தமிழின் 100 சிறந்த நாவல்களில் ஒன்றாக எஸ்.ரா மற்றும் ஜெயமோகன் ஆகியோரால்
குறிப்பிடப்படும் சுஜாதாவின் ஒரே நாவல் ரத்தம் ஒரே நிறம். நீண்ட நாட்களாக வாங்கிப் படிக்க வேண்டும் என
நினைத்த இந்நாவல் அண்மையில் நடைபெற்ற ஈரோடு புத்தகத் திருவிழாவில் உயிர்மை
அரங்கில் கிடைக்கவில்லை. ஸ்டாக் முடிந்து
விட்டது என்றார்கள். ஒரு வழியாக ஆன்லைன்
புத்தகக் கடையிலிருந்து வாங்கிவிட்டேன்.
பல்வேறு பணிகளுக்கிடையே இரண்டு நாட்களில் முந்நூற்றி சொச்சம் பக்கங்கள் உள்ள
இந்த நாவலை ஒரே வீச்சில் படித்து முடித்து விட்டேன். இந்திய விடுதலைப் போர் வரலாற்றில் இன்றளவும்
தவறுதலாக முதல் இந்திய சுதந்திரப் போர் என குறிப்பிடப்படும் 1857-ல் நடைபெற்ற
சிப்பாய்க் கலகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நூல்.
கர்னல் நீல், ஆஷ்லி, மக்கின்சி, அவன் மனைவி எமிலி என ஆங்கிலேயத் தரப்பு ஒரு
புறம். முத்துக்குமரன், அவன் காதலி
பூஞ்சோலை, பைராகி சாமியார் மற்றும் சில சின்ன கதாபாத்திரங்கள் என தமிழர் தரப்பு
மறு புறம். இவர்களுக்கிடையே சிப்பாய்க்
கலகத்தை சான்ட்விச் போல திணித்து சுவையாக வழங்கியுள்ளார் சுஜாதா.
ஒரு எதிர்பாராத சந்தர்ப்பத்தில் முததுக்குமரனின் தந்தை ஆங்கிலேய ராணுவ அதிகாரி
மக்கின்சியால் கொல்லப்பட, அதற்குப் பழி தீர்க்கப் புறப்படும் முத்துக்குமரன்
மக்கின்சியைக் கொன்றானா? இல்லையா? என்ற கேள்விக்கான விடை தான் இந்நாவல். சுஜாதா தன் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளது
போல் நாவலில் குறிப்பிடப்படும் பல்வேறு சம்பவங்கள் உண்மையானவை. இதில் முத்துக்குமரன் என்கிற தமிழனின் கதையைக் கலந்தது
மட்டும் தான் சுஜாதாவின் கற்பனை.
![]() |
நானா சாகிப் |
இந்நாவலில் என்னை ஈர்த்த கதாபாத்திரம் பைராகி சாமியார் தான். செமி நாத்திகவாதியான சுஜாதா, இக்கதாபாத்திரத்தின்
மந்திர தந்திர வித்தைகளை பகடியுடனும் வெகு சுவாரஸ்யத்துடனும் எழுதியுள்ளார்.
இதில் ஆண் பெண் உடலுறவுக் காட்சிகள் அதிகம் வர்ணிக்கப்படுவது, சில இடங்களில்
மதராஸ் என்பதற்குப் பதிலாக கதாபாத்திரங்கள் சென்னை என பேசுவது உள்ளிட்ட சிலவற்றைத்
தவிர்த்துப் பார்த்தால், அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நாவல் என
சம்பிராதாயமாகக் கூறினாலும், இது வழக்கமான வரலாற்று நாவல் அல்ல. ஏனெனில், தமிழ்ப் படைப்புலகத்தின் ஆல் ரவுண்டரான சுஜாதாவின்
மொழிநடை வரலாற்றை விட வசீகரமானது. இந்நூலை
வேறு யார் எழுதினாலும் ஒரே வீச்சில் வாசிக்க இயலாது. அது தான் சுஜாதாவின் வெற்றி!
வெளியீடு :-
உயிர்மை
பக்கங்கள் :- 342
விலை :- 300/-