Wednesday 20 September 2017

மய்யழிக் கரையோரம்




கேரளாவில் கோழிக்கோடு, கண்ணனூர் ஆகிய மாவட்டங்களுக்கு நடுவே வெறும் ஒன்பது சதுர கிலோமீட்டர் பரப்பளவு மட்டுமே உள்ள சிறிய ஊர் மய்யழி (மாஹி).  இவ்வூரைப் பின்னணியாகக் கொண்டு எம். முகுந்தன் எழுதிய நாவல்தான் மய்யழிக் கரையோரம்.
நாவல் சிற்பம்
மாஹியில் உள்ள அரசு நிர்வாக கட்டிட அலுவலகத்தின் ஆறடி உயரமுள்ள சுற்றுச்சுவரில் சுமார் நூறடி நீளத்திற்கு இந்நாவலின் 30 முக்கிய நிகழ்வுகளை பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் சிற்பமாக அரசாங்கமே செய்து வைத்துள்ளது என்ற செய்தியைப் படித்த  பொழுது, அப்படி என்னதான் இருக்கிறது என ஆர்வம் மேலிட இந்நூலை இணையத்தில் தேட, அதன் தமிழ் மொழிபெயர்ப்பை என்பிடி (NBT) சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டுள்ளது தெரிய வந்தது.  நம்மவர்களின் இலக்கிய ஆர்வம் நன்றாகத் தெரியுமென்பதால், இந்நூல் கண்டிப்பாக விற்று முடிந்திருக்காது என்கிற நம்பிக்கையில் ஈரோடு புத்தகக் கண்காட்சியில் என்பிடி அரங்கில் சீந்துவாரின்றிக் கிடந்த பிரதிகளில் ஒன்றை வாங்கினேன்.
குறம்பியம்மா என்ற வயதான பெண்மணியின் நினைவலைகளில் ஆரம்பிக்கும் நாவல், அவளது பேரன் தாசன் (கதையின் நாயகன்) பிறந்து, பள்ளி பயின்று, இளைஞனாவது வரையிலான கால கட்டத்தை மய்யழியின் புவியியல் பின்புலத்தோடு ஓர் அற்புத எழுத்தோவியமாக செதுக்கியுள்ளார் முகுந்தன்.

பிரெஞ்சு ஆதிக்கத்தோடு ஆரம்பிக்கும் கதை, மய்யழியின் விடுதலையோடு முடிகிறது.  இதற்கிடையில் நூற்றுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் உலவுகின்றன.  ஆனால் அவை நம் நினைவை விட்டு நீங்காவண்ணம் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு சின்ன சம்பவத்தைப் புதைத்து வைத்துப் படைத்துள்ளார் நூலாசிரியர்.

குறம்பியம்மாவின் மகனான அதிகம் படிக்காத தாமு, மாஹியில் உள்ள கோர்ட்டில் ரைட்டராகப் பணிபுரிகிறார்.  அவரது மகன் தாசன் நன்றாகப் படிப்பதால், அவ்வூரின் மேயர் அவனை மேல்படிப்பிற்காகப் பாண்டிச்சேரி அனுப்புகிறார்.  திரும்பி வரும் அவன் முன்னால், பிரான்ஸிற்கு மேற்கொண்டு படிக்க செல்வது அல்லது மாஹியின் செகரடேரியட்டில் அரசாங்கப் பணியில் சேர்வது என இரண்டு தேர்வுகள் உள்ளன.  இதற்கிடையில்  கம்யூனிச சிந்தாந்தத்தில் ஊறிப் போகும் தாசன், பிரெஞ்சு அரசாங்கத்தின் ஆதரவு தனக்குத் தேவையில்லை என முடிவெடுத்து மய்யழியின் விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெறுகிறான்.  மகன் தன் குடும்பத்தைக் காப்பாற்றுவான் என்ற கனவு பொய்த்துப் போக தாமு, தாசனை வீட்டை விட்டு துரத்துகிறார்.  சந்திரிகா என்ற பெண்ணுடன் தாசன் காதல் கொள்கிறான்.  உருப்படியான வேலை இல்லாததால், தாசனுக்கு சந்தரிகாவின் அப்பா பெண் தர மறுக்கிறார்.  வேறு மாப்பிள்ளை பார்த்து விட்டு போன பிறகு, சந்திரிகா காணாமல் போகிறாள்.  எங்கு தேடியும் கிடைக்கவில்லை!  தாசனுக்குத் தெரியும், அவள் இனி கிடைக்கப் போவதில்லை என்று.  முடிவில் மாஹி விடுதலை பெற்ற பிறகும், எந்த வேலையிலும் நாட்டம் செல்லாமல் வாழ்க்கையை வெறுத்த நிலையில் சுற்றிக் கொண்டிருக்கும் தாசன் என்னவாகிறான் என்பதோடு கதை முடிகிறது.

இந்நாவலில் நம்மை ஒன்ற வைக்கும் பல்வேறு அம்சங்கள் உள்ளன.  மின்சார விளக்குகள் இல்லாததால் எண்ணெய் ஊற்றி ஒளிர விடப்படும் தெரு விளக்குகள், கள்ளுக்கடை, மூடநம்பிக்கைதான் என்றாலும் குறம்பியம்மா தன் பேரனுக்குச் சொல்லம் சுவாரஸ்யமான கதைகள், இரயில் நிலையம், பாலம், மய்யழியின் பருவகால மாற்றங்கள், குஞ்ஞிச்சிறுதை எனும் வேசியின் பாத்திரப்படைப்பு, தெரு விளக்கேற்றும் கான்டிராக்ட் பெறும் முதலாளி அதில் செய்யும் ஏமாற்று வேலை, பிரெஞ்சு அதிகாரிகளின் குதிரை வண்டிகள், கடலையொட்டிய மேயரின் பங்களா, தேவாலயம் என ஒரு விஸ்தாரமான உலகை நம் மனதில் உருவாக்கும் சிறந்த படைப்பு.

நாவலைப் படித்து முடித்தவுடன் மாஹி சென்று, நாவலின் கதாபாத்திரங்கள் உலவிய பகுதிகளில் நாமும் நடமாட வேண்டும் என்ற உந்துதலைத் தவிர்க்க முடியவில்லை.

என்னதான் அறுசுவை விருந்து படைத்தாலும், அதில் நரகலை எடுத்து வைத்தது போல ஒரு சிறிய பத்தி நம்மைக்  காயப்படுத்துகிறது.  பெரும்பாலான மலையாளப் படைப்பாளிகளுக்கே உரிய கெட்ட குணம் அது.
“அந்தக் காலத்தில் மய்யழியில் போலீஸ்காரர்களில் பெரும்பகுதியினர் பாண்டிச்சேரியிலிருந்தும் காரைக்காலிலிருந்தும் வந்த தமிழர்களாயிருந்தார்கள்.  அவர்கள் பொதுவாக மடையர்களாவும் மண்டை காய்ந்தவர்களாகவும் இருந்தார்கள்.  பொழுது புலரும்போதே குடிக்கப் போய்விடுவார்கள்.  பாட்டுப் பாடியும் பெண்கள் பின்னே சுற்றித் திரிந்தும் நேரத்தைக் கொல்வார்கள்“. (பக்.-81)

எந்த சித்தாந்தமாக இருந்தாலும் ஓரளவிற்கு மேல் உள்வாங்கினால், இயல்பான வாழ்க்கை பாதிக்கப்படும் என்ற செய்தியை தாசன் கதாபத்திரம் மூலம் மறைமுகமாக சொல்கிறது இந்நாவல்.  அவசியம் வாசிக்க வேண்டிய நாவல் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.  மொழிபெயர்ப்பு நன்றாகவே இருக்கிறது.

வெளியீடு - என்பிடி (NBT)
பக்கங்கள் 267
விலை    - ரூ.48/-