இந்த பூமியில் 56 வருடங்கள் மட்டுமே வாழ்ந்த ஸ்டீவ் ஜாப்ஸ் செய்த சாதனைகளை இனி
ஒருவர் செய்ய முடியுமா என்பதே மிகப் பெரிய கேள்விக்குறி. ஏனெனில் ஜாப்ஸ் சிறிதளவு தொழில்நுட்ப அறிவையும்
பெருமளவு உள்ளுணர்வையும் கற்பனையையும் பயன்படுத்தி பிரமாண்டமான கண்டுபிடிப்புகளை
உருவாக்கி அழியாப் புகழைப் பெற்றார்.
சிரிய தந்தைக்கும் அமெரிக்க தாய்க்கும் பிறந்து குழந்தைப் பருவத்திலேயே வேறொரு
அமெரிக்க-ஆர்மீனிய தம்பதிக்குத் தத்துக் கொடுக்கப்பட்ட துயரமான ஆரம்ப கட்டம்
நிறைந்தது ஜாப்ஸின் வாழ்க்கை. படிப்பில்
பெரிதாக நாட்டமில்லை. ஆனால்
கம்ப்யூட்டரின் மீது தீராக் காதல்.
கார் ஷெட்டில் ஆரம்பிக்கப்பட்ட ஆப்பிள் நிறுவனம் இன்று 8,50,000 சதுர அடி
பரப்பளவில் அட்லாண்டிக் சமுத்திரம் போல் இயங்கி வருகிறது. ஐமாக், அனிமேஷன் திரைப்படங்கள், ஐபாட், ஐபேட்,
ஐபோன், ஐடியூன்ஸ் என தொட்டதெல்லாம் அமோக வெற்றி.
உண்மையிலேயே மிடாஸ் டச்தான்.

ஆப்பிள்-I மற்றும்
ஆப்பிள்-II
என மெல்ல
முன்னணி மேசைக்கணினி தயாரிக்கும் நிறுவனமாக வளர்ந்து வந்த ஆப்பிளிலிருந்து ஒரு
கட்டத்தில் ஜாப்ஸ் வெளியேற்றப்படுகிறார்.
பின்னர் நெக்ஸ்ட் என்ற கணினி தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்குகிறார். அதுவும் தோல்வியில் முடிகிறது. அவ்வளவுதான் ஜாப்ஸ்...! என டெக் உலகம்
தீர்மானித்திருந்த நிலையில் பிக்ஸார் என்ற அனிமேஷன் படம் தயாரிக்கும் நிறுவனத்தைத்
தொடங்கினார். அது தயாரித்து வெளியிட்ட Toy Story முதல் Ratatouille வரையான அனைத்துத்
திரைப்படங்களும் பாக்ஸ் ஆஃபிஸில் வசூலை வாரிக் குவித்தன. பாரம்பரியமான வால்ட் டிஸ்னியே பிக்சாரின் தொடர்
வெற்றிகளால் அதிர்ந்தது. பின்னர் இந்திய
ரூபாய் மதிப்பில் சுமார் 32,000 கோடிக்கு பிக்ஸாரை வால்ட் டிஸ்னிக்கு பெருத்த
லாபத்தில் விற்கிறார் ஜாப்ஸ்.
இதற்கிடையில் தன் முதல் குழந்தை போல் பாவித்த ஆப்பிள் நிறுவனம் சரியான
தலைமையில்லாமல் கிட்டத்தட்ட மூடும் நிலைக்குச் சென்றது. மீண்டும் பங்குதாரர்கள் ஜாப்ஸிடம் சரணடைகிறார்கள். வீறு கொண்டு எழுந்தது ஆப்பிள்! அதனால்தான்
அந்நிறுவனத்தின் சென்ற வருட கையிருப்புத் தொகை அமெரிக்காவின் பெரிய வங்கியான
பேங்க் ஆஃப் அமெரிக்காவின் இருப்புத் தொகையைவிட அதிகமாக உள்ளது. அதாவது சுமார் 15 இலட்சம் கோடி ரூபாய்கள்!

இந்நூலைப் படிக்கும் பொழுது ஜாப்ஸ் போன்ற மனிதனோடு குடும்பம், தொழில் என
ஒருவருமே சுமூக உறவோடு இருக்க முடியாது என துல்லியமாகத் தெரிகிறது. அவ்வளவு மூர்க்கத்தனம் உள்ளவர். இத்தனைக்கும் தன் வாழ்நாள் முழுவதும் சைவ உணவு
மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளார். தான்
நினைத்த வடிவம் வரவில்லையென்றால் அந்த இடத்திலேயே கடும் வசவுகள், பொருட்களைத்
தூக்கியெறிதல், தன்னையே நொந்து கொண்டு அனைவரது முன்பும் அழுவது என ஒரு சைக்கோ போல
நடந்துள்ளார். ஆனால் இவை எதையும்
பொருட்படுத்தாமல் அவருக்கு உறுதுணையாக ஓர் அருமையான தொழில்நுட்பக் குழு வாய்த்துள்ளது
பெரிய விஷயம்!
தனிப்பட்ட வாழ்க்கையிலும் சற்று இரக்கமில்லாதவராக இருந்துள்ளார். மூன்று பெண்களுக்கு மேல் தொடர்பு. அவர்களுக்குப் பிறந்த நான்கு வாரிசுகள் என
மனுஷன் சும்மா விளையாடியிருக்கார். கணையத்தில்
ஆரம்பித்த புற்றுநோய் கல்லீரல் மற்றும் உடலின் பிற பாகங்களில் பரவி கடந்த
05.10.2011 அன்று இவ்வுலகை விட்டு மறைந்தார் ஜாப்ஸ். பெரும் செல்வங்கள் சேர்ந்த நிலையிலும்
அமெரிக்காவின் பிற பணக்காரர்களைப் போல தனக்குப் பாதுகாப்பு அலுவலர்கள், வேலைக்காரர்கள்,
கார் ஓட்டுநர்கள் என ஒருவரையும் பணிக்கு வைக்காமல் கடைசிவரை எளிமையாக வாழ்ந்தார். ஒருமுறை பில்கேட்ஸ் தனது வீட்டிற்கு வந்த போது
ஜாப்ஸ் தானே சென்று குளிர்சாதனப் பெட்டியிலிருந்து குடிநீர் கொண்டு வந்து கொடுத்து
அதிர வைத்தார்.
இந்நூல் மிக மிக முக்கியமான ஒன்று.
ஏனெனில் தொழில்முனைவில் ஆர்வமுள்ளவர்கள், கல்லூரி மாணவர்கள், ஐ.டி
பணியாளர்கள் ஆகியோருக்கு மட்டுமல்ல... அனைத்துத் தரப்பினரும் படித்துப் பல
பாடங்களைக் கற்றுக் கொள்ள ஏராளமான விஷயங்கள் அடங்கிய பொக்கிஷம்! Don’t miss it ரகம் என்றால் அது மிகையல்ல!!
வால்டர் ஐசாக்ஸன் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஸ்டீவ் ஜாப்ஸ் உள்பட சுமார் 200
நபர்களுக்கும் மேல் பேட்டியெடுத்து சிறப்பாகத் தொகுத்து வெளியிட்டுள்ளார். ஆங்கிலத்தில் படித்தால் தாவு தீர்ந்துவிடும்
அளவிற்கு சிக்கலான இந்நூலை நல்ல வாய்ப்பாக உமா பாலு அற்புதமாக
மொழிபெயர்த்துள்ளார். கலைச்சொற்கள்,
சொல்லடைவு என முழுமையான வடிவில் சிறப்பாக வெளியிட்டுள்ளனர் அடையாளம்
பதிப்பகத்தார்.
வெளியீடு :- அடையாளம்
பக்கங்கள் :- 878
விலை :- ரூ.660