பிரபஞ்சன் 2008-2009 ஆண்டுகளில் எழுதிய 16 கட்டுரைகளின் தொகுப்பு
இந்நூல். குமுதம் வார இதழில்
பணியாற்றியது, சங்க இலக்கியம், புதுச்சேரி (பாண்டிச்சேரி என்பது தவறான வழக்கு
என்கிறார்) நினைவுகள், நூல் அறிமுகங்கள், மேன்ஷன் வாழ்க்கை, மதுப்பழக்கம், உலகத்
தமிழ் மாநாடு கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தனது தெள்ளிய நடையில்
விவரித்துள்ளார்.
குமுதம் அலுவலகத்தின் அன்றாடப் பணிகள் ஒரு குருகுலம் போல் பகவத் கீதை,
திருக்குறள் என தொடங்கி, வழிபாடு முடிந்த பின்னர்... இதழில் இடம்பெறப் போகும் சினிமா
நடிகைகளின் கவர்ச்சிப் படங்களைத் தேர்வு செய்வது என்ற முரண்பாட்டை நகைச்சுவை கலந்து பதிவு செய்துள்ளார்.
“மேன்ஷன் அறைகள், சவப்பெட்டி போன்றவை“ என்ற ஒற்றை வரியில்
மேன்ஷன்களின் சித்திரத்தை சுரீரென்று மனதில் பதிய வைக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு திருவல்லிக்கேணியில்
ஒரு மேன்ஷனில் ஒரு வார காலம் தங்கிய அனுபவம் உள்ளதால், அந்த அவஸ்தை எனக்கு நன்றாகப்
புரிந்தது.
![]() |
பிரபஞ்சனின் தங்கை மற்றும் தம்பி ஆகியோருடனான சிறு வயது விளையாட்டுகள்... ஒரு
கோடை விடுமுறையில் அவர்களிருவரும் அம்மை தாக்கி இறந்து போனது என மனதை உருக்கும்
“பானு உன் புத்தகப் பை அண்ணனிடம் இருக்கிறது” என்ற கட்டுரை
நெகிழ்ச்சியானது.
புதுச்சேரியின் மதுப்பழக்கம் பற்றிய கட்டுரையில், மதுவைக் குடிப்பதற்கும் அதை அருந்துவதற்கும் உள்ள
நுண்ணிய வேறுபாட்டை பிரெஞ்சுப் பண்பாட்டின் பின்னணியில் சுவையாக விளக்குகிறார். ஒரு முறை மராத்தியர்கள் ரகோஜி போஸ்லே தலைமையில் புதுச்சேரியை முற்றுகையிட்டு
யுத்தத்திற்கு அழைப்பு விடுக்க, அப்போது புதுச்சேரியின் கவர்னராக இருந்த துய்மா
என்பவன், மராத்தியத் தூதுவனிடம் “யுத்தத்திற்கு தயார்!” என பதில் கடிதம்
கொடுத்து, கூடவே பத்து ஐரோப்பிய மது பாட்டில்களையும் வைத்து அனுப்பி வைக்கிறான். அந்த மதுவை ரகோஜி தனது மனைவியுடன் பகிர, அதன்
சுவையில் மயங்கிய அவள் அனைத்து பாட்டில்களையும் குடித்து முடித்துவிட்டு, இன்னும்
வேண்டும் என்கிறாள். ரகோஜி, பேரழகியான
தனது மனைவியின் ஆசையை நிறைவேற்ற, எதிரியான துய்மாவிடம் யுத்தத்தை மறந்து, முப்பது
பாட்டில்களைக் கேட்டுப் பெற்றுக் கொண்டான்.
பிறகென்ன... யுத்தம் கைவிடப்பட்டது.
பிரபஞ்சன் இதை விவரித்துவிட்டு இறுதியில் எழுதுகிறார்... “யுத்தங்களை மனிதர்கள்
உருவாக்குகிறார்கள். பாட்டில்கள் தீர்த்து
வைக்கின்றன”. இதுதான் பிரபஞ்சன் டிரேட்மார்க். புதுச்சேரியின் கள்ளுக்கடைகள், பார்கள்
சுத்தமாகப் பராமரிக்கப்படுகின்றன... தமிழ்நாடு
போல கண்றாவியாக இருப்பதில்லை என்கிறார். ஆனால்,
தற்போது புதுச்சேரியும் தமிழ்நாட்டைப் போல் குடியால் சீரழிகிறது என நேர்மையாகக்
கட்டுரையை முடிக்கிறார். இக்கட்டுரையை
வாசிக்கும்பொழுது ஒரு தரமான ஒயினை மிடறு மிடறாக அனுபவித்துக் குடிப்பதைப் போன்ற
மகிழ்ச்சியைத் தருவதுதான் பிரபஞ்சனின் எழுத்தாற்றல்.
இந்தப் புத்தகத்தில் அதிர்ச்சி தரும் கட்டுரை, பாவை பப்ளிகேஷன் என்ற பதிப்பகம்
பிரபஞ்சனின் அனுமதியில்லாமல் அவரது நாடகம் உட்பட ஐந்து படைப்பாளிகளின் நாடகங்களை
அவர்களது அனுமதியில்லாமல் ஒரே தொகுப்பாக வெளியிட்டு விட்டது. அது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பதிப்பகம்! அப்பதிப்பகத்தின் கௌரவ தலைவரின் தலைமையில் ராயல்டிக்காகக்
கிட்டத்தட்ட கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது... பிரபஞ்சன் அந்தத் தலைவரை நோக்கிக்
கடுமையாகப் பேசுகிறார். ஆனால், அவரோ
பதிப்பகத்தாருக்கு சாதகமாகப் பேசுகிறார்.
சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பின்பு, விருப்பமே இல்லாமல்
ராயல்டி வழங்கப்படுகிறது. அந்தத் தலைவர்
வேறு யாருமல்ல... நேர்மையின் உருவமாகக் கருதப்படும் நல்லகண்ணு! அவரின் பிம்பத்தில் விழுந்த மிகப்பெரிய ஓட்டை!!
வெளியீடு :- உயிர்மை
பக்கங்கள் :- 143
விலை :- ரூ.85/-