நாட்களாக வாங்கிப் படிக்க வேண்டும் என நினைத்த இந்நாவல் அண்மையில் நடைபெற்ற ஈரோடு புத்தகத் திருவிழாவில் உயிர்மை அரங்கில் கிடைக்கவில்லை.  ஸ்டாக் முடிந்து விட்டது என்றார்கள்.  ஒரு வழியாக ஆன்லைன் புத்தகக் கடையிலிருந்து வாங்கிவிட்டேன்.

பல்வேறு பணிகளுக்கிடையே இரண்டு நாட்களில் முந்நூற்றி சொச்சம் பக்கங்கள் உள்ள இந்த நாவலை ஒரே வீச்சில் படித்து முடித்து விட்டேன்.  இந்திய விடுதலைப் போர் வரலாற்றில் இன்றளவும் தவறுதலாக முதல் இந்திய சுதந்திரப் போர் என குறிப்பிடப்படும் 1857-ல் நடைபெற்ற சிப்பாய்க் கலகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நூல்.


கர்னல் நீல், ஆஷ்லி, மக்கின்சி, அவன் மனைவி எமிலி என ஆங்கிலேயத் தரப்பு ஒரு புறம்.  முத்துக்குமரன், அவன் காதலி பூஞ்சோலை, பைராகி சாமியார் மற்றும் சில சின்ன கதாபாத்திரங்கள் என தமிழர் தரப்பு மறு புறம்.  இவர்களுக்கிடையே சிப்பாய்க் கலகத்தை சான்ட்விச் போல திணித்து சுவையாக வழங்கியுள்ளார் சுஜாதா.

ஒரு எதிர்பாராத சந்தர்ப்பத்தில் முததுக்குமரனின் தந்தை ஆங்கிலேய ராணுவ அதிகாரி மக்கின்சியால் கொல்லப்பட, அதற்குப் பழி தீர்க்கப் புறப்படும் முத்துக்குமரன் மக்கின்சியைக் கொன்றானா? இல்லையா? என்ற கேள்விக்கான விடை தான் இந்நாவல்.  சுஜாதா தன் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளது போல் நாவலில் குறிப்பிடப்படும் பல்வேறு சம்பவங்கள் உண்மையானவை.  இதில் முத்துக்குமரன் என்கிற தமிழனின் கதையைக் கலந்தது மட்டும் தான் சுஜாதாவின் கற்பனை.
நானா சாகிப்
 நானா சாகிப், தாந்தியா தோபே ஆகியோர் பற்றிய சரித்திர விபரங்கள், வெள்ளைக்கார அதிகாரிகள் வசிக்கும் மாளிகைகள், அவர்களது பழக்க வழக்கங்கள், அன்றைய சென்னையின் நகர அமைப்பு, கல்கத்தா துறைமுகம், கான்பூர் போர்க் காட்சிகள், கழைக் கூத்தாடிகளின் வாழ்வியல், குதிரைகள், பறவைகள், வாள், கத்தி, பீரங்கி, என்பீல்ட் ரக துப்பாக்கிகள், ராணுவ நடைமுறைகள், மது வகைகள், இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.  அவ்வளவு தகவல்கள்! இப்புத்தகத்தின் அணிந்துரையில் ரா.கி. ரங்கராஜன் குறிப்பிட்டது போல், “கூடை நிறைய உள்ள தகவல்களை சுஜாதா காப்ஸ்யூல் வடிவில் கொடுத்திருக்கிறார்.  துணை நூற் பட்டியலில் பல ஆங்கிலப் புத்தகங்களுக்கிடையில் அபிதான சிந்தாமணியை குறிப்புக்கு எடுத்துள்ளதிலிருந்தே தெரிகிறது சுஜாதாவின் அசுர உழைப்பு.

இந்நாவலில் என்னை ஈர்த்த கதாபாத்திரம் பைராகி சாமியார் தான்.  செமி நாத்திகவாதியான சுஜாதா, இக்கதாபாத்திரத்தின் மந்திர தந்திர வித்தைகளை பகடியுடனும் வெகு சுவாரஸ்யத்துடனும் எழுதியுள்ளார்.

இதில் ஆண் பெண் உடலுறவுக் காட்சிகள் அதிகம் வர்ணிக்கப்படுவது, சில இடங்களில் மதராஸ் என்பதற்குப் பதிலாக கதாபாத்திரங்கள் சென்னை என பேசுவது உள்ளிட்ட சிலவற்றைத் தவிர்த்துப் பார்த்தால், அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நாவல் என சம்பிராதாயமாகக் கூறினாலும், இது வழக்கமான வரலாற்று நாவல் அல்ல.  ஏனெனில், தமிழ்ப்  படைப்புலகத்தின் ஆல் ரவுண்டரான சுஜாதாவின் மொழிநடை வரலாற்றை விட வசீகரமானது.  இந்நூலை வேறு யார் எழுதினாலும் ஒரே வீச்சில் வாசிக்க இயலாது.  அது தான் சுஜாதாவின் வெற்றி!

வெளியீடு :- உயிர்மை
பக்கங்கள் :- 342

விலை    :- 300/-

Wednesday, 10 May 2017

தாழப் பறக்காத பரத்தையர் கொடி


பிரபஞ்சன் 2008-2009 ஆண்டுகளில் எழுதிய 16 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.  குமுதம் வார இதழில் பணியாற்றியது, சங்க இலக்கியம், புதுச்சேரி (பாண்டிச்சேரி என்பது தவறான வழக்கு என்கிறார்) நினைவுகள், நூல் அறிமுகங்கள், மேன்ஷன் வாழ்க்கை, மதுப்பழக்கம், உலகத் தமிழ் மாநாடு கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தனது தெள்ளிய நடையில் விவரித்துள்ளார்.

குமுதம் அலுவலகத்தின் அன்றாடப் பணிகள் ஒரு குருகுலம் போல் பகவத் கீதை, திருக்குறள் என தொடங்கி, வழிபாடு முடிந்த பின்னர்... இதழில் இடம்பெறப் போகும் சினிமா நடிகைகளின் கவர்ச்சிப் படங்களைத் தேர்வு செய்வது என்ற முரண்பாட்டை நகைச்சுவை கலந்து பதிவு செய்துள்ளார்.

மேன்ஷன் அறைகள், சவப்பெட்டி போன்றவை“ என்ற ஒற்றை வரியில் மேன்ஷன்களின் சித்திரத்தை சுரீரென்று மனதில் பதிய வைக்கிறார்.  சில ஆண்டுகளுக்கு முன்பு திருவல்லிக்கேணியில் ஒரு மேன்ஷனில் ஒரு வார காலம் தங்கிய அனுபவம் உள்ளதால், அந்த அவஸ்தை எனக்கு நன்றாகப் புரிந்தது.

பிரபஞ்சனின் தங்கை மற்றும் தம்பி ஆகியோருடனான சிறு வயது விளையாட்டுகள்... ஒரு கோடை விடுமுறையில் அவர்களிருவரும் அம்மை தாக்கி இறந்து போனது என மனதை உருக்கும் “பானு உன் புத்தகப் பை அண்ணனிடம் இருக்கிறது என்ற கட்டுரை நெகிழ்ச்சியானது.

புதுச்சேரியின் மதுப்பழக்கம் பற்றிய கட்டுரையில், மதுவைக்  குடிப்பதற்கும் அதை அருந்துவதற்கும் உள்ள நுண்ணிய வேறுபாட்டை பிரெஞ்சுப் பண்பாட்டின் பின்னணியில் சுவையாக விளக்குகிறார்.  ஒரு முறை மராத்தியர்கள் ரகோஜி போஸ்லே தலைமையில் புதுச்சேரியை முற்றுகையிட்டு யுத்தத்திற்கு அழைப்பு விடுக்க, அப்போது புதுச்சேரியின் கவர்னராக இருந்த துய்மா என்பவன், மராத்தியத் தூதுவனிடம் “யுத்தத்திற்கு தயார்! என பதில் கடிதம் கொடுத்து, கூடவே பத்து ஐரோப்பிய மது பாட்டில்களையும் வைத்து அனுப்பி வைக்கிறான்.  அந்த மதுவை ரகோஜி தனது மனைவியுடன் பகிர, அதன் சுவையில் மயங்கிய அவள் அனைத்து பாட்டில்களையும் குடித்து முடித்துவிட்டு, இன்னும் வேண்டும் என்கிறாள்.  ரகோஜி, பேரழகியான தனது மனைவியின் ஆசையை நிறைவேற்ற, எதிரியான துய்மாவிடம் யுத்தத்தை மறந்து, முப்பது பாட்டில்களைக் கேட்டுப் பெற்றுக் கொண்டான்.  பிறகென்ன... யுத்தம் கைவிடப்பட்டது.  பிரபஞ்சன் இதை விவரித்துவிட்டு இறுதியில் எழுதுகிறார்... “யுத்தங்களை மனிதர்கள் உருவாக்குகிறார்கள்.  பாட்டில்கள் தீர்த்து வைக்கின்றன”.  இதுதான் பிரபஞ்சன் டிரேட்மார்க்.  புதுச்சேரியின் கள்ளுக்கடைகள், பார்கள் சுத்தமாகப் பராமரிக்கப்படுகின்றன...  தமிழ்நாடு போல கண்றாவியாக இருப்பதில்லை என்கிறார்.  ஆனால், தற்போது புதுச்சேரியும் தமிழ்நாட்டைப் போல் குடியால் சீரழிகிறது என நேர்மையாகக் கட்டுரையை முடிக்கிறார்.  இக்கட்டுரையை வாசிக்கும்பொழுது ஒரு தரமான ஒயினை மிடறு மிடறாக அனுபவித்துக் குடிப்பதைப் போன்ற மகிழ்ச்சியைத் தருவதுதான் பிரபஞ்சனின் எழுத்தாற்றல்.

இந்தப் புத்தகத்தில் அதிர்ச்சி தரும் கட்டுரை, பாவை பப்ளிகேஷன் என்ற பதிப்பகம் பிரபஞ்சனின் அனுமதியில்லாமல் அவரது நாடகம் உட்பட ஐந்து படைப்பாளிகளின் நாடகங்களை அவர்களது அனுமதியில்லாமல் ஒரே தொகுப்பாக வெளியிட்டு விட்டது.  அது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பதிப்பகம்!  அப்பதிப்பகத்தின் கௌரவ தலைவரின் தலைமையில் ராயல்டிக்காகக் கிட்டத்தட்ட கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது... பிரபஞ்சன் அந்தத் தலைவரை நோக்கிக் கடுமையாகப் பேசுகிறார்.  ஆனால், அவரோ பதிப்பகத்தாருக்கு சாதகமாகப் பேசுகிறார்.  சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பின்பு, விருப்பமே இல்லாமல் ராயல்டி வழங்கப்படுகிறது.  அந்தத் தலைவர் வேறு யாருமல்ல... நேர்மையின் உருவமாகக் கருதப்படும் நல்லகண்ணு! அவரின் பிம்பத்தில் விழுந்த மிகப்பெரிய ஓட்டை!!

இந்நூலின் தலைப்பைக் கொண்ட பரத்தையரின் வாழ்வை சமூகப் பார்வையோடு அலசும் ஆழமான கட்டுரை இறுதியாக இடம்பெறுகிறது.  “காற்றின் திசைகளில் பரத்தையர் ஏற்றிய கொடி எப்போதும் தாழப் பறப்பதில்லை என்று அக்கட்டுரையை முடிகிறது.  பிரபஞ்சன் எழுத்துலகிற்கு வந்து 55 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் இந்நேரத்தில், தமிழ் இலக்கிய வரலாற்றில் அவர் இயற்றிய படைப்புகளும் ஒருபோதும் தாழப் பறப்பதில்லை.  சிறந்த கட்டுரைத் தொகுப்பு!

வெளியீடு :- உயிர்மை
பக்கங்கள் :- 143
விலை    :- ரூ.85/-

Sunday, 23 April 2017

அமெரிக்காவின் மறுபக்கம்


ஐ.டி என்றில்லை... பெரும்பாலான தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்களின் கனவு தேசம் எதுவென்றால்...? அது அமெரிக்காதான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.   கவர்ச்சி நிறைந்த அந்த நாட்டின் நிறை குறைகளை அலசும் புத்தகம்தான் நாகேஸ்வரி அண்ணாமலை எழுதியுள்ள அமெரிக்காவின் மறுபக்கம்.  இந்நூலை இவர் தமிழ்நாட்டிலிருந்து எழுதியிருந்தால் அதன் நம்பகத்தன்மை ஆட்டம் கண்டிருக்கும்.  ஆனால் அவர் அமெரிக்காவில் ஐந்து வருடங்கள் தன் மகள் வீட்டில் வசித்து பல்வேறு புத்தகங்களை ஆய்வு செய்தும் நேரில் களப்பணியாற்றியும் எழுதியுள்ளதால் தகவல்கள் பெரும்பாலும் உண்மையாகவே இருக்க வாய்ப்புள்ளது.

Friday, 21 April 2017

சோலை எனும் வாழிடம்



தமிழில் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் எழுத்துகளின் முன்னோடியான தியடோர் பாஸ்கரன் பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கட்டுரைகள் மற்றும் அவரது ஒரு நேர்காணல் ஆகியவற்றின் தொகுப்பு “சோலை எனும் வாழிடம்என்ற புத்தகமாக வந்துள்ளது.

Monday, 13 March 2017

உப்பு வேலி


இந்திய வரலாற்றில் மறக்கப்பட்ட மாபெரும் சுங்கப் புதர்வேலியின் ஒரு சிறிய பகுதியைக் கிட்டத்தட்ட 120 ஆண்டுகளுக்குப் பிறகு தேடிக் கண்டுபிடித்த ராய் மாக்ஸம் என்ற வெள்ளைக்காரரின் பயணம் தான் உப்பு வேலி என்ற இந்தப் புத்தகம்.  ராய் மாக்ஸம் ஆங்கிலத்தில் எழுதிய The Great Hedge of India என்ற புத்தகத்தை சிறில் அலெக்ஸ் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

Thursday, 2 March 2017

பின்நகர்ந்த காலம்


வாசிப்பில் ஆர்வமுள்ள எல்லோரையும் போல பலரின் பரிந்துரையில் கடல்புரத்தில் நாவலையும் எஸ்தர் சிறுகதையையும் வாசித்த பின்பு தான் வண்ணநிலவன் எனக்கு அறிமுகமானார்.  1970 முதல் 1980 வரை அவருடைய வாழ்க்கை அனுபவங்களை பின்நகர்ந்த காலம் என்ற இந்ந நூலில் விவரித்துள்ளார்.

Sunday, 26 February 2017

கடைசிக் கோடு


அரசுப் பணியின் பொருட்டு, நில அளவைப் பயிற்சிக்காக தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு தமிழ்நாடு நில அளவைப் பயிற்சி நிலையத்தில் கடந்த 2015-ம் ஆண்டு 35 நாட்கள் பயிற்சி தரப்பட்டது.  அங்கு பாடம் நடத்திய ஆசிரியர்களில் திரு.சந்திரசேகர் என்ற ஓய்வு பெற்ற நில அளவை ஆய்வாளரைத் தவிர மற்ற அனைவரும் கடனே! என பயிற்சி வகுப்புகளை நடத்தினர்.  திரு.சந்திரசேகர் இந்தியாவை வெள்ளையர்கள் எவ்வாறு நில அளவை செய்தனர் என்பதை சுருக்கமாகக் கூறி விட்டு, பிரதான பாடத்திற்குள் நுழைந்தார்.  அப்பொழுது இந்தியாவை முதன்முதலில் நில அளவை செய்தவர் வில்லியம் லாம்டன் என்ற பன்முகத் திறமை கொண்டவர் என்று சொன்னார்.  அந்த “பன்முகத் திறமை“ என்ற வார்த்தை தந்த ஆர்வத்தில் இந்திய நில அளவை தொடர்பாக தமிழில் ஏதேனும் புத்தகங்கள் இருக்கிறதா என்று தேடியபொழுது கிடைத்த புத்தகம் தான் ரமணன் எழுதியுள்ள இந்த “கடைசிக் கோடு.

Sunday, 19 February 2017

ஆஷ் அடிச்சுவட்டில்



தமிழின் தவிர்க்கமுடியாத வரலாற்றாய்வாளர்களில் மிக முக்கியமானவரான ஆ.இரா. வேங்கடாசலபதி, 13 ஆளுமைகளைப்பற்றி பல்வேறு கால கட்டங்களில் எழுதித் தொகுத்து வெளிவந்திருக்கும் புத்தகம் “ஆஷ் அடிச்சுவட்டில்”.  இதில் ஆஷ், எல்லிஸ், ஜி.யு. போப் மற்றும் எரிக் ஹாப்ஸ்பாம் தவிர மீதி அனைவரும் நம்மவர்கள்.  இந்நூலில் உள்ள ஜி.யு. போப் தொடர்பான கட்டுரையின் தலைப்பு “தமிழ் மாணவர்! என்று வியப்புக்குறியுடன் தொடங்குவதிலிருந்து நமக்கும் வியப்பு தொற்றிக் கொள்கிறது.  நான் இறந்த பிறகு, எனது கல்லறையில் “நான் ஒரு தமிழ் மாணவர்” என்று பொறிக்கப்பட வேண்டும் என ஜி.யு. போப் கூறியதாக ஒரு செய்தி நீண்ட காலமாக உலவி நிலைபெற்றுவிட்டது.  உண்மை என்னவெனில், லண்டனில் உள்ள ஜி.யு. போப்பின் கல்லறையில் அப்படிப்பட்ட வாசகம் ஏதும் பொறிக்கப்படவில்லை என்பதை நேரில் சென்று பார்த்ததுடன் அதன் நிழற்பட நகலையும் புத்தகத்தில் இடம்பெற செய்துள்ளார் சலபதி.  லண்டன் செல்லும் தமிழன்பர்கள் எவர் வேண்டுமானாலும் போப்பின் கல்லறையை நிழற்படம் எடுத்து இதை நிறுவலாம்.  ஆனால் சலபதி வித்தியாசப்படுவது எதிலென்றால், “நான் ஒரு தமிழ் மாணவர்என்ற சொற்றொடர் எவ்வாறு நிலைபெற்றது என்பதைத் தேடி கண்டடைந்ததில் தான் உள்ளது.  தமிழின் நீண்ட கால நம்பிக்கையைத் தகர்த்த முக்கியமான கட்டுரை. 

Tuesday, 27 October 2015

வலசைப் பறவைகளின் வாழ்விடச் சிக்கல்கள்

வலசைப் பறவைகளின் வாழ்விடச் சிக்கல்கள்

தோழர் ஏ. சண்முகானந்தம் எழுதி பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டிருக்கும் வலசைப் பறவைகளின் வாழ்விடச் சிக்கல்கள் என்ற வண்ணப்படங்கள் அடங்கிய நூல் தமிழில் மிகக் குறைவாகவே வெளியிடப்படும் பசுமை இலக்கியம என்ற வகைப்பாட்டில் கவனிக்கத்தக்க நூலாகும். வலசைப் பறவைகள் பற்றிய நூல் என படிக்க ஆரம்பித்தால் சூழலியல், மானிடவியல், மார்க்சியம், சங்க இலக்கியம் மற்றும் சமூகஅறிவியல் எனப் பல தளங்களிலிருந்தும் தகவல்களைக் கொட்டிக் கடும் உழைப்பில் உருவாக்கி இருக்கிறார். எடுத்தவுடன் புத்தகத் தலைப்பிற்கேற்ப விடயங்களை அடுக்காமல் பறவைகளின் உடற்கூறியல் மற்றும் அவற்றின் பரிணாம வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றிக் குறிப்புகள் வழங்கிவிட்டுப் பின்னர் தலைப்பைத் தொடர்கிறார்.  

Monday, 28 April 2014

பரவச பரளிக்காடு


கோடையில் ஏதாவது காடு சார்ந்த சுற்றுலா செல்ல முடிவெடுத்து அதுவும் ஒரு நாள் சுற்றுலாவிற்குச் சிறந்த இடமாக பல மாதங்களாகச் செல்லத் திட்டமிட்ட பரளிக்காட்டிற்குச் சென்றோம்.   கோவை வனத்துறை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு எங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொண்டோம்பரளிக்காடு சுற்றுலா சனி, ஞாயிறு மட்டுமேநான்கைந்து நாட்களுக்கு முன்பே முன்பதிவு அவசியம்.

Sunday, 29 September 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

சும்மா ஒரு தகவலுக்காக... 

ஒரிஜினல்



இன்ஸ்பிரேசன்...?

இன்ஸ்பிரேசன் கதையில் இல்லை.  போஸ்டர் டிசைனில் மட்டுமே...!

Thursday, 14 February 2013

கறுப்பு கிறிஸ்துவும் வெள்ளைச் சிங்கங்களும்

 
இது நிலவியலாளர் சு.கி. ஜெயகரன் எழுதிய நூல். இவர் நிலவியல் துறையைச் சேர்ந்தவராக இருந்த போதும் பல துறைகளில் ஆர்வமுடையவர் என்பது இந்நூலைப் படிக்கும் பொழுது புலனாகிறது; வியப்பாகவும் இருக்கிறது. அவ்வளவு விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. சுற்றுச்சூழல், கென்யாவின் வங்காரி மாதய், மியான்மரின் ஆங்சான் சூகி, காமிக்ஸ், பாறை ஓவியங்கள், அணு உலை என கலந்து கட்டி எழுதியிருக்கிறார்.

Wednesday, 13 February 2013

அமிலம் - ஒரு சிறுகதை முயற்சி

பாபு ஏதோ பைக் ரேஸ் போல பறந்து கொண்டிருந்தான். மனம் முந்தைய நாள் சம்பவத்தால் துவண்டு போயிருந்தது. அதை நினைக்க நினைக்கக் கடும் சினம் தலைக்கேறியது. ஆறு மாதமாக அலைந்து கடைசியில் அது இல்லையென்று ஆன பின்பு தோன்றிய எரிச்சல். கல்லூரி முதலாண்டு படிப்பவனுக்கு வேறு என்ன... காதல் தான்! திவ்யா பெரிய அழகியில்லை. இருந்தாலும் அவனுக்கு அவள் அழகு! பாபு வகுப்பில் சேர்ந்து ஒரு வாரம் கழித்துதான் திவ்யா வந்து

Friday, 8 February 2013

வானில் பறக்கும் புள்ளெலாம்...


இந்நூலை தமிழின் மிக முக்கியமான சுற்றுச்சூழல் எழுத்தாளரும் சினிமா ஆய்வாளருமான சு. தியடோர் பாஸ்கரன் எழுதியுள்ளார். சுற்றுச்சூழல் வரிசையில் இது இவரது மூன்றாவது நூலாகும். புவி வெப்பமடைதலும் நிலத்தடி நீர் மட்டம் குறைவதும் ஒவ்வொரு ஆண்டும் தீவிரமாகி வரும் நிலையில் தமிழில் இது போன்ற நூல்கள் மிக அவசியமாக வாசிக்கப்பட வேண்டும். சென்ற வாரம் திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் வலம் வந்த போது கவனித்தால் கவிதைகள், நாவல்கள், சமையல் கலை, ஜோதிடம் மற்றும்

Saturday, 2 February 2013

பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறாவிட்டாலோ / தோல்வியடைந்தாலோ...


முன் குறிப்பு : இது மாணவர்களுக்கு மட்டுமல்ல... பெற்றோர்களுக்கும் சேர்த்து தான்.

பத்து மற்றும் +2 பொதுத் தேர்வுகளுக்காக மாணவர்கள் தயாராகிக் கொண்டிருக்கும் நேரமிது.  இப்பதிவின் நோக்கம் படிப்பை மட்டம் தட்டுவதன்று... மாறாகத் தேர்வில் தோல்வியடைந்தாலோ அல்லது எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெறாவிட்டாலோ என்ன ஆகிவிடப் போகிறது? என்ற வினாவை எழுப்புவது!